For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைவனாக வரவேண்டியவன் விக்னேஷ்... இந்த முடிவெடுத்திருக்க கூடாது -சீமான் கண்ணீர் #vignesh

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : மிகப் பெரிய தலைவனாக வரவேண்டிய ஒருவன், இப்படியொரு நிலையை எடுத்துவிட்டான் என்று காவிரிப் பிரச்சினைக்காக தீக்குளித்த உயிரிழந்த விக்னேஷ் மரணத்திற்காக வேதனை தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைப் பற்றி முதல்வர் கவலைப்படாமல் 91,308 பேர் கட்சியில் சேரும் விழாவில், வாழை மரம், தோரணம் எனக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார் என்றும் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, அ.தி.மு.கவைத் தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் போராட்டக் களத்தில் உள்ளன. நேற்று காவிரி உரிமை மீட்புப் பேரணியை நடத்தினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதில், நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவரணி பாசறை செயலாளர் விக்னேஷ் கலந்து கொண்டார்.

ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முதல்நாளே தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், ' பேரணியில் தற்கொலைப் படையாக மாறுவோம்' எனக் குறிப்பிட்டிருந்தார். இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், பேரணியின்போது உடலில் தீ பற்ற வைத்துக் கொண்டார் விக்னேஷ். 95 சதவீத தீக்காயங்களோடு போராடியவர், இன்று காலை மரணமடைந்துவிட்டார். காவிரிக்காக உயிர்நீத்த இளைஞரின் மரணம், தமிழகம் முழுவதும் சோக அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

விக்னேஷ் மரணம் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை வெகுவாகப் பாதித்துள்ளது. விக்னேஷ் உடனான நினைவுகளையும், தற்கொலைக்கான காரணத்தையும் வேதனையுடனும், கோபத்துடனும் பிரபல இதழ் ஒன்றிர்க்கு பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழ் உணர்வாளன்

தமிழ் உணர்வாளன்

இப்படியொரு காரியத்தில் விக்னேஷ் ஈடுபடுவான் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஒவ்வொருவரையும் பொத்திப் பொத்தித்தான் வளர்க்கிறேன். மனம் மிகுந்த சுமையாக இருக்கிறது. தமிழ் இன உணர்வோடு வளர்க்கப்பட்டவன். என்னுடைய பேச்சால் ஈர்க்கப்பட்டு, மன்னார்குடியில் கட்சி வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய முகநூல் பதிவுகளில் தமிழ்த் தேசிய முதிர்ச்சியை பார்க்க முடியும். முத்துக்குமாரைப் போல உணர்வோடு வளர்ந்தவன். ஏதோ ஓர் ஆர்வத்தில் அமைப்பிற்குள் வந்தவன் அல்ல. மிகப் பெரிய தலைவனாக வரவேண்டிய ஒருவன், இப்படியொரு நிலையை எடுத்துவிட்டான்.

மனவேதனையில் இருக்கிறேன்

மனவேதனையில் இருக்கிறேன்

முகநூலைப் பார்க்கும் வழக்கம் எனக்கு இல்லை. 'விளையாட்டாகப் போட்டிருக்கான்' என்று நினைத்துவிட்டார்கள். பேரணிக்குள் வந்துவிட்டு எனக்கு ஒரு வணக்கம் வைத்தான். அதன்பிறகு எங்கு போனான் என்று தெரியவில்லை. பேரணியில் முன்னால் போய் நின்று, ஏற்கெனவே இடுப்பில் பெட்ரோலை நனைத்துவிட்டு, அதன் மேல் சட்டையைப் போட்டுக் கொண்டு வந்திருக்கான். யாரும் எதிர்பாராத நேரத்தில் கொளுத்திக் கொண்டான். மிகுந்த மனவேதனையில் இருக்கிறேன்.

உயிரைக் கொடுக்கக் கூடாது

உயிரைக் கொடுக்கக் கூடாது

நான் என் பிள்ளைகளை சொல்லிச் சொல்லி வளர்க்கிறேன். இதுபோன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது என்றுதான் நாள்தோறும் அவர்களிடம் பேசுகிறேன். எங்கள் கட்சியின் உறுப்பினர் படிவத்தில் உள்ள உறுதிமொழியில் இதையும் ஒன்றாக இணைக்க விரும்புகிறேன். ஒவ்வொரு தமிழனையும் பாதுகாக்க வேண்டும். உயிரைக் கொடுத்து சாதிக்க முடியும் என்றால், நானே உயிர் கொடுக்க முன் வருவேன்.

தொடரும் மரணங்கள்

தொடரும் மரணங்கள்

எந்தத் தீர்வும் ஆட்சியாளர்களால் ஏற்படப் போவதில்லை. மொழிக்காக, இனவிடுதலைக்காக, முல்லை பெரியாறுக்காக என எவ்வளவோ பேர் உயிரிழந்தார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதானே வருகிறோம். தம்பி விக்னேஷ் இறந்தது கட்சிக்காகவோ, எனக்காகவோ இல்லை. தமிழ் வாழ்க என்று சொல்லிவிட்டுத்தான் உயிர் நீத்திருக்கிறான். இது ஓர் உயர்ந்த நோக்கம். தமிழக இளைஞர்களை தவிர்க்க முடியாமல் இதுபோன்ற சூழல்களை நோக்கி அழைத்துச் செல்கிறது. விக்னேஷ் போன்று பல லட்சக்கணக்கான இளைஞர்கள், அதே கொதிநிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களை அடக்கினால், இப்படித்தான் நடக்கும்.

கொதிக்கும் ரத்தம்

கொதிக்கும் ரத்தம்

என் மரணமாவது உசுப்பட்டும் என்று சொல்லித்தான் விக்னேஷ் இறந்தான். ஈழப் படுகொலையின்போது முத்துக்குமார் உணர்வை சூடேற்றிவிட்டான். மூன்று பேரும் தூக்குக்கு வந்துவிடுவார்களோ எனப் பயந்து செங்கொடி ஒரு கொதிநிலையை உருவாக்கினார். அந்த மாதிரி கொதிநிலையை உருவாக்க முடியாதா என விக்னேஷ் எண்ணிவிட்டான். கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படும்போது, தாக்குதலில் ஈடுபட்டவர்களை அந்த மாநில அரசு பாதுகாக்கிறது. ' தமிழர்கள் காப்பாற்றப்பட்டார்கள்' என்ற செய்தி வந்திருந்தால், இவன் மனம் ஆறுதல் அடைந்திருக்கும். அந்த அதிகாரம் அடிப்பவனைப் பாதுகாக்கிறது.

ஜெயலலிதா பேசாதது ஏன்?

ஜெயலலிதா பேசாதது ஏன்?

மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. இறையாண்மை, ஒருமைப்பாடு என்று பேசிவிட்டு அமைதியாக இருக்கிறார்கள். இவ்வளவு தாக்குதல் நடந்த பிறகும், பத்திரிகையாளர்களை அழைத்து ஏன் ஜெயலலிதா பேசவில்லை? வெள்ளத்தின்போது வாட்ஸ்அப்பில் பேசியதுபோலகூட பேசவில்லை.

அங்கு அடிக்கிற காட்சிகளை தமிழக முதல்வர் பார்க்கிறார். இதைப் பார்த்து என்ன சொல்லியிருக்க வேண்டும்? ' மக்களுக்குள் கொதிநிலை உருவாகும். மாபெரும் போராட்ட வடிவமாக மாறும். கன்னட மக்களுக்கு எதிராக திரும்பும்' என கர்நாடக அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும்.

அப்படிச் செய்திருந்தால், ' என்னுடைய உயிர்மேல் தமிழக அரசுக்கு அக்கறை உள்ளது' என்ற எண்ணம் மக்களுக்கு வந்திருக்கும்.

கொண்டாட்டம் ஏன்?

கொண்டாட்டம் ஏன்?

அதையே செய்யாமல், இதெல்லாம் ஒரு பிரச்னையா என 91,308 பேர் கட்சியில் சேரும் விழாவில், வாழை மரம், தோரணம் எனக் கொண்டாட்டம் வேறு. பத்து நாளைக்குப் பிறகு கொண்டாட வேண்டியதுதானே? இந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நகர்வு ஏன்? நீங்கள் பேசியிருந்தால் ஏன் இவ்வாறு நடக்கப் போகிறது? தேர்தல் வெற்றிக்காக, தேசிய இனத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?. காவிரி என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக என் உடம்பில் ஓடும் ரத்தம். அதைப் பற்றிக்கூட ஆளும் அரசுக்கு என்ன அக்கறை இருக்கிறது? நாதியற்றுக் கிடக்கிறோம் என்ற மனநிலை வரும்போதுதான், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் காரணமாகிவிடுகிறது.

மிகப்பெரிய இழப்பு

மிகப்பெரிய இழப்பு

உயிரிழப்பதால் யாருடயை கவனத்தையும் ஈர்க்க முடியாது. கண்ணீரைத் துடைக்கக் கரம் இல்லாத தனித்துவிடப்பட்ட இனமாக நாம் இருக்கிறோம். லட்சக்கணக்கான தமிழ்த் தேசிய இளைஞர்களை உருவாக்க வேண்டிய விக்னேஷ், தீக்குளித்து மரணித்துவிட்டான். மிகப் பெரிய இழப்பு. இதுபோன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது என தம்பிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். கட்சியின் உறுதிமொழி ஏற்பிலும் கட்டாயப்படுத்துவோம் என்று வேதனையுடன் கூறியுள்ளார் சீமான்.

English summary
Naam Tamilar leader Seeman has said that he is pained over the death of Mannarkudi Vignesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X