For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓஹோவென இருந்த அதிமுக.. இன்று கொடிக்கும், சின்னத்துக்கும் அடித்துக் கொள்ளும் பரிதாபம்! #admk46

மக்கள் மனதில் கொடிகட்டிப் பறந்த எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக இன்று சின்னத்திற்கும், கொடிக்கும் அடித்துக் கொள்ளும் கட்சியாக மாறியுள்ளது தான் 46 ஆண்டுகளில் கண்ட வளர்ச்சியா?

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : மக்களுக்காக பணியாற்ற வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் இந்த எண்ணத்திற்காகத் தான் எம்ஜிஆர் 1972ம் ஆண்டு கட்சியைத் தொடங்கினார். ஆனால் 46வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அந்தக் கட்சி இன்றும் அதே கொள்கையில் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திரைத்துறையில் மக்களின் அபிமானத்தை சம்பாதித்த ஒருவர் அரசியலிலும் சாதிக்க முடியம் என்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் எம்ஜிராமச்சந்திரன். திரைப்படங்களில் ஊழல் செய்பவர்கள், ஏமாற்றுப் பேர்விழிகள், ஏழை மக்களை ஏமாற்றுபவர்களிடம் இருந்து நியாயத்தை பெற்றுத் தரும் கதாநாயகனாக வலம் வந்தார் எம்ஜிஆர்.

மக்கள் மனதில் நம்பிக்கை ஒளியை ஏற்றியதால், பொது வாழ்விலும் அவரை அங்கீகரித்தனர் மக்கள். தலைவனாக உருவாகும் ஒருவர் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை உருவாக்கினார் எம்ஜிஆர். எங்கு சென்றாலும் மக்களை அன்போடு அரவணைப்பது, பிள்ளைகளுடன் அமர்ந்து உணவு உட்கொள்வது என்ற குடும்ப உறுப்பினரில் ஒருவர் போலவே எம்ஜிஆர் செயல்பட்டதால் அரசியல் ஏட்டில் சரித்திர நாயகனாக விளங்கினார்.

மக்கள் நலத்திட்டங்கள்

மக்கள் நலத்திட்டங்கள்

நாடு தழுவிய நிலையில் எம்ஜிஆர் கலை நிகழ்ச்சிகள், தமிழ்ப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டங்கள், பண்டிகைக் காலங்களில் ஏழை, எளியவருக்கு நிதியுதவிகள், ஆதரவற்றோர், உடல் குறையுடையோருக்கான நிதியுதவிகளைத் தந்தார். கல்வி நிதியுதவிகள், பயிற்சி பட்டறைகள், தன்முனைப்புத் தூண்டக்கூடிய இளைஞர்களுக்கான பயிற்சிகள், சமயம் சார்ந்த நிகழ்வுகளுக்கு ஆதரவு போன்றவற்றை செய்து வந்தார்.

அதிமுக கொள்கைகள்

அதிமுக கொள்கைகள்

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றாலும் அங்குள்ள தமிழர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் எம்ஜிஆர். இதனால் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். நாட்டில் ஊழல் பெரிச்சாளிகள் ஒழிய வேண்டும், ஏழைகள் இன்பமாக வாழ வேண்டும் என்றும் தான் அதிமுகவை தொடங்கினார். அவருக்கு மக்களிடத்தில் இருந்த செல்வாக்கிற்கு உதாரணமாக 1977 முதல் தொடர்ந்து 3 முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுகவை நிலைநாட்டிய ஜெ.

அதிமுகவை நிலைநாட்டிய ஜெ.

எம்ஜிஆரின் மரணத்திற்குப் பிறகு கட்சி பிளவு பட்டது, அப்போது கட்சிக்கு தலைமை யார் என்று எம்ஜிஆர் அறிவிக்காத காரணத்தால் சறுக்கலை சந்தித்தது அதிமுக. ஆனால் அனைவருக்கும் தெரிந்தது அறிவிக்கப்படாத விஷயம் எம்ஜிஆரின் அரசியல் வாரிசு ஜெயலலிதா என்பது தான். எம்ஜிஆர் மரணத்தின் போது அருகில் கூட நெருங்க விடாமல் அப்போதைய இரண்டாம் கட்டத் தலைவர்கள் விரட்டியடித்த போதும் விடாப்படியாக இருந்தார் ஜெயலலிதா.

ஜெ.வின் தொடக்க கால அரசியல்

ஜெ.வின் தொடக்க கால அரசியல்

எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு கடும் சவால்களை சந்தித்து கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். அதிமுகவின் பெயரை எம்ஜிஆரின் பகழை வைத்து நிலைக்கச் செய்தார். தன்னுடைய பேச்சாலும், செயலாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தார். எம்ஜிஆர் போலவே ஆரம்ப காலகட்டத்தில் மக்களோடு மக்களாக செயல்பட்டார், இதனாலேயே அவருடைய பொதுக்கூட்ட பேச்சுகளின் முதல் வரி மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்றே அமைந்தது.

தொண்டர்கள் வெதும்பல்

தொண்டர்கள் வெதும்பல்

5முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த ஜெயலலிதா, இரண்டு முறை நீதிமன்ற தீர்ப்பால் சிறைக்கு சென்றார். ஊழலை ஒழிக்கும் கட்சியாக இருந்த அதிமுகவில் ஜெயலலிதா, சசிகலா நட்பால் கரை படிந்தது. அப்போதே கட்சியின் கொள்கை மறைந்து வருவதாக தொண்டர்கள் மனம் வெதும்பினர். எனினும் தமிழகத்தில் திமுக, அதிமுக தவிர வேறு கட்சிகள் இல்லை என்ற நிலையில் சுழற்சி முறையில் இரண்டு கட்சிகளும் ஆட்சி செய்தன.

மக்கள் நலனில் இருந்து மாறிய பாதை

மக்கள் நலனில் இருந்து மாறிய பாதை

2011 முதல் தொடர்ந்து அடுத்தடுத்து தேர்தல்களில் வெற்றி கண்டு அதிமுக தற்போது ஆட்சி செய்து வருகிறது. ஆனால் அதிமுக எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அது இன்றும் கடைபிடிக்கப்படுகிறதா என்ற எண்ணம் தொடக்க காலத்தில் இருந்த கட்சி நிர்வாகிகள் மனதில் எழாமல் இல்லை. மக்களுக்காக செயல்பட்டது போக தற்போது தனக்காக செயல்படுபவர்களே கட்சியில் அதிக அளவில் இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் அவர்கள்.

அதிமுகவின் எதிர்காலம்

அதிமுகவின் எதிர்காலம்

மேலும் அதிமுக என்ற அடையாளத்தை அழித்து விட்டு இன்று கட்சியின் பெயரையும், சின்னத்தையும் வைத்தே அரசியல் செய்து விடலாம் என்று நினைப்பவர்களால் கட்சி அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாகக் குமுறுகின்றனர் சீனியர்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இரண்டு பேர் மக்களுக்காக செய்த தொண்டு தான் 46 ஆண்டு வெற்றிக்கு காரணம், ஆனால் அந்த வெற்றி இனியும் தொடருமா, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நல்ல தலைமை கட்சிக்கு கிடைத்தால் மட்டுமே இந்த நிலைமை மாறும் என்கின்றனர் அதிமுகவின் அபிமானிகள்.

English summary
Is still ADMK in its path of basic principles framed by MGR or the present administrators thought that only Party name and symbol is enough to get votes from people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X