கலப்பு திருமணத்தால் ஆத்திரம்.. மகனையும், தாயையும் ஆணவ கொலை செய்த தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தாய், மகன் ஆகிய இருவரையும் ஆணவ கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுக்கா கதவணி ஊராட்சி காரப்பட்டு அருகே உள்ளது அருணபதி கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (50). இவர் தையல் தொழிலாளியாக உள்ளார்.
இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு பவித்ரா, சுஜி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். சுபாஷ் என்ற 25 வயது மகனும் இருந்தார். சுபாஷ் தனது பா்டி அதாவது தண்டபாணியின் தாய் கண்ணம்மாள் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் சுபாஷுக்கும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அனுசுயா (25), என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் இவர்களுக்குள் இருந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது. இதனால் திருமணத்திற்கு சுபாஷின் பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் அனுசுயாவை அழைத்து கொண்டு திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு சுபாஷ் தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். மகனின் காதல் திருமணம் குறித்து தகவலறிந்த தண்டபாணி நேராக தனது தாயின் வீட்டிற்கு அரிவாளுடன் சென்றார். அங்கு தனது மகனை சரமாரியாக வெட்டிச் சாய்த்தார். அதை தடுக்க வந்த கண்ணம்மாளையும் தண்டபாணி வெட்டினார். இதில் இருவரும் இறந்தனர்.
இரு உயிர்களை எடுத்த நிலையிலும் ஆத்திரமும் வெறியும் அடங்காத தண்டபாணி, அரிவாளை கொண்டு மருமகள் அனுசுயாவை வெட்டினார். இதில் ஆங்காங்கே பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு இருந்த சுபாஷ், கண்ணம்மாள் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து படுகாயமடைந்த அனுசுயாாவை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக இன்று காலை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அவருடைய உறவினர்கள் கூறுகையில் அனுசுயாவுக்கு கையில் அறுவை சிகிச்சை நடத்தப்படவுள்ளது. அது பலனளிக்காவிட்டால் கையை அகற்ற வேண்டும் என கூறியுள்ளனர் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இந்த நிலையில் தண்டபாணியை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் அவரை வலைவீசி தேடி வந்தனர். அப்போது ரத்தக்கறையுடன் வந்த தண்டபாணி ஊத்தங்கரை அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்துள்ளார். அங்கு அரிவாளை கழுவியுள்ளார். துக்கம் தாளாமல் தனது கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து ஊத்தங்கரை நோக்கி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை தனிப்படை போலீஸார் பிடித்து கைது செய்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தண்டபாணியை சிகிச்சை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகு தண்டபாணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பர் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications