For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைக்கவசத்தை கட்டாயமாக்கும் விதி... அரசு கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தலைக்கவசம் அணியாதவர்களை தேவையின்றி தொந்தரவு செய்யாமல், அவர்களுக்கு அறிவுரை கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்தி திருத்த முயற்சி செய்தால் தலைக்கவசம் அணியும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்' எனத் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சாலை விபத்தில் சிக்கி தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்த ஒருவரின் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தலைக்கவசத்தை கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட விதியை கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பு வரவேற்கத் தக்கது; பாராட்டத்தக்கது.

Govt should seriously implement compulsory helmet system : Ramadoss

சாலை விபத்துக்களில் தேவையற்ற உயிரிழப்புக்களைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டில் இரு சக்கர ஊர்திகளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதனடிப்படையில், அதே ஆண்டின் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தமிழகத்தில் இரு சக்கர ஊர்திகளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்பின் 100 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்று வரை தமிழகத்தில் அந்த ஆணை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

தலைக்கவசத்தை கட்டாயமாக்கும் ஆணையை உறுதியாக செயல்படுத்தும்படி அவ்வபோது காவல்துறையினரை அரசு கேட்டுக் கொள்வதும், அடுத்த சில வாரங்களுக்குப் பின் இந்த ஆணை கிடப்பில் போடப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. கடைசியாக 2011 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தலைக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், அடுத்த ஓரிரு நாட்களில் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் 6419 இரு சக்கர ஊர்தி ஓட்டிகள் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 41,330 பேர் தலைக்கவசமின்றி உயிரிழந்துள்ளனர். தலைக்கவசம் அணிந்திருந்தால் இவர்களில் பெரும்பான்மையானோரின் உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும். எனவே, விலைமதிப்பற்ற உயிரைக்காக்க தரமான தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும்.

தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் திட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்த முடியாததற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலில் தலைக்கவசம் அணிவதில், குறிப்பாக பெண்களுக்கு, சில வசதிக் குறைவுகள் உள்ளன. இதனால் தலைக்கவசம் அணிவதை தமிழகத்தில் பெரும்பான்மையானவர்கள் விரும்புவதில்லை. இரண்டாவதாக தமிழக காவல்துறையினர் இந்த விதியை மக்கள் நலன் சார்ந்ததாக பார்க்காமல் வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றனர்.

கர்நாடகத் தலைநகர் பெங்களூரிலும், கேரள மாநிலம் முழுவதிலும் கட்டாய தலைக்கவச விதி வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. இதற்குக் காரணம் அங்குள்ள காவல்துறையினரும், அதிகாரிகளும் இதில் உறுதியாக இருப்பது தான். சாலைகளில் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களை சாலைச் சந்திப்பில் உள்ள கேமிராக்கள் மூலம் படம்பிடிக்கும் காவல்துறையினர், அவர்களுக்கு அறிவிக்கை அனுப்பி அபராதம் வசூலிக்கின்றனர். எவரேனும், செல்வாக்கை பயன்படுத்தி நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முயன்றால், அவர்களின் ஊர்தி காவல்நிலை யத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கூடுதல் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதனால் மிகவும் முக்கியமானவர்கள் கூட இந்த விதியை கடைபிடிக்கின்றனர்.

தமிழகத்தில் இந்த விதியை கட்டாயமாக செயல்படுத்தினால் மக்கள் அதிருப்தி அடைவார்கள்; அதனால் அவர்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்ற வாக்கு வங்கியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தான் இத்திட்டத்தின் தோல்விக்கு காரணம் ஆகும். பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை, தலைக்கவசம் அணிவது கட்டாயம் போன்ற நடவடிக்கைகள் மக்களின் உயிரையும், உடல் நலத்தையும் காக்கும் நோக்கம் கொண்டவை என்ற போதிலும், ஆட்சியாளர்களின் குறுகிய நோக்கம் காரணமாக இவை முறையாக செயல்படுத்தப்படுவதில்லை. இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்றுகொள்வதில் பொதுமக்களுக்கு சற்று தயக்கம் கூட இருக்கலாம். அதற்காக அரசு பின்வாங்கக் கூடாது. மாறாக, இந்த திட்டங்களின் நோக்கங்களை மக்களுக்கு விளக்கி, தலைக்கவசம் அணியாதவர்களை தேவையின்றி தொந்தரவு செய்யாமல், அவர்களுக்கு அறிவுரை கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்தி திருத்த முயற்சி செய்தால் தலைக்கவசம் அணியும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.

எனவே, உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளவாறு தலைக்கவசம் அணிவதை வரும் ஒன்றாம் தேதி முதல் கட்டாயமாக செயல்படுத்த வேண்டும். இன்று தொடங்கி இம்மாத இறுதி வரை தலைக்கவசம் அணிவதன் தேவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விபத்தில் உயிர் தப்புவதற்கான இந்நடவடிக்கைகளுடன் விபத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் சென்னை சாலைகள் அனைத்திலும் இரு சக்கர ஊர்திகள் செல்வதற்காக தனிப்பாதையை ஏற்படுத்துதல், மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
The PMK founder Ramadoss has said that the Tamilnadu government should seriously implement compulsory helmet system.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X