• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு ஜெ தரப்போகும் ஷாக்!

By R Mani
|

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையில் மதுவிலக்குப் பற்றி மருந்துக்கும் ஒரு வார்த்தை கூட இல்லை. கடந்த 15 நாட்களாக தமிழகத்தை அமளிக் காடாக மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் பற்றி முதலமைச்சர் ஒரு வார்த்தை கூட தனது உரையில் பேசவில்லை.

மதுவிலக்குக் கோரிய சசிபெருமாள் மாண்டு போன பின்னர் சூடு பிடிக்கத் துவங்கிய இந்த விவகாரம், பச்சையப்பன் கல்லுரி மாணவர்கள் சென்னை சேத்துப்பட்டில் டாஸ்மாக் கடையை அடித்து உடைத்த பின்னர் மாநிலம் முழவதும் பரவியது.

Jayalalithaa and Prohibition

அனேகமாக அனைத்து எதிர்க்கட்சிகளுமே பூரண மதுவிலக்கைக் கோரி தமிழகத்தில் போராடத் துவங்கி விட்டன. கேலிக்கூத்தின் உச்சகட்டமாக திமுக பூரண மதுவிலக்குக் கோரி ஆர்பாட்டங்களை அறிவித்து களத்திலும் இறங்கி போராடத் துவங்கி விட்டது. திமுக வின் போராட்டத்திற்கு வந்தவர்களில் சிலர் 'டாஸ்மாக் பாரில் தீர்த்தம் சாப்பிட்டு விட்டு தலைவர் கலைஞரின் அழைப்பிற்கு இணங்கி, தளபதியின் வழியொற்றி போராட்டத்தில் கலந்து கொண்டனர்' என்பதற்கு நானே சாட்சி. இது 'கொள்கை வழி வந்த, லட்சியத்தை முன்னெடுக்கும் திமுக' வின் மற்றுமோர் அறப் போராட்டம்.

இன்று தமிழகத்தில் மதுவிலக்குக் கோரி போராடுவதென்பது ஒரு விதமான ஃபேஷனாக மாறிக் கொண்டிருக்கிறதென்று சொன்னால் மிகையாகாது. காரணம் மதுவிலக்கு என்ற மிகப் பெரிய விஷயத்தைப் பற்றிய ஆரம்ப அறிவு கிஞ்சித்தும் இல்லாதவர்களும் இன்று மதுவிலக்குக் கோரி, தெருக்களிலும், தொலைக்காட்சி அரங்கங்களிலும், பொது மேடைகளிலும் முழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

தேர்தல் காலம் என்பதால் எல்லா அரசியல் கட்சிகளும் இதனை கையில் எடுத்துக் கொண்டு விட்டனர். இதில் திமுக மதுவிலக்குப் பற்றி பேசுவதும், பூரண மதுவிலக்கை லட்சியம் என்று அறிவிப்பதும் காமெடி சீனின் வீரியத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே சிகிச்சை மையங்களை நடத்திவரும், விஞ்ஞானரீதியாக இந்தப் பிரச்சனையை கையாண்டு வருபவர்கள் தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களை பார்த்து முகம் சுளித்துக் கொண்டிருக்கின்றனர். ‘இந்தப் பிரச்சனையின் தீவிரம் தெரியாதவர்கள், இதன் பல பரிமாணங்கள் தெரியாதவர்கள் இன்று மதுவிலக்கு வேண்டும் என்று கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றனர். குடிப்பவர்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துவிட்டதென்று கூறும் இவர்கள் இது சம்மந்தமாக என்ன ஆய்வுகளை மேற் கொண்டனர்? எந்த விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் இந்த கருத்துக்களை கூறுகின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை. குடிப் பழக்கம் ஒரு நோய்தான். ஆனால் அதற்கு தீர்வு இவர்கள் சொல்லும் மதுவிலக்கல்ல. மதுவுக்கான தேவையை படிப்படியாகக் குறைப்பதுதான். ஆனால் திடீரென்று மதுவிலக்கு அறிமுகமானால், அடுத்த வடிகாலாக கள்ளச்சாராயம் உள்ளிட்ட ஆபத்தான போதை வழிக்கு மக்கள் திரும்பவே அதிக வாய்ப்புள்ளது. அது சமூகத்தை மேலும் சீரழித்துவிடும்,' என்று என்னிடம் சொன்னார், சென்னை அடையாரில் உள்ள டிடிகே மறுவாழ்வு மையத்தில் ஆயிரக்கணக்கான குடிக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளித்த மூத்த மருத்துவர் ஒருவர்.

இதுதான் இங்கு கவனிக்கத்தக்கது. மதுவிலக்கு கோரி போராடுபவர்கள் பூரண மதுவிலக்கு என்று கோருகிறார்கள். ஆனால் விஞ்ஞானரீதியாக இந்த விவகாரத்துடன் தொடர்பில் உள்ளவர்கள், குடிகாரர்களுக்கு சிகிச்சை அளித்தவர்கள், அளிப்பவர்கள் மதுவிலக்கை கோரவில்லை. ‘நூறு சதவிகிதம் வெற்று அரசியல் கோஷமாக மதுவிலக்குப் பிரச்சாரத்தை இவர்கள் இன்று மேற்கொண்டிருக்கிறார்கள். பிரச்சனைக்கு மாற்றாக இவர்கள் வைக்கக் கூடிய தீர்வு பிரச்சனையை தீர்க்காது, மாறாக புதிய, புதிய வில்லங்கங்களையே இது கொண்டு வர உதவும்' என்று மேலும் சொல்லுகிறார் அந்த மருத்துவர்.

மற்றோர் முக்கியமான விஷயம் எந்த சூழலில் ஜெயலலிதா மதுவிற்பனையை நாட்டுமையாக்கி முழுவதும் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாரென்பது. இது 2003 ல் நடந்தது. காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நடந்த மதுக்கடை ஏலத்தில் எதிர்கட்சியான திமுக காரர்களே மதுக்கடைகளை ஏலம் எடுத்தனர். அப்போதெல்லாம் ஆண்டு தோறும் மதுக்கடை ஏலம் நடக்கும் நாட்களில் அரங்கேறிய வன்முறைகள் கொஞ்சநஞ்சமல்ல. சுமோக்களிலும் மினி வேன்களிலும் ஆயுதங்களுடன் ஏதோ போருக்குச் செல்வது போலத்தான் வருவார்கள் ஏலம் கேட்டும் பெருந்தலைகள். பெரும்பாலும் முன்னாள் மந்திரிகள், எம்எல்ஏக்கள், மாவட்ட, வட்டங்கள் அல்லது இவர்களின் பினாமிகள்!

ஆளும் கட்சியான அஇஅதிமுக வால் திமுக வின் இந்த சிண்டிகேட்டை உடைக்க முடியவில்லை. அப்போது உளவுத்துறை கொடுத்த அறிக்கையின் மூலம்தான் இது காலம் காலமாய், எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திலிருந்தே திமுக வின் கோட்டையாக விளங்கி வருகிறதென்று ஜெ வுக்குத் தெரிய வந்தது.

90 சதவிகிதத்துக்கும் மேல்,யார் ஆட்சியில் இருந்தாலும், மதுக்கடை ஏலமும், பார் ஏலமும் திமுக விடம் தான் இருக்கும் என்று கூறப்பட்டது. ஜெ மதுவிற்பனையை நாட்டுடமை யாக்கியதற்கு இதுவும் ஒரு காரணம். இன்று அதே திமுக தான் மதுவிலக்குக் கோரி, அதுவும், பூரண மதுவிலக்குக் கோரி தெருவில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா பூரண மதுவிலக்கை தனது சுதந்திர தின உரையில் அறிவிப்பாரென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெ வின் அரசியலை சற்றேனும் அவதானித்தவர்களுக்கு நன்கு தெரியும் அவர் சத்தியமாக மதுவிலக்குப் பற்றி பேசமாட்டாரென்று. தேர்தல்களுக்கு இன்னமும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில் ஒரு வேளை, தேர்தல் நெருக்கத்தில் வேண்டுமானால் இந்த விஷயத்தில் அவர் முக்கிய முடிவை அறிவிக்கலாம். தற்போது அறிவிப்பது பொருத்தமில்லாதது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

மற்றொன்று, பொருளாதார நிலைமை. ஆண்டுக்கு 30,000 கோடி ரூபாய் வருமானம் தரும் ஒரு விஷயத்தை இழுத்து மூடுவதென்பது யார் ஆட்சியில் இருந்தாலும் சாத்தியமற்றது. பதவியில் உள்ளவர்களுக்குத்தான் அது புரியும். ஆட்சிக் கட்டிலின் அருகில் வருவதற்கு அறவே வாய்ப்பற்ற கட்சிகளுக்கும், வெற்று கோஷங்களை முழங்கிக் கொண்டு, அனு தினமும், உணர்ச்சிப் பிழம்பாய், சிறு, சிறு விஷயங்களுக்குக் கூட பொய்த் தோற்றம் காட்டிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இது தெரியாது, புரியாது. ஒருவேளை புரிந்தாலும் அவர்கள் அப்போதும் இதே நாடகத்தைத் தான் நடத்திக் கொண்டிருப்பார்கள்.

இதில் சுவாரஸ்யமான மற்றோர் விஷயம், அஇஅதிமுக வின் அதிகாரபூர்வ ஏடான நமது எம்ஜிஆரில் சனிக்கிழமை வந்த ஒரு கட்டுரை. ‘காய்ச்சலாமா, கடத்தலாமா' என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையில் மதுவிலக்குக் கோரிக்கை நார் நாராகக் கிழிக்கப்பட்டிருக்கிறது. உலக வல்லரசான அமெரிக்காவிலேயே, தோற்றுப் போன ஒரு விஷயத்தை இன்று தமிழகத்தில் சிலர் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதாக இந்த கட்டுரை சாடுகிறது. மேலும் கள்ளச் சாராயத்தை காய்ச்சுபவர்கள் யாரென்று தெரியும் என்று கூறும் இந்தக் கட்டுரை, இவர்களுக்கு லாபம் உண்டாக்கவே டாக்டர் ராமதாஸ் மதுவிலக்கைப் பற்றி பேசுவதாக கட்டுரை சொல்லுகிறது. மதுவிலக்குப் பற்றி வாய் கிழிய பேசும் ராமதாஸ் இந்தக் கோரிக்கையை புதுச்சேரியில் வைத்துப் போராடத் தயாரா என்றும் நமது எம்ஜிஆர் கட்டுரை கேள்வி எழுப்புகிறது.

நியாயமான கேள்விகள்தான் இவை. இன்று தமிழகத்தில் உள்ள பல பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல், மதுவிலக்கு என்ற ஒற்றை விவகாரத்தை எதிர்கட்சிகள் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட இது 2009 முதல் 2014 வரையில் இலங்கைப் பிரச்சனை என்ற ஒன்றை பிடித்து எதிர்கட்சிகள் தொங்கிக் கொண்டிருந்ததை நினைவுப்படுத்துகிறது. ஆனால் தேர்தல்கள் அறிவிக்கப் பட்டவுடன் இவை அத்தனையும் ஒரு நொடியில் காற்றில் பறந்து போகும். யாருடன் யார் கூட்டணி சேரலாம், எவ்வளவு எம்எல்ஏ சீட்டுகளுக்கு பேரம் பேசலாம் என்பதிலேயே முழு கவனமும் திரும்பி விடும். இலங்கை விவகாரம், மனித உரிமை மீறல் என்றேல்லாம் காட்டுக் கத்தலாய் கத்தி விட்டு, 2011 மற்றும் 2014 தேர்தல்களில், களப் பிரச்சாரத்தில் இவை தேட வேண்டிய கோஷங்களாக மாறியதை நாடு அறியும்.

அன்று இலங்கை பிரச்சனைக்காக வாய்ச் சவடால்களிலேயே மாதக்கணக்கில் அரசியல் பண்ணியவர்கள், தேர்தல் பிரச்சாரத்தில் அது குறித்து வாய் திறக்காமல், பம்மியதை தமிழகம் கண்டது. அதே போலத்தான் இன்று மது விலக்குப் பிரச்சாரமும். அன்று இலங்கைத் தமிழர் பிரச்சனை, இன்று பூரண மதுவிலக்கு.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. ஜெயலலிதா புத்திசாலித்தனமான, சாதுர்யமான, மக்களின் நாடித்துடிப்பை அறிந்து வைத்திருக்கும் அரசியல்வாதி. ஒருவேளை இது மக்களின் உண்மையான பிரச்சனையாக மாறினால், ஜெயலலிதாவே மதுவிலக்கை கையில் எடுத்துவிடுவார். 2011 ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார். ஜெ வின் 1991 - 1996 மற்றும் 2001 - 2006 ஆட்சிக் காலங்களுக்கும் 2011 லிருக்கும் மூன்றாவது ஆட்சிக் காலத்துக்குமான வித்தியாசம் இதுதான்.

அதாவது மக்களின் உணர்வுகளோடு கலந்து போன பிரச்சனை என்று அவர் நினைக்கும் பிரச்சினகளை - கூடங்குளம், மீத்தேன், கெய்ல் குழாய் பதிப்பு, இலங்கை மீதான பொருளாதார தடை, ராஜீவ் கொலையாளிகள் விடுதலை - என்று எந்த விஷயமாக இருந்தாலும், அதனை ஜெயலலிதா தானே கையில் எடுத்துக் கொண்டு விடுகிறார். இதனால் எதிர்கட்சிகளுக்கு எந்த விவகாரமும் இல்லாமல் அவர்களை நிராயுதபாணிகளாக்கி விடுகிறார். இதை அவர் மதுவிலக்கு விஷயத்திலும், தேவைப் பட்டால், தேர்தல் சமயத்தில் செய்யலாம். அப்போது இந்த எதிர்கட்சிகள், குறிப்பாக, திமுக, நிராயுதபாணியாய் தேர்தல் போர்க்களத்தில் நிற்கும். ஜெ வின் கடந்த நான்காண்டு அரசியலை உற்று நோக்குபவர்களுக்கு ஒன்று தெரியும். எப்போது மெளனம் காக்க வேண்டும், எப்போது ஆயுதம் தூக்க வேண்டும், எப்போது எதிர் கட்சிகளை நிராயுதபாணிகளாக்க வேண்டும் என்பது ஜெயலலிதா வுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

யார் கண்டது... மதுவிலக்கு என்ற மாய்மாலத்தை மக்களிடத்தில் கூவி, கூவி விற்றுக் கொண்டிருக்கும் எதிர்கட்சிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தேர்தல் நேரத்தில் கொடுக்க, அவர்களது ஆயுதத்தை ஒரு நொடியில் பிடுங்க ஜெ தயாராகிக் கொண்டிருக்கலாம்!

-ஆர். மணி

 
 
 
English summary
Is Prohibition possible in Tamil Nadu? What are the plans CM Jayalalithaa have to face the oppositions prohibition protests? Here is our columnist's predictions on this issue.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X