For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது: இளங்கோவன், திருமா கண்டனம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கான திட்டங்கள் எதும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக இளங்கோவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாடாளுமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசு சமர்ப்பித்துள்ள ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணம் உயர்த்தப்படாத அதே நேரத்தில் புதிய ரயில்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

EVKS Ilangovan and Thirumavalvan condemned to Railway Budget 2016.

குறிப்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சென்னை - மகாபலிபுரம் - புதுச்சேரி - கடலூர் மார்க்கத்தில் புதிய ரயில் திட்டம் தொடங்குவதற்கான ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல விருதுநகர் - கொல்லம் ரயில் பாதையை அகலப்பாதையாக மாற்றுவதற்கும் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. மதுரை - போடி ரயில் பாதை, விழுப்புரம் - மதுரை இரட்டை வழிப்பாதை அமைத்து மின்மயமாக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

தமிழகத்தில் பெரிய நகரங்களையொட்டி சிறுசிறு நகரங்கள் உருவாகி வருகின்றன. இந்த பகுதிகளில் மக்கள் அதிகளவில் குடியேறி வருகிறார்கள். பெரிய நகரங்களோடு இத்தகைய சிறிய நகரங்களை இணைக்க மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக உள்ளது. இக்கோரிக்கையை பரிசீலிக்கக் கூட மத்திய ரயில்வே அமைச்சகம் தயாராக இல்லை.

இந்நிலையில் சென்னை - அரக்கோணம் - செங்கற்பட்டு நகரத்தை இணைக்கும் வட்ட ரயில்பாதை அமைப்பது குறித்து ஏற்கனவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வழிப்பாதையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் ரயில்வே அமைச்சரின் உரையில் இல்லை.

தமிழக ரயில் திட்டங்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு சமர்ப்பித்துள்ள பட்ஜெட் மூலமாக தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதையே காட்டுகிறது என்றார் இளங்கோவன்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாடளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட இரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாடு தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. வழக்கம் போலவே தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தியாவை முன்னேற்றி விடுவோம் என்ற விளம்பரத்தோடு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. எல்லாத் துறைகளிலும் பின்னடைவைத்தான் ஏற்படுத்தி வருகிறது. இன்று சமர்ப்பிக்கப்பட்ட இரயில்வே பட்ஜெட்டிலும் அதைத்தான் பார்க்கிறோம். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையே இந்த ஆண்டிலும் அறிவித்து ஏமாற்ற முயற்சித்திருக்கிறார்கள்.

எல்.ஐ.சி.யில் ஒன்றரை இலட்சம் கோடி கடன் வாங்குவோம் என்று கடந்த ஆண்டு சொன்னார்கள். இந்த ஆண்டிலும் அதையே கூறியிருக்கிறார்கள். மகளிரின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதாக இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் கூறப்பட்டுள்ளது. இரயிலில் எஃப்.எம். ரேடியோ கொண்டுவரப்படும் என்பது போன்ற உப்புச் சப்பற்ற அறிவிப்புகளைத் தவிர உருப்படியான அறிவிப்பு எதுவும் இல்லை.

சென்னை - டெல்லி வர்த்தகத் தடம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு ஒப்பீட்டளவில் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் அது நடைமுறைக்கு எப்போது வரும் என்று குறிப்பிடவில்லை. இந்திய இரயில்வே துறைதான் பல்லாயிரக் கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளது. கையினால் மட்டும் துப்புரவு செய்யும் வழக்கம் ஒழிக்கப்பட்டு அதற்கெனச் சட்டம் இயற்றப்பட்டாலும் இரயில்வே துறையில் மட்டும் அந்த வழக்கம் நீடித்து வருகிறது.

அதை முடிவுக்குக் கொண்டுவர 'பயோ- டாய்லெட்'டுகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மிகக் குறைந்த அளவில்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இரயில்வே துறையின் இந்த அணுகுமுறை சட்டவிரோதமானது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். உடனடியாக அனைத்து இரயில்களிலும், இரயில் நிலையங்களிலும் 'பயோ-டாய்லெட்'டுகளை உருவாக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

நாடாளுமன்றத்தில் 37 உறுப்பினர்களை வைத்திருந்தபோதிலும் தமிழ்நாட்டுக்கான திட்டங்களை வலியுறுத்திக் கேட்டுப் பெறாதது அதிமுகவின் இயலாமையையே காட்டுகிறது. பயணக் கட்டணம் இந்த பட்ஜெட்டில் உயர்த்தப்படவில்லை என்று அறிவித்துள்ளனர்.

பட்ஜெட்டுக்கு முன்னும் பின்னும் கட்டணங்களை விருப்பம்போல பா.ஜ.க. அரசு உயர்த்துகிற காரணத்தால் இப்போது கட்டண உயர்வு இல்லை என்ற அறிவிப்பை வரவேற்க முடியவில்லை. ஒட்டுமொத்தத்தில், தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்துள்ள இந்த இரயில்வே பட்ஜெட் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்டுகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

English summary
Tamilnadu congress party leader EVKS Ilangovan and Vck chief Thirumavalvan strongly condemned to Railway Budget 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X