For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்.வி.சேகர் ஏன் கைது செய்யப்படவில்லை? பெண் பத்திரிகையாளர்கள் கண்டனம்

பெண் பத்திரிகையாளர்கள் எஸ்.வி.சேகருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: இப்படி ஒரு வாழ்க்கை தேவையா என்ற சலிப்புகள் நாடி நரம்பெல்லாம் பரவி.. பிறந்த பலனெல்லாம் கண்ணீராய் வழிந்தபடி... அலுவலக வாழ்க்கையில் பெண்களின் வலி தினம் தினம் புரட்டி எடுத்து போடுகிறது. இதில் எத்தனையோ உயிர்ப்பான தருணங்களை இழந்து அந்த வலிகளையும் வலிமைகளாக்கி முட்டி மோதி போராடி கொண்டிருக்கிறாள் பணிக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணும்.

ஆனால், மனதில் பெண்களை பற்றியான என்ன மாதிரியான ஒரு புரிதல் இருந்தால் எஸ்.வி.சேகர், "ஒரு பெண் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்றால் முக்கிய நபர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளவேண்டும்" என்று கருத்துக்கு உடன்பட்டிருப்பார். வேலைக்கு போகும் பெண்கள் என்றாலே இப்படித்தான், பதவி உயர்வுக்காக இப்படித்தான் செயல்படுவார்கள் என்ற தவறான புரிதலே இது போன்ற கேடு கெட்ட எண்ணத்தை எஸ்.வி.சேகரிடமிருந்து மனதில் துளிர்த்து வாய்மொழியாக உதிர்க்க வைத்துள்ளது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் அவரை கைது செய்ய எந்தவித தடையும் இல்லை என்று சொல்லியும் போலீசாரின் துணையுடன் அவர் சென்னையை வலம் வந்துகொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

பொங்கும் கடமை உணர்ச்சிகள்

பொங்கும் கடமை உணர்ச்சிகள்

ஸ்காட்லாண்டு போலீசுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டு போலீஸ்காரர்கள் திறமைசாலிகள் என்று சொல்வார்கள். ஆனால், மன்சூர் அலிகானை நினைத்த உடன் கைது செய்து சிறையில் அடைத்தார்களே அப்போதுதான் அது வெளிப்பட்டது. சென்னை தி.நகரில் ஒரு இளைஞனை தன் தாயின் கண் முன்னே அடித்து சிறையில் அடைக்கும்போதும் வெளிப்பட்டது. அவ்வளவு ஏன்? தமிழிசை சௌந்தரராஜன் குறித்து பேஸ்புக்கில் அவதூறாக வீடியோ வெளியிட்டது தொடர்பாக திருச்சி பெண் சூர்யாதேவி கைது செய்யப்பட்டாரே அப்போது வெளிப்பட்டது. தமிழக போலீஸாரின் கடமை உணர்வுகள் எல்லையின்றி பயணித்து கொண்டிருக்கிறது. ஆனால் சட்டம் ஒழுங்கு அடித்தட்டு மக்களுக்குதான் பொருந்தி போய் கொண்டிருக்கிறது என்பது விசித்திர, வேதனையான உண்மை.

தைரியத்தை கொடுத்தது யார்?

தைரியத்தை கொடுத்தது யார்?

பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு கருத்து சொல்ல எஸ்.வி.சேகர் யார்? அவருக்கு இந்த தைரியத்தை கொடுத்தது யார்? கருத்து சுதந்திரம் என்ற பெயரில் போகிற போக்கில் என்னத்தையாவது உளறி கொட்டி போவதா? இப்படி அவதூறு கூறியவர்கள் மீது கட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? பத்திரிகை உலகில் ஆண்களும், பெண்களும் இன்றும் சகோதர பாசத்துடன் பழகி வருகிறார்கள். உணர்வுகள், உறவுகளுடனான நீண்ட நெடிய பயணம் பெண் மற்றும் ஆண் பத்திரிகையாளர்களிடையே நிலவி வருவது மனசாட்சியுள்ளவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

இந்த சலசலப்புக்கு அஞ்சமாட்டோம்

இந்த சலசலப்புக்கு அஞ்சமாட்டோம்

பொதுவாக பெண்களுக்கு இரவு நேர பணி இருப்பதில்லை, அப்படியே இருந்தாலும் பாதுகாப்பு என்னும் கவசத்துடனே பெண் பத்திரிகையாளர்கள் பங்களித்து வருகிறார்கள். வெறும் பணி என்பதையும் தாண்டி உடன் பணிபுரியும் ஆண் பத்திரிகையாளர்களிடம் பாசத்தை வெளிப்படுத்தி வருவதை விஷமத்தனம் நிறைந்தவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. பிரதமரை தன் குடும்பத்தினருடன் சந்திக்கும் வீடியோவை தற்போது வெளியிட்டிருக்கும் நரித்தனம் நிறைந்தவர்களுக்கு இதை தெளிவுபடுத்துவது கடினம்தான். இது பத்திரிகை உலகம். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சும் துறை பத்திரிகை துறை இல்லை. பெண்களுக்கு எதிரான கடுஞ்சொல் வார்த்தையை உதிர்த்துவிட்டு, பொத்தாம் பொதுவாக வருத்தம் மட்டுமே கேட்டு, மன்னிப்பும் கேட்காமல், மனதார வருந்தாமல், உயர்நீதிமன்றத்தையும் அவமதித்துவிட்டு, முடிந்தால் என்னை கைது செய்யட்டும் என காவல்துறைக்கு சவாலையும் விட்டவர் ஏன் இன்றுவரை ஏன் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்? என்றுதான் புரியவில்லை. எஸ்.சேகரை கைது செய்யாதது ஏன் என பெண் பத்திரிகையாளர்கள் சிலரிடமே கருத்து கேட்டால் என்ன தோன்றியது. அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

கவின்மலர் (தினகரன்)

பொதுவாக தமிழகத்தில் பெண்கள் எதிரான பாலியல் ரீதியாக அவதூறு செய்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படாமல் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது. உதாரணமாக என் மீதே பாலியல் அவதூறு சம்பவம் ஒன்று நடைபெற்றபோது, அது குறித்து புகார் அளித்தேன். ஆனால் இதுவரை அந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. ஆனால் இதேபோன்று பின்னணி பாடகி சின்மயி பாலியல் தொடர்பான ஒரு அவதூறு புகார் அளித்தார். ஆனால் அதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் எஸ்.வி.சேகர் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஜாமீனும் மறுத்தாகிவிட்டது. உச்சநீதிமன்றமே அவரை கைது செய்ய தடை இல்லை என உத்தரவு பிறப்பித்தாகிவிட்டது. ஆனாலும் எஸ்.வி.சேகரை இந்த அரசு ஏன் பாதுகாக்கிறது? அதன் நோக்கம் என்ன? என்பனவெல்லாம் ஆயிரம் கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புகின்றன. தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் உறவினர் எஸ்.வி.சேகர் இருக்கிறார் என்ற காரணத்தினாலேயே காவல்துறையின் கைகள் கட்டப்பட்டதாக பரவலாக கூறப்பட்டு வருகிறது. அவர் கைது செய்யப்படவில்லை என்பதை விட, காவல்துறையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார் என்ற தகவல்கள் வருவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அவரை கைது செய்வது குறித்தோ, ஒருநாளாவது சிறையில் வைக்க வேண்டும் என்றோ அரசுக்கு எந்த அக்கறையும் இருப்பதுபோல் தெரியவில்லை. அதேபோல எஸ்.வி.சேகரும் கைதாக விரும்பவில்லை. எனவேதான் எஸ்.வி.சேகரை பாதுகாக்கும் கிரிஜா வைத்தியநாதன்மீது நாங்கள் ஒரு வழக்கும் தொடர்ந்துள்ளோம். இதன் மூலம் எஸ்.வி.சேகர் கைது செய்யப்பட்டு, பெண் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.

தாட்சாயிணி (செய்தி வாசிப்பாளர்)

பெண் வாசிப்பாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் அவதூறாக முகநூலில் குறிப்பிட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்து போராட்டங்கள், கண்டனங்கள் குவிந்தன. அதுமட்டுமல்லாமல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் அவரது முன்ஜாமீன் மனு மறுக்கப்பட்ட நிலையிலும் கூட இன்னமும் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை. நாங்கள் குடும்ப சூழ்நிலைகள் காரணமாகவும், எங்களின் திறமைகளை வெளிக்காட்ட வேண்டும் என்ற நோக்கத்திலும் சமூக அக்கறையுடனே பணிக்கு சென்று வருகிறோம். அப்படி இருக்கும்போது, மீடியாவில் பெண்களை குறித்து மிகமோசமாக பேசியிருப்பது எங்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையை சொல்லப்போனால், நான் எஸ்.வி.சேகர் கருத்தினை படித்ததிலிருந்தே ஒரு வாரம் சரியாக தூங்ககூட முடியவில்லை. நாங்கள் வீட்டையும் பார்த்துக் கொண்டு பணியினையும் திறம்பட செய்துகொண்டிருக்கும் எங்களை பற்றி இதுபோன்ற அசிங்கமான கருத்தை கூறிய அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக போலீசார் பாரபட்சமுடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இது வேண்டுமென்றே மெத்தனத்தை காட்டுவதுபோல் உள்ளது. எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை எங்களது போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

லட்சுமி, (ஸ்பெஷல் கரஸ்பாண்டெண்ட், தி வீக்)

பொதுவாக பெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் அவதூறு கூறியிருந்தாலும் அவர் என்னை தான் ஒருமையில் சாடினார். இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக புகார் அளிக்கப்பட்டதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் நான் தனிப்பட்ட முறையில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை ஏதும் இல்லை. அதுகுறித்து விசாரணையும் நடத்தப்படவில்லை. அதேபோல எஸ்.வி.சேகரிடமும் இதுவரை விசாரணை நடத்தியதாக தெரியவில்லை. ஆனால் அவர் வெளியிட்ட பதிவினை தான் அழித்துவிட்டதாகவும், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் பொத்தாம் பொதுவாக, மேம்போக்கான மன்னிப்பை மட்டுமே அவர் கேட்டுள்ளார். பாஜகவின் எந்த ஒரு முக்கிய பொறுப்பிலும் அங்கம் வகிக்காமல், குறிப்பாக எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடிய அதிகாரத்தில் இல்லாத எஸ்.வி.சேகருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பது எனக்கு புரியவில்லை. சட்டம் அனைவருக்கும் பொதுவாகத்தானே இருக்க வேண்டும். உயிரற்ற ஆண்டாளை வேசி என்பதற்காக கவிஞர் வைரமுத்துவை பாஜக தொடர்ந்து விரட்டியதுடன், பாஜக தொண்டர்கள் அனைவருமே அவர் மீது புழுதி வாரி தூற்றினார்கள். ஆனால் உயிரோடு இருக்கக்கூடிய பெண்களை எஸ்.வி.சேகர் வேசி என்று சொன்னதற்கு ஏன் பாஜகவினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை? இதில் மிகப்பெரிய அரசியல் புதைந்திருப்பதாக நான் கருதுகிறேன். இனியும் இந்த புகாரின் மீது எஸ்வி.சேகர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு துளி அளவும் இல்லை.

நைந்துபோன அரசியலமைப்பு சட்டமா?

நைந்துபோன அரசியலமைப்பு சட்டமா?

பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் மனக்குமுறல்களை இப்படி வெளிப்படுத்தி உள்ளது உண்மையிலேயே வேதனையை அளிக்கிறது. அரசியலமைப்பு சட்டம் நைந்துபோய் பொத்தலாகி கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு எழ துவங்கிவிட்டது. அதனால்தான் குறிப்பிட்ட சமுதாயத்தினர்கள் என்றுமே தண்டிக்கப்படுவதில்லையோ? அப்படியே தண்டித்தாலும் அது ஒரு சில மணித்துளிகள்தானோ? என்ற எண்ணமும் கூடவே எழுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகளே கதறி கொண்டு வீதியில் வந்து முறையிடும் நிலையில் உள்ளபோது, பாசிச சக்திகளின் பிடியில் உள்ள எஸ்.வி.சேகருக்கு உயர்நீதிமன்றம் கண்டன அலையை தவிர வேறென்ன வீச முடியும்? என தெரியவில்லை.

English summary
Women journalists have questioned why police have not yet arrested SV Sekar, who spoke in defamation of women. The female journalists have confirmed that they are going to meet this case legally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X