For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஸ்பெக்ட்ரம் ஊழல்'... நீலகிரியில் ஜெ. காட்டம்! கருணாநிதிக்கு அடுக்கடுக்கான கேள்விகள்!

By Mathi
|

உதகமண்டலம்: நீலகிரி தொகுதியில் பிரசாரம் செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்வைத்து திமுக தலைவர் கருணாநிதிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளராக ஆ. ராசா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சி. கோபாலகிருஷ்ணனை நிறுத்தியுள்ளது.

நீலகிரியில் நேற்று கோபாலகிருஷ்ணனை ஆதரித்து ஜெயலலிதா பேசியதாவது:

மக்கள் சேவையில் நாட்டமுள்ள கட்சி அ.தி.மு.க. மக்கள் நலனை முன்னிறுத்தி நடவடிக்கைகளை எடுக்கும் கட்சி அ.தி.மு.க. ஆனால் தங்கள் சொந்த நலன்களை முன்னிறுத்தி நடவடிக்கைகளை எடுக்கும் கட்சி தி.மு.க. இந்த தொகுதியின் வேட்பாளராக தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் ஆ.ராசா. சென்ற முறையும் ராசா இந்த தொகுதியில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். உங்களுக்கு ராசா ஏதாவது செய்தாரா? இல்லை.

நீலகிரி மாவட்ட மக்களுக்கு என ராசா ஏதாவது திட்டங்களை கொண்டு வந்தாரா?, இல்லை. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் மந்திரி பதவியை வகித்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்திய நாட்டிற்கு இழப்பு ஏற்படும் வகையில் ஊழல் புரிந்தவர் ராசா. இதனால் நீலகிரி தொகுதிக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டதா? இல்லையே. இதனால், லாபம் அடைந்தது கருணாநிதியின் குடும்பம் தான். நஷ்டம் அடைந்தது இந்தியா.

2010-லேயே ஏன் வெளியேறவில்லை?

2010-லேயே ஏன் வெளியேறவில்லை?

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராசா நிரபராதி என்று ஸ்டாலின் சொல்கிறார். ராசா எந்த தவறும் செய்யவில்லை; போடப்பட்ட வழக்குகள் எல்லாம் இப்போது ஆடிக்கொண்டிருக்கின்றன; அந்த வழக்குகளை நிரூபிக்கக்கூடிய சாட்சிகள் இல்லை என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்று கருணாநிதி சொல்கிறார்.

இந்த வழக்கில் தி.மு.க. ஆதாயம் அடையவில்லை என்றால், இந்த வழக்கில் ராசா குற்றமற்றவர் என்றால், தற்போது கருணாநிதி கூறுவதைப்போல காங்கிரஸ் கட்சி பழி வாங்குகிறது என்றால், 2010-ம் ஆண்டே மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து தி.மு.க. விலகி இருக்கலாமே?. ஆனால், அதை செய்தாரா கருணாநிதி? இல்லையே. மாறாக, அந்த கூட்டணியிலேயே ஒட்டிக்கொண்டு இந்த வழக்கில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று தானே கருணாநிதி முயற்சி செய்தார்?.

எந்த விதிமுறையையும் பின்பற்றாமல், யாரையும் மதிக்காமல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை தனியாருக்கு விற்றதில் தான், இந்திய அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

ஏழை மக்கள் பயன் அடைய வேண்டும் என்பதற்காக தொலை தொடர்பு துறையில் தான் ஒரு புரட்சியை ஏற்படுத்தியதாக ராசா கூறி வருகிறார். ஆனால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற பல நிறுவனங்கள் ஓர் ஆண்டு கடந்தும் தங்களது சேவையை தொடங்கவே இல்லையே. எப்படி ஏழைகள் பயன் அடைய முடியும்?. தனியார் நிறுவனங்கள் தானே பயன் அடைந்தன?.

தேர்தல் அறிக்கையில் பொய்..

தேர்தல் அறிக்கையில் பொய்..

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததாக தம்பட்டம் அடித்து இருக்கிறது. ராசாவும் இதையே கூறி வருகிறார். புதிய உரிமங்கள் பெற்ற எந்த நிறுவனம் இந்த வசதியை செய்து கொடுத்தது? எந்த நிறுவனமும் இந்த வசதியை செய்து கொடுக்கவில்லையே. கடந்த தேர்தலுக்கு முன்பு பி.எஸ்.என்.எல். நிறுவனம் தான் இந்த வசதியை வழங்கியது. தேர்தலுக்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தற்போது எங்கே நடைமுறையில் இருக்கிறது, சொல்ல முடியுமா?.

2001-ம் ஆண்டு நிர்ணயித்த விலையில், 2008-ம் ஆண்டு விற்பதை எப்படி நியாயம் என்கிறார் கருணாநிதி?. தன்னுடைய சொத்தாக இருந்தால் இந்த முறையை கடைபிடிப்பாரா கருணாநிதி?.

கலைஞர் டிவிக்கு பணம் வந்தது எப்படி?

கலைஞர் டிவிக்கு பணம் வந்தது எப்படி?

கருணாநிதியினுடைய சொத்தாக இருந்தால், 2001-ல் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே 2008-ம் ஆண்டு விற்பனை செய்வாரா?. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எதுவுமே நடக்கவில்லை என்று கருணாநிதி கூறுகிறார். அப்படி என்றால் கருணாநிதியின் மனைவி மற்றும் மகள் கனிமொழி இயக்குனர்களாக இருந்த குடும்ப தொலைக்காட்சியின் கணக்கில் 214 கோடி ரூபாய் பணம் எப்படி வந்தது? யாருடைய கணக்கில் இருந்து வந்தது? எதற்காக கொடுத்தார்கள்?. ஏன் கொடுத்தார்கள்?.

உண்மையிலேயே நியாயமான முறையில் அந்த பணம் பெறப்பட்டிருந்தால், அந்த பணத்தை ஏன் அவசர அவசரமாக திருப்பி கொடுத்தார்கள்?. அந்த பணம் எப்படி திருப்பி கொடுக்கப்பட்டது? ஏன் திருப்பிக்கொடுக்கப்பட்டது? இவற்றையெல்லாம் கருணாநிதி ஏன் விளக்கவில்லை? ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் கருணாநிதி குடும்பத்தினருக்கு பணம் சென்றது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?.

தொலைபேசி உரையாடல்கள் உண்மைதானே!

தொலைபேசி உரையாடல்கள் உண்மைதானே!

அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் ஏன் பேசினார்கள்? என்ன பேசினார்கள்? இதை விளக்க கருணாநிதி தயாரா? ராசாவால் இதற்கு பதில் அளிக்க முடியுமா? தொலைக்காட்சி கணக்குகளை திருத்தும்படி மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் அண்மையில் வெளியிடப்பட்டதே? இதற்கு கருணாநிதியால் விளக்கம் அளிக்க முடியுமா? இவை எல்லாம் உண்மைக்கு மாறானவை என்று கருணாநிதி கூறுவாரேயானால் இதனை வெளியிட்டவர்கள் மீது ஏன் இதுவரை மானநஷ்ட வழக்கு தொடுக்கவில்லை? ஊழல் நடந்தது என்பதை ஒத்துக்கொள்கிறாரா கருணாநிதி?.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான அனைத்து விவரங்களும் பாரதப் பிரதமருக்கும், மத்திய நிதி அமைச்சருக்கும் தெரியும் என்று ராசாவும், தி.மு.க.வினரும் கூறி வருகின்றனர். அப்படி என்றால், என்னென்ன விவரங்கள் எல்லாம் அவர்களுக்கு தெரியும்?. அவர்களுக்கு தெரிந்து தான் ராசா ஊழல் புரிந்தார் என்கிறாரா கருணாநிதி?.

காங்கிரஸ்காரர்களை ‘‘நன்றி மறந்தவர்கள்'' என்கிறார் கருணாநிதி. சிதம்பரமோ ‘‘அவர் சில வழக்குகளை மனதில் வைத்து சொல்கிறார். அந்த வழக்குகளை காங்கிரஸ் கட்சி போடவில்லை. வழக்கு தொடுப்பது அரசியல் கட்சியின் வேலை அல்ல. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வது காவல் துறை. அதை ஏற்பதும் நிராகரிப்பதும் நீதிமன்றத்தின் வேலை'' என்று கூறி இருக்கிறார் ப.சிதம்பரம்.

காங்கிரஸுக்கு தூது

காங்கிரஸுக்கு தூது

கடந்த சில நாட்களுக்கு முன்பு 113 கோடி ரூபாய் வருமானவரியை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று கருணாநிதி தொலைக்காட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எனவே தான் கருணாநிதி சேலத்திலே நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, ‘‘கை சின்னம் என்னோடு இல்லை என்பதற்காக கை விட்டு விட்டதாக யாரும் கருதக்கூடாது. மதசார்பற்ற முறையிலே ஒரு ஆட்சி நடைபெறுவதற்கு யார் கை கொடுத்தாலும் அந்தக் கையை குலுக்கி வரவேற்போம் என்று மாத்திரம் நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்'' என்று கூறி இருக்கிறார்.

எங்கு அடித்தால் கருணாநிதிக்கு வலிக்கும் என்பதை காங்கிரஸ் கட்சி நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கிறது. வாக்காள பெருமக்களே. கருணாநிதியின் தன்னலத்தை, சுயரூபத்தை புரிந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அரிதான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை அடிமாட்டு விலைக்கு விற்ற கட்சி தி.மு.க. அதன் மூலம் நாட்டிற்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய கட்சி தி.மு.க. நிலஅபகரிப்புக்கு பெயர்போன கட்சி தி.மு.க. இவர்களுக்கு வாக்களித்தால், இவர்கள் இந்திய நாட்டையே அபகரித்து விடுவார்கள்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

English summary
Tamil Nadu Chief Minister Jayalalithaa on Thursday claimed DMK chief M. Karunanidhi's recent overtures towards Congress was in the backdrop of an Income Tax notice sent to a TV channel, owned by his family, seeking Rs 113 crore within a month. "Congress knows where to hit to make Karunanidhi writhe in pain", she said at an election rally at nearby Karamadai, referring to his reported remarks that DMK would not hesitate to shake hands with any ‘hand' to uphold secular rule in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X