For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் ஆணையம் குரைக்கும் நாயாக இல்லாமல் கடிக்கிற நாயாக இருக்க வேண்டும்: ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

EC should be like a biting dog: Says Dr. Ramadoss
சென்னை: ஓட்டுக்கு பணம் தரும் விசயத்தில் தேர்தல் ஆணையம் குரைக்கிற நாயாக இல்லாமல், கடிக்கிற நாயாகவும் இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தேசிய வாக்காளர்கள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. வாக்காளர்களுக்கு இந்திய ஜனநாயகம் வழங்கியுள்ள உரிமைகளை இந்த நாளில் நினைத்து பெருமிதப்படும் நேரத்தில், அந்த உரிமைகள் ஐநூறுக்கும், ஆயிரத்திற்கும் விலைபேசி விற்கப்படுவதை பார்க்கும் போது அவமானத்தில் தலைகுனிய வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளில் குடியுரிமைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமானது வாக்குரிமை ஆகும். நம்மை ஆட்சி செய்யும் நல்ல அரசை தேர்வு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள விலை மதிப்பற்ற அந்த உரிமையை பணத்திற்காக விற்பது நமது எதிர்காலத்தையும், குழந்தைகளையும் விற்பதற்கு சமமாகும். வாக்களிக்க பணம் வாங்குவது தான் ஊழலின் ஊற்றுக்கண் ஆகும்.

வாக்குக்காக பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகள் கொடுத்த பணத்தை ஒன்றுக்கு பத்தாக எடுக்கத் துடிக்கும்போது தான் ஊழல் தொடங்குகிறது. வாக்காளர்கள் வாக்களிக்க பணம் வாங்கிவிடுவதால், ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக்கேட்கும் உரிமையை இழந்து விடுகிறார்கள். அது மட்டுமின்றி அரசின் அடிப்படை சேவைகளை பெறுவதற்குக் கூட லஞ்சம் தர வேண்டியிருப்பதால், வாக்களிக்க ரூ.500 வாங்கும் ஒருவர் அடுத்த 5 ஆண்டுகளில் ஐந்தாயிரத்தை லஞ்சமாக தர வேண்டியிருக்கிறது. எனவே ஊழலை ஒழிக்க வேண்டும் என விரும்புவோர் ஓட்டுக்கு பணம் பெறுவதை நிறுத்த வேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இந்தியாவில் ஓட்டுக்கு பணம் தருவதில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தலின்போது வாக்காளர்களுக்கு தருவதற்காக கொண்டு செல்லப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத பணம் ரூ.50 கோடியில் ரூ.43 கோடி அதாவது 86 சதவீத பணம் தமிழ்நாட்டில் பிடிபட்டது என்பதிலிருந்தே ஓட்டுக்கு பணம் தரும் கலாச்சாரம் தமிழகத்தில் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது என்பதை உணரலாம்.

தமிழகத்தில் உள்ள ஏழை மக்களில் 78 விழுக்காட்டினரிடம் ஓட்டு விலைக்கு வாங்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. திருமங்கலம் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ.5000 பணம் செய்தித்தாளில் வைத்து வழங்கப்பட்ட உண்மை அமெரிக்கா வரை பரவி விக்கிலீக்சில் வெளியாகி உலகம் முழுவதும் நமக்கு அவப்பெயரை பெற்றுத் தந்தது.

இவ்வளவுக்குப் பிறகும் ஓட்டுக்கு பணம் தருவதை தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் நிறுத்துவதாக தெரியவில்லை. வாக்காளர்களுக்கு முதல்கட்டமாக (Advance) அரசு செலவில் தொலைக்காட்சி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு, மாடு, ஆண்டுக்கு ஒருமுறை அரிசி, சர்க்கரையுடன் ரூ.100 ஆகியவற்றை வாரி வழங்கும் கட்சிகள் தேர்தலின்போது தாங்கள் கொள்ளையடித்து வைத்துள்ள பணத்தில் ரூ.1000, ரூ.2000 கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்குகிறார்கள். ஓட்டுக்கு பணம் தருவதும், பெறுவதும் அரசியல் புற்று நோயாக பரவி வருகிறது; இது தமிழகத்தின் அவமானச் சின்னமாகும். இந்நிலையை மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர, அவசியமாகும்.

ஓட்டுக்கு பணம் தரப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் சில நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், எந்த பயனும் ஏற்படவில்லை. ஓட்டுக்கு பணம் தருவதும், பெறுவதும் தண்டனைக்குரிய குற்றம் என ஆணையம் அறிவித்திருக்கிறது. இதற்கான சட்டங்களின்படி பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. இந்த விசயத்தில் நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் சோளக்கொல்லை பொம்மையாகவே தேர்தல் ஆணையம் உள்ளது. ஓட்டுக்கு பணம் தரும் விசயத்தில் தேர்தல் ஆணையம் குரைக்கிற நாயாக இல்லாமல், கடிக்கிற நாயாகவும் இருக்க வேண்டும்.

வாக்களிக்க பணம் தருவது தேர்தலில் சம வாய்ப்பை குலைப்பதுடன், ஊழல்வாதிகள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையை ஏற்படுத்திவிடும். இந்த நிலையை மாற்ற மக்களால் மட்டுமே முடியும். இதற்காக, வரும் மக்களவைத் தேர்தலிலும், இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் ஓட்டுக்காக ஒரு ரூபாய் கூட வாங்கக் கூடாது என்று தேசிய வாக்காளர் தினத்தில் அனைத்து வாக்காளர்களும் உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss told that election commission should be like a biting dog instead of a barking dog in cash for vote issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X