For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் 'இந்தியா டுடே' கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசுகிறார் சசிகலா?

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

இந்தியாவின் முன்னணி செய்தி பத்திரிகையான இந்தியா டுடே வரும் 9 மற்றும் 10 ம் தேதிகளில் சென்னையில் இரண்டு நாள் கருத்தரங்கை நடத்தவிருக்கிறது. 'India Today South Conclave' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றுமாறு அஇஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வுக்கு இந்தியா டுடே குழுமத்தின் சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

அழைப்பிதழை பெற்றுக் கொண்ட சசிகலா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவது குறித்து தன்னுடைய சம்மதத்தை இதுவரையில் உறுதி படுத்தவில்லை என்று இரண்டு தரப்பிலும் சொல்லப்படுகிறது.

தென்னிந்தியாவின் நான்கு மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்ப பட்டிருக்கின்றன. தமிழக முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் ஸுக்கு பேச கொடுக்கப் பட்டிருக்கும் தலைப்பு; 'Sunrise in the South: Leading the way'. ஓபிஎஸ் ஸூம் கருத்தரங்கில் கலந்து கொள்ளுவதை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

Is Sasikala a Super CM?

திங்கட்கிழமை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எம்.வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசுகிறார். செவ்வாய்க் கிழமை நிகழ்ச்சியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் ஆகியோரும் கலந்து கொள்ளுகின்றனர். அன்றைய தினம் திமுக செயற் தலைவர் மு.க. ஸ்டாலின் "Development or Doles: What works in Tamil Nadu?" என்ற தலைப்பில் பேசுகின்றார். தென் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் நேரத்தில் ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்ப பட்டிருப்பது சுவாரஸ்யமானதாக பார்க்கப் படுகிறது.

சசிகலா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெறும் குத்துவிளக்கை மட்டும் ஏற்றி வைத்து விட்டு சென்று விடுவார் என்று பரவலாக நம்பப்படுகிறது. அவர் பேசுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் வேறோர் தரப்பு சசிகலா நிகழ்ச்சியில் வருவதை தவிர்க்கக் கூடும், மாறாக ஓபிஎஸ் ஸை அனுப்பி வைப்பார் என்றும் சொல்லுகிறது. ஓபிஎஸ் ஸைப் பொறுத்த வரையில் 2013 ம் ஆண்டில் இந்தியா டுடே சார்பில் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. அந்தாண்டு பல்வேறு துறைகளில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட விருதுகளை வாங்கிக் கொள்ளுவதற்காக ஓபிஎஸ் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை ஜெ டில்லிக்கு அனுப்பினார். மற்ற அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் கே.பி.முனுசாமி.

இந்தியா டுடே யின் தேசிய அளவிலான கருத்தரங்கங்கள் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் டில்லியில் நடைபெறும். முதன் முறையாக டெல்லிக்கு வெளியே நடைபெறுகிறது. இந்தியாவின் பல பிரதமர்கள், வெளிநாட்டு அதிபர்கள், பிரதமர்கள் இதில் கடந்த காலங்களில் கலந்து கொண்டிருக்கின்றனர். அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் போன்றோரும், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபும் இந்தியா டுடே கருத்தரங்கங்களில் கடந்த காலங்களில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய பிரசித்திப் பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அழைப்பிதழ்தான் 'சின்னம்மாவுக்கு' வழங்கப் பட்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் எல்லாம் ஆளும் கட்சியில் முதலமைச்சருக்கு மட்டுமே வழங்கப்பட்ட அழைப்பிதழ் தமிழகத்தில் மட்டும் மாநிலத்தை ஆள்பவர்கள் சார்பில் இருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் ஓபிஎஸ் ஸுக்கு கொடுக்கப்பட்டது சம்பிரதாயமானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளலாம். சசிகலாவுக்கு கொடுக்கப் பட்ட அழைப்பிதழ்தான் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஓபிஎஸ்ஸைப் பார்க்காமல் சசிகலாவைச் சந்திக்கும் வெளிநாட்டுத் தூதர்கள்

தமிழகத்தில் இன்று நிலவும் இந்த அவலமான சூழலை மேலும் தெளிவாகக் காட்டும் மற்றோர் முக்கியமான சம்பவமும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதுதான் சென்னையில் இருக்கும் பல்வேறு வெளிநாடுகளின் துணைத் தூதர்கள் சசிகலா வைப் போய்ப் பார்ப்பது. தென்னிந்தியாவுக்கான ரஷிய தூதர் செர்ஜே எலு கோடவ், சென்னையின் ரஷிய தூதரக அதிகாரி எவ்கேனி கிராவ்சென்கோ ஆகியோர் சசிகலா வை சந்தித்தனர். இதுபோன்று வேறு சில நாட்டு தூதர்களும் சசிகலா வை சந்தித்து 'குசலம்' விசாரித்தனர். அமெரிக்க துணைத் தூதர் ஒருவர் மட்டுமே ஓபிஎஸ் ஸை சந்தித்து பேசினார். மற்ற வெளிநாட்டு தூதர்கள் எவரும் ஓபிஎஸ் ஸை சந்திக்கவில்லை. மாறாக சசிகலா வை மட்டுமே சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத் தக்கது.

இதில் மற்றோர் சுவாரஸ்யமான நிகழ்வு என்னவென்றால், இந்தியாவுக்கான வெளிநாட்டு தூதர்கள் மட்டும் சசிகலாவைப் போய்ப் பார்க்கவில்லை. இவர்களுடன் சேர்த்து சில வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களும் கூட சசிகலா வை போய் சந்தித்து பேசியதுதான். மாசிடோனியா நாட்டுக்கான இந்திய தூதரக அதிகாரி அரவிந்த் குப்தா, செனகல் நாட்டுக்கான இந்திய தூதரக அதிகாரி அசோக் தக்கர் உள்ளிட்ட சிலரும் கூட சசிகலா வை சந்தித்து பேசியிருக்கின்றனர். வெளிநாடுகளில் இந்தியா வை பிரதிநிதித்துவபடுத்தும் இந்த அதிகாரிகள் எதன் அடிப்படையில் பலத்த சர்ச்சைக்குரிய வராக தற்போது அறியப்படும் சசிகலா வைப் போய்ப் பார்த்தனர் என்பது பிரதமர் மோடிக்கு மட்டுமே வெளிச்சம்.

சிரியா வின் உள்நாட்டுப் போரில் சிவிலியன்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுவது பற்றியும், அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் ஹேக்கர்கள் புகுந்து விளையாடியது பற்றியும், துருக்கியில் ஆட்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் நடக்கும் தொடர் மோதல்கள் பற்றியும், ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறியதன், Brexit க்குப் பிந்தய சூழல்கள் குறித்தும், தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக வியட்நாம், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் கண்டனக் குரல்கள் பற்றியும், ஜெர்மனியில் அதிகரித்து வரும் தீவிரவாத் தாக்குதல்கள் பற்றியும், டொனால்டு ட்ரம்ப் அதிபரானவுடன் அமெரிக்க ரஷ்ய உறவுகள் எப்படியெல்லாம் இருக்கும், அதனது தாக்கம் இந்தியாவில் எப்படியெல்லாம் இருக்கும் என்பது பற்றியும் இந்த தூதுவர்கள் சசிகலா வுடன் விலாவாரியாக விவாதித்திருக்க கூடும்தான். யாரும் இதனை இல்லையென்று மறுக்க முடியாது!

நடப்பு சர்வதேச விவகாரங்கள் பற்றிய தற்போதய அஇஅதிமுக தலைமைக்கு இருக்கும் பரந்துபட்ட, ஆழமான அறிவு அனைவரும் அறிந்ததுதான். அதற்கு சாட்சியம் கூறும், சர்ட்டிஃபிகேட் தரும் நிகழ்வுதான் இந்தியாவுக்கான வெளிநாட்டு தூதர்களும், வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களும் சீரான இடைவெளியில் 'சின்னம்மாவை' சந்தித்து கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடுவது.

கோடிக்கணக்கான தமிழர்கள் நினைத்து, நினைத்து, புளகாங்கிதம் அடைய வேண்டிய வரலாற்று சம்பவங்கள் தற்போது தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

எல்லாம் காலம்டா சாமி!

India Today is inviting ADMK General Secretary Sasikala for its South Conclave that will held in Chennai on January 9th and 10th.

English summary
India Today is inviting ADMK General Secretary Sasikala for its South Conclave that will held in Chennai on January 9th and 10th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X