For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக ஆட்சியாளர்களுக்கு பால் உற்பத்தியாளர்கள் என்றாலே அலர்ஜி போல...: கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: பால் உற்பத்தியாளர்கள் துயர் துடைக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசிற்கு வலியுறுத்தியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

அ.தி.மு.க. ஆட்சியினருக்கு மக்கள் நலப்பணியாளர் தொடங்கி மொத்த அரசு அலுவலர்கள் மீதும் எந்த அளவுக்கு "அலர்ஜி"யோ- விவசாயிகள் மீதும், மீனவர் மீதும், நெசவாளர் மீதும் எந்த அளவுக்கு "அலர்ஜி"யோ- அதே அளவுக்கு, பால் உற்பத்தியாளர், பால் விநியோகம் என்றால் என்ன காரணத்தாலோ ஒருவகை வெறுப்பும் ஒவ்வாமையும்.

Government should take action on Milk procurement issue : Karunanidhi

இது குறித்து நானும் பல்வேறு அறிக்கைகளைக் வெளியிட்டிருக்கிறேன். இருந்தாலும் தினந்தோறும் பால் கொள்முதல் பிரச்சினை பற்றி ஏதாவது செய்தி ஏடுகளிலே வந்து கொண்டே உள்ளது.

இன்றைக்கு வந்துள்ள செய்தியிலே கூட, ஒட்டன்சத்திரம் அருகே ஆயிரம் லிட்டர் பாலை சாலையிலே கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். பால் உற்பத்தியாளர்களிடமிருந்து அரசின் "ஆவின்" நிர்வாகம் பாலை கொள்முதல் செய்யாவிட்டால், அவர்கள் என்ன செய்வார்கள்?

மேலும் தனியார் வியாபாரிகளிடமிருந்து "கமிஷன்" அடிப்படையில் பாலைக் கொள்முதல் செய்து அதிகாரிகள் ஆவினில் சேர்ப்பதாக, பால் உற்பத்தியாளர்கள் புகார் கூறியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர், முகமது அலி செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ஆவின் நிர்வாகம், பால் கொள்முதலை பல வழிகளிலும் குறைத்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் பால் கொள்முதல் செய்ய மறுத்து, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கும், "பல்க் மில்க் கூலர்"களுக்கும் விடுமுறை அளிக்க நிர்ப்பந்தம் அளிக்கப்படுகிறது.

மாவட்ட ஒன்றியங்களில் உள்ள ஆவின் நிர்வாகம், உரிய நேரத்தில் பால் "கேன்"களை எடுத்துக் கொள்வதில்லை. பால் கெட்டு விட்டது எனக் கூறி உற்பத்தியாளர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்துகின்றது. ஆவினின் கொள்முதல் திறன் 25 லட்சம் லிட்டர் முதல் 28 லட்சம் லிட்டர் வரை தான் உள்ளது.

தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையை லிட்டருக்கு இரண்டு மூன்று ரூபாய் வரை குறைத்துள்ளன. இதைப் பயன்படுத்தி அதிகாரிகள், லிட்டருக்கு இரண்டு ரூபாய் வரை கமிஷன் பெற்றுக் கொண்டு தனியார் வியாபாரிகளின் பாலை, கொள்முதல் செய்ததாக ஆவினில் சேர்த்து விடுகிறார்கள். இந்த வகையில் தினமும் தனியார் வியாபாரிகளிடமிருந்து ஐந்து லட்சம் லிட்டர் பால் ஆவினில் சேர்க்கப்படுகிறது.

இந்த ஊழலைத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று பால் கொள்முதலில் நடை பெற்று வரும் முறைகேடுகளைப் பற்றி விரிவாகக் கூறியிருக்கிறார்.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் 2011ஆம் ஆண்டிலேயே, தி.மு.கழக ஆட்சியில் பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு 17 ரூபாய் 75 பைசா என்றிருந்த நிலையினை மாற்றி, 24 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் 25 பைசா அளவுக்கு உயர்த்தியதையும்; 2014ஆம் ஆண்டு அக்டோபரில் 24 ரூபாய் என்பதிலேயிருந்து மேலும் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி, 34 ரூபாய் என்று ஆக்கி பால் நுகர்வோரைப் பெரிதும் பாதித்திடும் வகையில், அ.தி.மு.க. ஆட்சியினர் பால் விற்பனை விலையை இரண்டு மடங்காக உயர்த்தியதையும் யாரும் மறந்து விடவில்லை.

உண்மையான பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை வாங்க மறுக்கின்ற ஆவின் நிர்வாகம், சில தனியார் பால் விற்பனையாளர்களைத் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் இணை உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொண்டு, அவர்களிடமிருந்து லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் விலை கொடுத்து வாங்குகின்றது. அதன் மூலம் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும், நிர்வாகத்திலே இருப்பவர்களும் கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்கள் என்று செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

எனவே அ.தி.மு.க. அரசு, மாநில மக்களின் மற்றப் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தி ஒதுக்கி வைப்பதைப் போல, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையையும் கருதாமல் உடனடியாகத் தலையிட்டு பால் உற்பத்தியாளர்களின் துயர் துடைத்திடத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டு மென்று வலியுறுத்துகிறேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The DMK president Karunanidhi has insisted Tamilnadu government to take immediate action in milk procurement issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X