For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கரராமன் வழக்கு: 81 பேர் பல்டி சாட்சியாகும் அளவுக்கு எப்படி கோட்டை விட்டனர்?- கி.வீரமணி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

K Veeramani asks the TN govt to appeal in Sankararaman case
சென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

''காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில், அதன் மேலாளர் சங்கர்ராமன், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் (3.9.2004).பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, காஞ்சிபுரம் சங்கராச்சாரியார், ஜெயேந்திர சரஸ்வதி ஒரு தீபாவளி நாளில் கைது செய்யப்பட்டார். (11.11.2004) ஜெயேந்திரர் 61 நாட்களும், விஜயேந்திரர் 31 நாட்களும் சிறையில் இருந்தனர். மொத்தத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தமிழ்நாட்டில் நடைபெறக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் சங்கராச்சாரியாரால் விண்ணப்பிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்ற ஆணைப்படி புதுச்சேரி மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு நடைபெற்று வந்தது.

பொது மக்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு- பக்தர்கள் மத்தியிலும் பதற்றம் நிலவியதுண்டு. தொடக்கத்தில் குற்றத்திற்குச் சம்பந்தம் இல்லாதவர்கள் கைது செய்யப்பட்டு, அதன்பின் உண்மைக் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் அதிர்ச்சிக்குரியது என்னவென்றால் 81 பேர் பிறழ் சாட்சியாளர்களாக ஆனதுதான்-ஆக்கப்பட்டதுதான். இதுவரை எந்த ஒரு வழக்கிலும் இவ்வளவுப் பெரிய எண்ணிக்கையில் பிறழ் சாட்சியானது கிடையாது.

குற்றத்தை நிரூபிக்க வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் எப்படி இதனை அனுமதித்தனர் என்பது மிகவும் முக்கியமானது.

புலனாய்வுக்கென்றே காவல் துறையில் தனிப் பிரிவே இருக்கிறது. 81 பேர் பிறழ் சாட்சியாகும் அளவுக்கு எப்படி கோட்டை விட்டனர் என்பது அதைவிட முக்கியமானது. இப்படி பிறழ் சாட்சி சொன்னவர்கள் மீதும் கூட வழக்குப்பதிவு செய்ய, தண்டிக்க, சட்டத்தில் இடம் உண்டு. இந்த வகையில் காவல்துறை ஏன் செயல்படவில்லை?

ஒரு கோயிலில் பட்டப் பகலில் பகிரங்கமாக நடைபெற்ற படுகொலை இது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று சட்டத்திலும், நியாயத்திலும் நம்பிக்கை உள்ள அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட 25 பேர்களும் விடுதலை செய்யப்பட்டதாக புதுவை நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் பெரிய பெரிய சக்திகள் எல்லாம் தலையிடும் என்று எதிர்பார்த்ததுதான்; நீதிபதியிடமே குற்றஞ்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் தொலைபேசியில் பேசினார் என்பதெல்லாம் என்னாயிற்று என்று தெரியவில்லை.

இந்தத் தீர்ப்பினைத் தொடர்ந்து அரசு தனது நடவடிக்கையைக் கைவிட்டுவிடக் கூடாது, மேல் முறையீடு செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் யாரும் எந்தக் குற்றத்தையும் செய்யலாம் - எளிதில் தப்பிவிடலாம் என்ற எண்ணத்தைப் பொதுமக்கள் மத்தியில் எளிதில் ஏற்படுத்தி விடும்.

மற்ற மற்ற வழக்குகளில் மிகவும் ஆர்வம் காட்டும் அரசு, இந்த மிக முக்கியமான பரவலாகப் பொது மக்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் மேற்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஏதோ தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் இதனை நாங்கள் கூறவில்லை. நியாயமும், நீதியும், உண்மையும் தோற்றுவிடக் கூடாது என்ற பொது நோக்கோடு இதனை அணுகுகிறோம். அடுத்து, தமிழ்நாடு அரசு எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து, மனித உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து உரியது செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

English summary
DK leader K Veeramani has urged the govt to file appeal against the Sankararaman murder case verdict
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X