For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேலாண்மை வாரியத்திற்கு மறுப்பு… மத்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்திருக்கும் மத்திய
அரசின் செயலலை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பாமக நிறுவனர்
டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை நாளைக்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்த நிலையில், வாரியத்தை அமைக்க முடியாது என்றும், அதுதொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இம்முடிவு கண்டிக்கத்தக்கது.

Dr. Ramadoss condemns Central’s standing on CMB

பல ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி பிரச்னை குறித்து 1990 முதல் 17 ஆண்டுகள் விசாரித்த காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதித் தீர்ப்பை 05.02.2007 அன்று தீர்ப்பளித்தது. அதை செயல்படுத்தும் அமைப்பான காவிரி மேலாண்மை வாரியம் இறுதித் தீர்ப்பு வெளியான 90 நாட்களுக்குள் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன்பின் 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அவ்வாரியத்தை அமைப்பதற்காக இன்னும் போராட வேண்டியிருப்பது, இந்திய அரசியலின் மிகப்பெரிய சாபக்கேடாகும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கடந்த 10 ஆண்டுகளாக எந்த சக்திகள் முட்டுக்கட்டை போட்டனவோ, எந்த அரசியல் சதி தடையாக இருந்ததோ அதே சக்திகளும், அரசியல் சதியும் தான் இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் காரணமாகும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் விசாரணையில் இருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆணையிட முடியாது; நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை அமைக்க முடியாது ஆகியவை தான் மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருப்பதற்காக மத்திய அரசு முன் வைத்துள்ள காரணங்கள் ஆகும்.

இந்த இரு காரணங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பைத் தான் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்ய முடியாதே தவிர, ஒரு வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் விசாரணையில் இருக்கிறது என்பதற்காக அதுதொடர்பான மற்ற வழக்குகளில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளிக்கக் கூடாது என்றோ, அவ்வாறு தீர்ப்பளித்தால் அது செல்லாது என்றோ எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை. இதேபோன்ற சூழலில், எண்ணற்ற வழக்குகளை விசாரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தற்கும், அவை செயல்படுத்தப்பட்டிருப்பதற்கும் ஏராளமான உதாரணங்களைக் கூற முடியும்.

அதேபோல், நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்ற மத்திய அரசின் வாதத்தையும் ஏற்க முடியாது. ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இருந்து தண்ணீர் வினியோகம், மின்சார வினியோகம் ஆகியவற்றை கவனித்துக் கொள்ளும் மிகப்பெரிய அமைப்பு பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் ஆகும். இந்த வாரியத்தை அமைக்க நாடாளுமன்றத்தில் எந்த ஒப்புதலும் பெறப்படவில்லை; இதற்காக எந்த சட்டத் திருத்தமும் செய்யப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மட்டும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறுவது விந்தையாக உள்ளது.

ஒருவேளை நாடாளுமன்ற ஒப்புதல் தேவை என்றால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த சில நாட்களிலேயே நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டி ஒப்புதல் பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை. இல்லாத சிக்கலை இருப்பதாகக் கூறி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகம் என்பதைத் தவிர வேறில்லை.

காவிரி பிரச்னை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான அமர்வு, அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கடந்த 27-ஆம் தேதி ஆணையிட்டது. அப்போது மத்திய அரசின் சார்பில் வாதாடிய இந்திய தலைமை வழக்கறிஞர் முகுல் ரோகத்கி,'' காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. எந்த
தடையும் இல்லை'' என்று கூறினார்.

மத்திய நீர்வளத்துறை செயலாளர் கடந்த 29-ஆம் தேதி தில்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் பணிகள் தொடங்கி விட்டன என்று கூறியிருந்தார். அதன்பின் 4 நாட்கள் கூட ஆகாத நிலையில், இப்போது மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இது சற்றும் சரியல்ல.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்பது தான் உண்மை. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றுத் தான் மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் என்று கூறும் மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் அதை செய்யாதது ஏன்? காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், வாரியத்தை அமைக்க நீதிமன்றம் ஒருபோதும் தடை விதிக்கவில்லை எனும் போது மத்திய அரசுக்கு
உண்மையான அக்கறை இருந்தால் மேலாண்மை வாரியத்தை எப்போதோ அமைத்திருந்திருக்கலாம்.

ஆனால், அப்போதெல்லாம் அதை மத்திய அரசு செய்யவில்லை. மாறாக இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி தட்டிக்கழித்தது. இப்போது உச்ச நீதிமன்றம்
ஆணையிட்டவுடன் உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறுவது மிகப்பெரிய ஏமாற்று வேலை; மோசடி ஆகும்.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ள காரணங்கள் அனைத்தும் கர்நாடக அரசால் முன்வைக்கப்பட்டவை தான். கர்நாடகத்தில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், அதில் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காகவே
அம்மாநிலத்திற்கு ஆதரவாக செயல்பட்டு, தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது. இந்த துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மத்திய அரசுக்கு கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கையும், தமிழக மக்கள் நலனில் அக்கறையும் இருந்தால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை நாளைக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும். காவிரி சிக்கலில் தமிழக
அரசு கடைபிடித்து வந்த அலட்சிய அணுகுமுறை தான் இதற்கு காரணமாகும். இப்பிரச்னையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK leader Doctor Ramadoss condemned Central government standing on Cauvery Management Board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X