For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை: வழுக்கை தலையை மறைக்க 'ஹேர் டிரான்ஸ்பிளான்ட்' செய்த டாக்டர் மரணம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தலையில் இருந்து லேசாக முடி உதிர்ந்தாலே சோகத்தில் உட்கார்ந்து விடுகின்றனர் இளைஞர்கள். இதற்காக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். சென்னையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் தலையில் விழுந்த வழுக்கையை மறைக்க ஹேர் டிரான்ஸ்பிளான்ட்' எனப்படும், முடி மாற்றும் சிகிச்சை செய்து கொண்டதால் அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணமான, சென்னையில் உள்ள, ஏ.ஆர்.ஹெச்.டி. என்ற அழகு மையத்தை இழுத்து மூடிய அரசு, மருத்துவக் கவுன்சில் மூலமாக, விதிகளுக்கு முரணாக செயல்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளையும் முடுக்கி விட்டுள்ளது.

Doctor dies a day after hair transplant

மனிதனை அழகாக காட்டுவதில் தலைமுடிக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால், இன்றைய சூழ்நிலையில் பல்வேறு காரணங்களால் இளம் வயதிலேயே தலைமுடி கொட்டி வழுக்கை தலையுடன் வலம் வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். முடி கொட்டுவதை சிலர் இயல்பாக எடுத்துக்கொண்டாலும், சிலர் சோகத்தில் ஆழ்ந்து விடுகின்றனர்.

இத்தகையவர்களை குறி வைக்கும் சில அழகு நிலையங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து வழுக்கை தலைக்கு சொந்தகாரர்களை கவருகின்றன. தொலைக்காட்சிகளிலும் வழுக்கை தலையில் முடி வளரச்செய்யும் எண்ணெய் விளம்பரங்களும் அதிக அளவில் ஒளிபரப்பாகின்றன.

இதனால் ஏமாந்தவர்கள் பலர். அதை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பவர்களும் உண்டு. பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்ந்த வேலூர் மாவட்டம், ஆரணியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார், முடி வளர ஆசைப்பட்டு உயிரையே விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முடிமாற்று அறுவை சிகிச்சை

இதய மாற்று சிகிச்சை போல், ஹேர் டிரான்ஸ்பிளான்ட் எனப்படும் முடி மாற்று சிகிச்சையும், சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது. இதற்காக, பிரபலமான மருத்துவமனைகளில் மட்டுமே, 'காஸ்மெட்டிக்' பிரிவு செயல்பட்டு வந்தது. தற்போது, சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமின்றி சிறு நகரங்கள் வரை, பல நிறுவனங்கள் நவீன, 'பியூட்டி பார்லர்'களாக, இந்த மையங்களை துவங்கிவிட்டன. இந்த மையத்தை நம்பி முடி மாற்று சிகிச்சை செய்த பயிற்சி டாக்டர் சந்தோஷ்குமார்தான் அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்து விட்டார்.

வேலூர் மாவட்டம், ஆரணி, எஸ்.வி.நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 22. எம்பிபிஎஸ் முடித்து விட்டு, சென்னை மருத்துவக் கல்லுாரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். முடி கொட்டவே, வழுக்கை தலை, தன் அழகை குறைப்பதாக கருதிய அவருக்கு, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, 'அட்வான்ஸ் ரொபாடிக் ஹேர் டிரான்ஸ்பிளான்ட் - குளோபல்' என்ற மையத்தின் விளம்பரத்தை பார்த்து அங்கு சென்றார். அங்குள்ளவர்கள், சந்தோஷ்குமாரிடம் பேசி, உங்களுக்கு தலையில் முடியை நட்டி பழையபடி மாற்றி விடுகிறோம்' என்று அங்குள்ளவர்கள் உறுதி அளித்துள்ளனர். அதன்படி கடந்த மே மாதம் சந்தோஷ்குமார் அங்கு சென்றார்.

முடி நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தலையில் ஊசி மூலம் முடிகளை நடும் போது வலியை பொறுத்துக் கொள்ள டாக்டர் ஹரிபிரசாத், சந்தோஷ்குமாருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். காலையிலிருந்து மாலை வரை முடி நடும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையை டாக்டர் வினித் செய்துள்ளார். சிகிச்சை முடிந்த உடன் சந்தோஷ் குமாருக்கு தலைசுற்றல், வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற அவர், சொந்த ஊரான ஆரணி சென்றார். அடுத்த நாள், உடல்நிலை மிக மோசமானதால், வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து, அவரது பெற்றோர், உடனே போலீசில் புகார் செய்யவில்லை.இறந்தது பயிற்சி மருத்துவர் என்பதால் இந்த விவகாரம், மருத்துவக் கல்வி இயக்ககம் வழியாக, சுகாதாரத் துறைக்கு சென்றது. சுகாதாரத் துறை நடவடிக்கையால், அந்த அழகுக்கலை மையம் இழுத்து மூடப்பட்டுள்ளது.

மருத்துவ சேவை பணிகள் இயக்குனரகம் அளித்த புகாரில், ஜூன், 2ம் தேதி மாலை, ஏ.ஆர்.ஹெச்.டி. மையத்திற்கு, மாநகராட்சி, 'சீல்' வைத்துள்ளது. இது குறித்த அறிவிப்பும் அந்த மையத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

தாயார் ஜோசபின் கண்ணீர்

தவமிருந்து பெற்ற மகன் சந்தோஷ்குமாரின் மரணம் அவரது தாய் ஜோஸ்பினை நிலை குலையச் செய்துள்ளது. நடந்த சம்பவம் பற்றி கூறும் ஜோசபின், முடி மாற்றும் சிகிச்சை முடிந்து சிறிது நேரத்தில் காய்ச்சல், நடுக்கம் ஏற்பட்டது. சிகிச்சை அளித்த டாக்டர்களே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

திடீரென, அவர்களாகவே ஓவர் டோஸ் வேண்டாம் என்றேன்; கேட்காமல் அந்த டாக்டர் அதிகம் கொடுத்துவிட்டார் என, பேசிக் கொண்டனர். ஒரு, டிரிப்ஸ் போட்டனர். என் மகன், திடீரென வாந்தி எடுத்தான். 'இதற்கு மேல் சிகிச்சை என்றால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 10 ஆயிரம் ரூபாயாகும்; போகும் வழியில் அவசர கிளினிக்கில் பார்த்துக் கொள்ளுங்கள்' எனக்கூறி, காரில் ஏற்றி அனுப்பி விட்டனர்.

என் மகனுக்கு அடிக்கடி வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இடுப்புக்கு கீழ் மரத்துவிட்டது. மறுநாள் காலை, வேலுார் சி.எம்.சி.,யில் சேர்த்தோம். போகும் வழியிலேயே அவனுக்கு சுயநினைவு போனது. கை நிறமும், நீல கலரில் மாறியது, மூச்சு விட முடியவில்லை. மருத்துவமனையில் சேர்த்த, அரை மணி நேரத்தில் அவன் இறந்துவிட்டான்.

ஐந்து ஆண்டுகள் தவமிருந்த பெற்ற தெய்வ குழந்தை அவன். அதிகம் மயக்க மருந்து கொடுத்ததும், சரியான சிகிச்சை அளிக்காததுமே இதற்கு காரணம். என் மகனுக்கு நேர்ந்த கொடுமை, வேறு யாருக்கும் வரக்கூடாது. அரசு சரியான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

பிரேத பரிசோதனை

மகனின் மரணத்திற்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தான் காரணம்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவரது தாய் ஜோஸ்பின், சென்னை, நுங்கம்பாக்கம் போலீசில், 4ம் தேதி புகார்அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிந்துள்ள போலீசார், திருச்சியில் புதைக்கப்பட்ட சந்தோஷ்குமாரின் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

இதனிடையே உரிய பயிற்சி இன்றி முடி மாற்றும் சிகிச்சை, மச்சம் அகற்றுதல், முக சுருக்கத்தை அகற்றுகிறோம் என சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் எச்சரித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் செந்தில், முடி மாற்றும் அறுவை சிகிச்சைகளை பிளாஸ்டிக் சர்ஜரி, டெர்மட்டாலஜி படித்த டாக்டர்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும். சர்ச்சைக்குரிய மையத்தில், எம்பிபிஎஸ் மட்டுமே படித்த டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இவர்கள், பயிற்சி பெற்றதாக கூறப்பட்டாலும் மருத்துவக் கவுன்சில் அங்கீகரிக்கவில்லை, அதற்கான பதிவும் இல்லை.

மயக்க மருந்து கொடுத்த டாக்டர், சிகிச்சை முடியும் வரை அங்கு இல்லாமல் சிறிது நேரத்தில் சென்றுவிட்டார்; மற்றொரு டாக்டர் சிகிச்சை அளித்துள்ளார். முறையான பயிற்சி இன்றி சிகிச்சை அளித்தது, மயக்கம் மருந்து கொடுத்து சிகிச்சை முடியும் வரை டாக்டர் அங்கு இல்லாதது, பியூட்டி பார்லரில் சிகிச்சை அளித்து என, பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

இறப்புக்கு இந்த சிகிச்சை முறையே காரணம் என, குற்றச்சாட்டு உள்ளது. தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் விதிமுறை மீறி செயல்பட்டதாக, இரண்டு டாக்டர்களுக்கும், 'நோட்டீஸ்' தரப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை துவங்கி உள்ளது.அவர்கள் பதில் அளித்த பின், விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பியூட்டி பார்லர்கள் போல் வைத்து கொண்டு, கண் சுருக்கத்தை போக்குகிறோம், மச்சத்தை அகற்றுகிறோம் என, பயிற்சியின்றி மயக்க மருந்து கொடுப்பது சட்டப்படி குற்றம். இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது டாக்டர்களாக இல்லாமல் தனிநபராக இருந்தாலும், மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுக்கும். போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கவும் வழிவகை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு அவசியம்

இந்தியாவிலேயே, அரசு மருத்துவமனையில், 'காஸ்மெட்டலாஜி' என்ற அழகு கலைக்கென பிரத்யேக துறை, சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டுமே உள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், மூன்று ஆண்டுகளில், 250 பேருக்கு, இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தலையில் செயற்கையாக முடி நடுவது ஆபத்தை விளைவிக்கும் என்றும், சிகிச்சைக்கு முன், ஒரு முடியை நட்டு, பாதிப்பு குறித்து நன்கு ஆராய்ந்த பிறகே, அடுத்து முழுமையாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் 11 நிலையங்கள்

இது போன்ற முடி மாற்று சிகிச்சை அளிக்க, 'பிளாஸ்டிக் சர்ஜரி' மற்றும், 'காஸ்மெடிக்' பயிற்சி முடித்திருக்க வேண்டும். ஆனால், இங்கு சிகிச்சை அளித்தவர்கள் எம்பிபிஎஸ் மட்டுமே முடித்துள்ளனர். சர்ச்சையில் சிக்கியுள்ள ஏ.ஆர்.ஹெச்.டி மையம், மஹாராஷ்டிர மாநிலம், புனேவை தலைமையிடமாக கொண்டுள்ளது. இந்தியாவில், 11 மையங்கள் உள்ளன.

தமிழகத்தில், சென்னையில் மட்டும் தான் மையம் உள்ளது. கோவையில், விரைவில் துவங்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மையம், எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்களுக்கு, 10 நாள் பயிற்சி கொடுத்து, மையங்களில் வேலைக்கு வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இது போன்று, சென்னையில், 45 மையங்கள்; பிற நகரங்களில், 10 என, 55 மையங்கள் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

உயிரோடு விளையாடுவதா

பண சம்பாதிக்கும் ஆசையில் மக்களின் உயிரோடு விளையாடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக அழகு நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் முறைகேடாக நடக்கின்றன. கடந்த ஆண்டு இளம்பெண் ஒருவர் உடலை ஒல்லியாக்கும் சிகிச்சை செய்து கொண்ட போது ஒவ்வாமை ஏற்பட்டு படுத்த படுக்கையாக கிடந்து உயிரிழந்தார்.

அந்த சோகம் மறைவதற்குள் பயிற்சி மருத்துவர் ஒருவரே வழுக்கையை மறைக்க எடுத்த சிகிச்சை ஒத்துக்கொள்ளாமல் உயிரிழந்துள்ளார். சரியான மருத்துவ உபகரணங்கள், டாக்டர்கள் வசதி இல்லாமல் இந்த மாதிரி சிகிச்சை அளிப்பது குற்றமாகும். உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மக்கள் விழிப்பு உணர்வாக இருக்க வேண்டும். அழகுக்கு ஆசைப்பட்டு உயிரை இழப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

English summary
A final-year medical student from the Madras Medical College died a day after undergoing a hair transplant procedure at a salon in Nungambakkam more than a fortnight ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X