
முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க.. தேவைப்பட்டால் ஆளுரை சந்திப்பேன்.. ஓபிஎஸ் திட்டம்
தூத்துக்குடி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது அதிமுக சார்பில் பெரிய அளவில் பணப்பட்டுவாடா நடைபெற்றது. இதனால் தேர்தலையே தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
இந்நிலையில், வழக்கறிஞர் வைரக்கண்ணன் தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை பெற்றுள்ளார்.
அதில், ஏப்ரல் 18ம் தேதி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

ஸ்டாலின் கண்டனம்
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக பேசியுள்ளார். காவல்துறை வழக்கு பதியப்படவில்லை என்றால் திமுகவே வழக்கு பதியும் என அவர் கூறியுள்ளார்.

தவறு செய்தால் தண்டனை
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து ஓபிஎஸ், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்று பதில் அளித்தார்.

ஆளுநரை சந்திப்பேன்
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் அதிமுக அம்மா கட்சி எம்பி தம்பிதுரை போன்று தானும் தேவைப்பட்டால் ஆளுநரை சந்திப்பேன் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

எங்கள் பக்கம் தொண்டர்கள்
அதிமுகவை பொறுத்தவரை அனைத்து தொண்டர்களும் தங்கள் அணி பக்கமே இருப்பதாக ஓபிஎஸ் கூறினார். எனவே, உறுதியோடு தங்கள் அணி செயல்பட்டு வருவதாகவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.