For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐரோப்பிய ஒன்றிய தீவிரவாத இயக்க பட்டியலில் இருந்து விடுதலை புலிகள் பெயர் நீக்கம்.. ஸ்டாலின் வரவேற்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலை புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட்டுள்ளதற்கு திமுக வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கியிருப்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன். 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றமே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது உலகத் தமிழர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருப்பது மட்டுமின்றி, இந்த தடை நீக்கம் ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை என்றே கருதுகிறேன்.

DMK welcome the decision of the European Union to remove LTTE from the list of terror organizations

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை தொடர்ந்து முடக்கி வரும் இலங்கை அரசு இந்த தடை நீக்கத்தின் நோக்கத்தை உணர்ந்து ஈழத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு, சிங்களர்களுக்கு இணையாக சம உரிமை மற்றும் கண்ணியத்துடன் தமிழர்கள் வாழ்வதற்குத் தேவையான உறுதியான நடவடிக்கைகளை இனிமேலும் காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும். போரின் போது காணாமல் போன தமிழர்களை அடையாளம் காணுவது, தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இலங்கை ராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றி அந்த நிலங்களை தமிழர்களிடம் திருப்பி ஒப்படைப்பது, மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது, இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிப்பது, ஈழத்தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை வழங்குவது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இலங்கை அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

ஐரோப்பிய யூனியனே தடையை நீக்கியிருக்கின்ற நிலையில் ஈழத் தமிழர்களுக்கான உரிமைகள் கிடைப்பதற்கு மத்திய அரசு உரிய அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும், ஐரோப்பிய யூனியன் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் நல்லெண்ணத்தை முன்னெடுத்துச் சென்று ஈழத் தமிழர்கள் வாழ்வை சூழ்ந்துள்ள காரிருளை நீக்க மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் நியாயமான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஈழத் தமிழர்கள் விரும்பும் நிரந்தரமான அரசியல் தீர்வு காண்பதற்கு தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
I welcome the decision of the European Union to remove LTTE from the list of terror organizations. It is a moment of elation as EU’s highest court has removed LTTE from this list and I view this act as an important turning point in the long struggle to secure the rights of Eelam Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X