For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. மறைந்து 30 நாட்கள்... இதுவரை நடந்தேறிய சசி போட்டோ ஷூட் உள்ளிட்ட கூத்துகள்!

இன்று ஜெயலலிதா மறைந்து 30-வது நாள். ஆனால் அவர் தலைமை ஏற்று நடத்திய அதிமுக எனும் பேரியக்கம் கொஞ்சம் கூட துயரம் ஏதுமின்றி அடுத்த கட்ட 'ஆட்டங்களுக்கு' அசால்ட்டாக நகர்ந்து கொண்டிருப்பதுதான் பெரும் சோகம்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மறைந்த இன்றுடன் 30 நாட்கள்தான் நிறைவடைகிறது.. ஆனால் அவரது மறைவின் துயரம் எதுவுமின்றி நாள்தோறும் 'கூத்துகளை' அரங்கேற்றி வருகின்றனர் அவரது தோழியாக இருந்ததாக சொல்லப்படும் சசிகலா உட்பட அதிமுக நிர்வாகிகள்.

டிசம்பர் 5-ந் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவர் மரணத்தை தழுவிக் கொண்டிருந்ததாக சொல்லப்படும் கடைசி நிமிடங்களிலேயே தங்களது வேஷத்தைக் கலைத்துப் போட்டு உண்மை முகத்துடன் வெளிப்பட்டனர் அவரது தோழியும் அதிமுக நிர்வாகிகளும்.

ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டதுதான் தாமதம்.. அவரால் அடித்து விரட்டப்பட்ட சிறைகளுக்குள் தூக்கிபோடப்பட்ட அதிமுகவின் துரோகிகள் என அடையாளம்காட்டப்பட்ட நடராஜன் உள்ளிட்ட மன்னார்குடி கோஷ்டி அவரது உடலை சுற்றி ஆக்கிரமித்து நின்று கொண்டது அதிமுக தொண்டர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதைவிட கொடுமை அதிமுக அமைச்சர்கள் தரையில் அமர்ந்து மன்னார்குடி கோஷ்டிக்கு அடிமைகளாக தங்களை காட்டிக் கொண்டதுதான்.

சசிகலாவின் சிரிப்பு

சசிகலாவின் சிரிப்பு

தோழி சசிகலாவின் முகத்தில் எந்த ஒரு சோகமும் இல்லை. பல நேரங்களில் சொந்தங்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தார். செயற்கைத்தனமாக சில நேரங்களில் கண்ணை துடைத்துக் கொண்டார்.

ஹாயாக இருந்த அமைச்சர்கள்

ஹாயாக இருந்த அமைச்சர்கள்

ஜெயலலிதா சிறை சென்றபோது கண்ணீரும் கம்பலையுமாக கூப்பாடு போட்டு மண்சோறெல்லாம் தின்ற வளர்மதி வகையறாக்கள் அரட்டை அடித்துக் கொண்டு கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தனர். அதிமுக அமைச்சர்கள் டிப் டாப் உடையில் அட ஒரு கருப்பு பேட்ஜ் கூட அணியாமல் ஹாயாக அமர்ந்திருந்ததுதான் அநியாய கொடுமை.

விருந்தினர்போல...

விருந்தினர்போல...

தொண்டர்களோ இந்த மரணத்தை தாங்க முடியாமல் நெஞ்சிலடித்து ஒப்பாரி வைத்து கொண்டு ஓரமாக நகர்ந்து கொண்டிருந்தனர்... அவரால் ஏற்றம் பெற்றவர்களோ சலனம் ஏதுமற்றவர்களாக ஏதோ அரசாங்க நிகழ்ச்சிக்கு வந்து சென்ற விருந்தாளிகளாகத்தான் இருந்தனர்.

ஆட்டம் போட்ட மன்னார்குடி கோஷ்டி

ஆட்டம் போட்ட மன்னார்குடி கோஷ்டி

ஜெயலலிதா மறைந்த அதே நாளிலே அவரது உடல் எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கே ஆளுநருக்கு இணையாக மன்னார்குடி கோஷ்டி அமர்ந்து கொண்டு ராகுல் உள்ளிட்டோரை பின்னிருக்கை தள்ளி தங்களது 'வருகை'யை கட்டியம் கூறி அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தது. இதன் உச்சமாக ஜெயலலிதா உடல் புதைக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அதிமுகவின் எதிர்காலத்தை நாங்களே தீர்மானிப்போம் என அந்த மண்ணின் ஈரம் காயும் முன்பே அதே இடத்திலேயே பேட்டி கொடுத்தார் சசிகலாவின் கணவர் நடராஜன்.

இரங்கல் கூட்டம் எங்கே?

இரங்கல் கூட்டம் எங்கே?

அதிமுகவினர் அதிகாரப்பூர்வமான இரங்கல் கூட்டங்களை நடத்தவில்லை. தன்னெழுச்சியாக சில ஊர்களில் நடத்தப்பட்டன.. அவ்வளவுதான்..

நாடகங்கள் தொடக்கம்

நாடகங்கள் தொடக்கம்

ஜெயலலிதா மறைந்த 2-வது நாள்தான் நாடகத்தின் முதல் காட்சி அரங்கேறியது... மதுசூதனன், செங்கோட்டையன், கோகுல இந்திரா, சைதை துரைசாமி உள்ளிட்டோர் சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக வேண்டும் என கெஞ்சும் வீடியோ ஒன்று வெளியானது. அப்போது சசிகலா நடராஜன் என அழைப்பதா? விகே சசிகலா என அழைப்பதா? என்ற குழப்பம் அதிமுகவினருக்கே ஏற்பட்டது.

சின்னம்மா சசி...

சின்னம்மா சசி...

ஜெயலலிதா இறந்துவிட்டாரே என்ற துயரம் எதுவும் இல்லாமல் ஒரு சில நாட்களிலேயே சசிகலாவை 'சின்னம்மாவாக்கி' ஜெயலலிதாவை 'பெரியம்மாவாக்கி' பதவிகளுக்காகவும் பதவிகளை தக்க வைக்கவும் போயஸ் கார்டனில் வரிசை கட்டி நிற்க தொடங்கினர் அதிமுக நிர்வாகிகள். 'சின்னம்மா... சின்னம்மா' என எதிரொலித்த குரல் அதிமுக தொண்டர்களை சினமூட்டியது என்பதுதான் யதார்த்தம்.

டூப்ளிகேட் ஜெ.

டூப்ளிகேட் ஜெ.

தோழி சசிகலாவோ தம்மை அப்படியே டூப்ளிகேட் ஜெயலலிதாவாக மெல்ல மெல்ல காட்டிக் கொண்டார். உச்சகட்டமாக அதிமுக பொதுக்குழு கூடி சசிகலாவை கட்சி பொதுச்செயலராக நியமித்தது.

தீபா...

தீபா...

அவ்வளவுதான் சசிகலா தன்னை ஜெயலலிதாவாக உருமாற்றிக் கொண்டு நடிக்கத் தொடங்கினார். காண சகிக்காத இந்த காட்சிகளைக் கண்டு அதிமுகவினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக அணி திரண்டு வருகின்றனர்.

இன்று என்ன நடக்குமோ?

இன்று என்ன நடக்குமோ?

ஜெயலலிதா மறைந்த 30 நாட்களுக்குள்ளாகவே முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு போட்டோ ஷூட் நடத்தி அச்சு அசல் ஜெயலலிதாவாகவே தம்மை காட்டிக் கொண்டிருக்கிறார் சசிகலா.. இன்று 30-ம் நாள் என்பதால் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வருவார்.. அப்படி ஒரு உச்சகட்ட நடிப்பை வெளிப்படுத்தி ஜெயலலிதாவை மிஞ்சப் போகிறார் சசிகலா என்பதுதான் உண்மை.

English summary
Here are the ADMK and Sasikala's dramas after the Jayalalithaa's death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X