For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடிக்கு பாராட்டு… பாஜக பக்கம் நகரத் துவங்கி விட்டதா விடுதலை சிறுத்தைகள்?

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

கடந்த பதினைந்து நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரின் இரண்டு முகநூல் பதிவுகள் கட்சிக்குள்ளேயே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஜூலை 27 ம் தேதியிட்ட பதிவில் ரவிக்குமார் இவ்வாறு எழுதினார்: 'அம்பேத்கரின் 125 வது பிறந்த நாளில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அம்பேத்கர் அரசியல் தீண்டாமைக்கு ஆளாக்கப் பட்டதாக வருந்தினார். அம்பேத்கரால்தான் சாதாரண குடும்பத்தில் பிறந்த தான் பிரதமராக முடிந்தது என்றார். சமூக நீதிக் காவலர்கள் கூட இப்படிப் பேசியதில்லை. அம்பேத்கரைப் புகழுவதில் பிரதமருக்கு உள்நோக்கம் ஏதும் இருக்காது என அப்பாவிகள் கூட நினைக்க மாட்டார்கள். ஆனால் அப்படி அவர் பேசியதை ஒதுக்கி விட முடியாது''.

Is VCK moving towards BJP?

ஆகஸ்ட் 8 ம் தேதி ரவிக்குமார் எழுதிய பதிவு இது: "பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு ஆதரவாகவும் 07.08. 2016 அன்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பதை வரவேற்கிறேன். 'தாக்க வேண்டும் என்றால் என்னைத் தாக்குங்கள், தலித்துகளைத் தாக்காதீர்கள். சுட வேண்டும் என்றால் என்னை சுடுங்கள், தலித்துகளை சுடாதீர்கள்,' என்று பேசியிருக்கிறார். இதனை நாட்டின் ஊடகங்கள் மட்டுமின்றி, காவல், நீதி, நிர்வாக அமைப்புகள் கவனத்தில் கொள்ளும். அதுமட்டுமின்றி அவர் சார்ந்துள்ள பாஜக வையும், தோழமைக் கட்சிகளையும் அது கட்டுபடுத்தும்".

விவரமறிந்த அரசியல் பார்வையாளர்களின் புருவங்களை உயர்த்திய இந்த பதிவுகளுக்கான எதிர்வினை விசி கட்சிக்கு வெளியிலிருந்து வரவில்லை. கட்சிக்கு உள்ளேயிருந்து வந்தது. கட்சியின் துணை பொதுச் செயலாளரான ஆளுர் ஷாநவாஸ் விரிவான கடிதம் ஒன்றினை கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எழுதி அதனை தன்னுடையை முக நூலிலும் வெளியிட்டு விட்டார்.

அதன் சுருக்கமான சாராம்சம்: "குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் என்னைத் தாக்குங்கள் என ஒரு பிரதமரே பேசுவது அபத்தமானது. இந்த அபத்தப் பேச்சுக்காக பிரதமரை பாராட்டி நன்றி சொல்லியுள்ளார் நம் பொதுச் செயலாளர். இந்துத்துவத்தை எதிர்த்துப் போராடுவது, மாநாடு போடுவது ஒருபுறமும், இந்துத்துவா சக்திகளான தருண் விஜய் மற்றும் மோடியை ஆதரிப்பது மறுபுறமும் என பொதுச் செயலாளரின் அணுகுமுறை தொடருவதால் கட்சியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது. நிலைமை எல்லை மீறி செல்லுவதால் இது குறித்து வெளிப்படையாக பேசும் நிலைமைக்கு ஆளாகியுள்ளேன். கட்சியின் தலைவர் என்ற வகையில் நீங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்து வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்''.

Is VCK moving towards BJP?

விசி கட்சியின் இரண்டு தலைவர்கள் வெளிப்படையாக இப்படி ஒரு விஷயத்தில் மோதிக் கொண்டிருக்கிறார்கள். இருவருமே தங்களுடையை நிலைப்பாட்டை நியாயப்படுத்த தர்க்கவியல் ரீதியிலான காரணங்களை அடுக்குகிறார்கள்.

"மதச்சார்பின்னை பாதுகாப்பு மாநாடு தலைவர் (திருமாவளவன்) பிறந்த நாளான ஆகஸ்ட் 17 ம் தேதி நடக்கவிருக்கிறது. அந்த செய்தி ஊடகங்களில் விவாதிக்கப்படாமல், கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் முக்கியமானதான மதச்சார்பின்மைக்கு எதிராக சொல்லப்பட்ட ஒரு கருத்து இன்று விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று மதச்சார்பின்மையை பாதுகாக்கும் மாநாட்டை எந்தக் கட்சியும் நடத்தவில்லை. நாங்கள்தான் நடத்துகிறோம். இதில் இடதுசாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். ஏற்கனவே கடந்த தேர்தலின் போதும், அதற்கு முன்பும் கூட எங்களை அவர்கள் பக்கம் இழுக்க பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கடுமையாக லாபி செய்தார்கள். இந்தப் பின்புலத்தில் பார்த்தால்தான் கட்யின் பொதுச் செயலாளரே இப்படிப்பட்டதோர் கருத்தை தெரிவிப்பதன் ஆபத்து புரியும். மோடியைப் பாராட்டி தெரிவிக்கப்படும் கருத்துக்கள் கேலிக் கூத்தானவைதான்,'' என்று 'ஒன் இந்தியா' விடம் கூறினார் ஆளுர் ஷா நவாஸ்.

ஆனால் தன்னுடைய கருத்தில் எந்த தவறும் இல்லை என்கிறார் ரவிக்குமார்.

"நான் கூறியதில் எந்தத் தவறும் இல்லை. பிரதமராக மோடி பேசியிருக்கும் பேச்சுக்கு ஒரு மதிப்பு இருக்கும் என்றே உறுதியாக நம்புகிறேன். தலித்துக்களுக்கு ஆதரவாக பேசும் எல்லா கட்சியினரும் ஒரு விதமான அரசியல் கணக்கின் படியே (political calculation) பேசுகிறார்கள். ஆனால் பிரதமர் என்ற பதவியிலிருந்து மோடி பேசியிருப்பதால் அதற்கு நிச்சயம் ஒரு பலன் இருக்கும் என்றே நான் நம்பியதால் தான் அவ்வாறு எழுதினேன். இது போலீசுக்கும், நிர்வாகத்துக்கும் ஒரு மெசேஜ்," என்றார் ரவிக்குமார் ஒன் இந்தியாவிடம்..

மேலும் பிரதமரின் இந்தப் பேச்சு தலித் எதிர்ப்பை மையக் கருவாக வைத்து பிழைப்புவாத அரசியல் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை என்கிறார் அவர்.

Is VCK moving towards BJP?

"ஆம். உத்திரபிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தலித் எதிர்ப்பையே தங்களது அரசியிலின் ஜீவாதாரமாக கொண்டிருப்பவர்களின் வாயை இது அடைத்துள்ளது. வெளிப்படையாக இவர்கள் தலித்துக்களுக்கு எதிராகப் பேசுவதை பிரதமரின் இந்தப் பேச்சு ஓரளவுக்காவது கட்டுப்படுத்தியிருக்கிறது. மோடியின் பேச்சு ஒரு பாசிட்டிவ் டெவலப்மெண்ட். தலித்துக்கள் மீதான தாக்குதல்கள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கிறது. இதற்கு முன் நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோரது ஆட்சிக் காலங்களில் எத்தனை முறை இந்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடந்திருக்கின்றன?,'' என்று மேலும் கூறும் ரவிக்குமார், இதே கருத்தைத்தான், அதாவது மோடியின் பேச்சை வரவேற்று, தலைவர் திருமாவளவனும், புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் வெளியிட்டார் என்கிறார்.

இந்த விஷயத்தில் திருமாவளவன் வெளிப்படையாக இதுவரையில் கருத்து சொல்லவில்லை. ஆனால் இது மிகவும் சீரியஸான ஒரு அரசியல் நிகழ்வாக சிலரால் பார்க்கப்படுகிறது. ரவிக்குமாரின் கருத்துக்கள் பாஜக வுக்கு விசி கட்சி கொடுக்கும் 'ஒரு அரசியல் சமிக்ஞை,' (a political signal or message) என்ற கருத்தும் நிலவுகிறது.

"நான் அப்படித்தான் பார்க்கிறேன். கடந்த மூன்று தேர்தல்களில் விசி கட்சி தோல்விகளைத்தான் சந்தித்துள்ளது. கட்சி பலவீனமாகி விட்டது. ஜெயலலிதாவும், கருணாநிதியும் தங்களில் ஒருவரது ஆதரவு இல்லையென்றாலும் வேறெவராலும் எம்எல்ஏ, எம் பி ஆக முடியாதென்பதை 2016 தேர்தலில் உறுதிப்படுத்தி விட்டார்கள். ஆகவே ஜெ வும், கருணாநிதியும் மற்ற கட்சிகள் அனைத்தையும் அழிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் 80 சதவிகித வாக்கு வங்கி இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் அரசியல் உயிர்ப் பிழைத்தலுக்கு (political survival) ஏதாவது ஒரு பெரிய கட்சியை சார்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் விசி கவுக்கு ஏற்பட்டிருக்கிறது. அது காங்கிரஸாக இருக்க முடியாது. காரணம் திமுக வை மீறி விசி கட்சியை காங்கிரஸால் கூட்டணிக்குள் கொண்டு வர முடியாது,'' என்று ஒன் இந்தியா விடம் கூறினார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

அத்தகைய அரசியல் கட்சி எனும்போது அதற்கு தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லாவிட்டாலும், தேசீய அளவில் அது வலுவான கட்சியாக இருந்தால் அதுவே போதும் என்கிறார் அவர். "ஈழப் பிரச்சனையை வைத்து காங்கிரசுடன் இருந்த அரசியல் வாய்ப்பை அவர்களாவே அழித்துக் கொண்டார்கள். ஆனால் அதே தவறை தலித் விஷயத்தை வைத்து பாஜக வுடன் செய்ய விசி கட்சி துணியாது. ரவிக்குமாரின் இந்த கருத்துக்கள் பாஜக வுக்கு, விசி கட்சி கொடுத்திருக்கும் ஒரு அரசியல் சமிக்ஞை, மெசேஜ். விசி கட்சி ஒரு புதிய அரசியல் கட்சியுடனான உறவுக்கு கதவுகளைத் திறக்கத் துவங்கியிருக்கிறது, ஏனெனில் உள்ளூரின் இரண்டு பிரதான கட்சிகளும் அவர்களுக்கு கதவைச் சாத்தி விட்டார்கள்,'' என்று மேலும் கூறுகிறார்.

பாஜக வைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு அநேகமாக அடுத்த தேர்தலில் தலித் கட்சிகளை சேர்த்துக் கொள்வது என்பது லாபம் தருவதாகத்தான் அமையும். ஏற்கனவே நாடு முழுவதிலும் பசுவின் காவலர்கள் தலித்துகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கும் வன்முறையும், அட்டூழியங்களும் தலித் கட்சிகளின் ஆதரவை பாஜக வுக்கு இன்றியமையாததாக ஆக்கி விட்டிருக்கின்றன.

"குறியீட்டளவில் பாஜக வுக்கு இது மிகவும் லாபகரமானது. தமிழகத்தில் தலித் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதால் அவர்களுக்கு இங்கு எம் பி சீட்டுக்கள் கிடைக்கிறதோ இல்லையோ மாறாக தேசியளவில் தலித்துக்களுக்கு எதிரான கட்சி என்ற குற்றச்சாட்டை முறியடிக்கவும் இது உதவும். மற்ற மாநிலங்களில் எம் பி சீட்டுகளை வெல்லவும் கூட இது உதவும்,'' என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.

ஏற்கனவே பாஜக கூட்டணியில் ஒரு முறை விசி கட்சி இருந்திருக்கிறது. அஇஅதிமுக வுடன் இனிமேல் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் எந்தக் கட்சியையும் இனிமேல் சேர்ப்பதில்லை என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருக்கிறார். தாங்கள் திமுக கூட்டணிக்கு வருவதை மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமாவளவன் ஊர்ஜிதப் படுத்திவிட்டார். மூன்றாவது அணி அல்லது மக்கள் நலக் கூட்டணி என்ற கோஷங்கள் அடுத்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அவ்வளவு சுலபமான முயற்சிகள் இல்லை என்பது விசி கட்சியின் தலைமைக்கு புரிந்திருக்கவே சாத்தியக் கூறுகள் அதிகம். தமிழகத்தில் பாஜக வுடன் சேர்வதால் இங்கு அரசியல் ரீதியிலான உடனடி லாபம் இல்லாவிட்டாலும் தேசியளவிலான வாய்ப்புகளை, விசி கட்சிக்கு, குறிப்பாக அதன் தலைமைக்கு அந்த அரசியல் உறவு கொண்டு வரலாம்.

ஒரு பக்கம் மதச் சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடத்திக் கொண்டு, மறுபக்கம் பாஜகவுடனான உறவா எனக் கேட்கலாம். இது அரசியிலில் சர்வ சாதாரணம் என்பது அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குப் புரியும்.

1999 ம் ஆண்டு ஏப்ரல் 17 ம் தேதி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசை ஜெயலலிதா கவிழ்த்தார். அப்போது திமுக வின் ஆறு எம் பிக்கள் வாஜ்பாய்க்கு வாக்களித்தனர். அதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு மதச் சார்பின்மையை காப்பாற்ற ஒரு கோடி கையெழுத்து என்று இயக்கத்தை சென்னையில் அப்போதய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி துவக்கி வைத்தார். பூசி மெழுகிய வார்த்தைகளில் வர்ணிக்கப் பட்ட, அதே சமயம் பட்டவர்த்தனமாக வாஜ்பாய் அரசுக்கு எதிரான நடவடிக்கை அது. இதுபோன்ற உதாரணங்கள் எண்ணிலடங்காமல் தேசிய மற்றும் மாநில அரசியலில் கொட்டிக் கிடக்கின்றன. மேலும் இதுபோன்ற அரசியல் புதிய அணிச் சேர்க்கைகள், எதிரும், புதிருமான கட்சிகள் ஒன்று சேர்வது என்பது ஓரிரு நாட்களில் நடக்காது. கொஞ்சங் கொஞ்சமாய்த்தான், அங்குலம் அங்குலமாய்த்தான் அது நகரும்.

இந்த சாத்தியக் கூறு பற்றி ரவிக்குமாரிடம் கேட்டபோது, "இது அறவே சாத்தியமற்றது. எங்களுடைய கொள்கைகளில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை. சிறுபான்மையினரின் நலன்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளில் நாங்கள் ஒருபோதும் ஈடுபட மாட்டோம். பாஜக வுடனான அரசியல் கூட்டணிக்கு இடமேயில்லை,'' என்றார்.

ஒரு ஆங்கிலப் பழமொழிதான் நினைவுக்கு வந்தது: "காதலிலும், அரசியிலிலும் இல்லை என்று சொன்னால் இருக்கிறது என்று அர்த்தம் .... இருக்கிறது என்று சொன்னால் இல்லை என்று அர்த்தம்!"

English summary
Is VCK moving towards BJP in politics? Here is an analysis of columnist Mani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X