For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.ஜி.ஆருக்கும் தலைவர் கருணாநிதி... சட்டசபையில் இருக்கை வசதி செய்யப்படாததற்கு வீரமணி கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்த மூத்த தலைவர் கருணாநிதிக்கு சட்டசபையில் போதிய இருக்கை வசதி செய்து கொடுக்கப் படாததற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் பற்றி பேச வாய்ப்பளிக்காமல் எதிர்க்கட்சிகளை வெளியேற்றுவது ஜனநாயகமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

K.veeramani condemns TN government

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் சட்டசபையில் ஜனநாயகத்தின் குரல் வளை நெரிக்கப்படும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறுவது மிகவும் கேலிக் கூத்தாகவும், கண்டிக்கத்தக்கதாகவும் உள்ளது.

இந்தியாவின் மூத்த முதுபெரும் ஜனநாயகவாதியும், தலைவருமான தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் 5 முறை முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்து வரலாறு படைத்தவர்.

எம்.ஜி.ஆருக்கும் தலைவர் அல்லவா கலைஞர்?

இன்றைய அ.தி.மு.க.வின் நிறுவனத் தலைவர் முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கே தலைவராக இருந்தவர். 90 வயது கடந்தும் தொய்வின்றித் தொண்டறத்தில் ஈடுபடும் அரசியல் வித்தகர்!

அவர் கடந்த அரை நூற்றாண்டாக எந்த சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வி காணாது, தொடர்ந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் அனுபவக் களஞ்சியம்!

அப்படிப்பட்டவரின் அரிய அனுபவத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியை நடத்திட விரும்பாமல், அவரது வருகையேகூட தவிர்க்கப்பட வேண்டும் என்பதாலோ என்னவோ, அவரது தள்ளாத முதுமையிலும் சக்கர நாற்காலியில் சட்டமன்றம் வந்து, தனி இருக்கையில் அமர்ந்து கருத்துக்கள் கூற வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை அல்லவா?

அவர் சட்டமன்றம் வராமலிருக்கிறார் என்று ஆளும் அதிமுக அதன் இன்றைய முதல்வர் பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம் அவர்கள் குற்றம் சுமத்தினார்; கலைஞரோ, ‘நான் வரத் தயார்; இருக்கை ஏற்பாடு செய்யுங்கள்' என்றார்.

இப்போது கூடிய சட்டமன்றத்தில் அதைச் செய்து அவரது கருத்தைக்கூற முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த உறுப்பினருக்கு வாய்ப்பளிக்கப் பட்டிருக்க வேண்டாமா?

எதிர்க்கட்சிகள் விவாதிக்க விரும்புவது தவறா?

பல்வேறு பிரச்சினைகள் - முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்த கேரள அரசின் ஆட்சேபம், கர்நாடகம் காவிரி ஆற்றின் குறுக்கே சட்டத்தை மீறி, மத்திய அரசின் அனுமதியின்றி அணைகள் கட்ட முயற்சி; பால் விலை ஏற்றம்; மின் வெட்டு, தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் ஊழல், கல்வியில் மத்திய அரசு மாநிலத்தின் உரிமைகளைப் பறிப்பது, தமிழக மீனவர் பிரச்சினை, இப்படி எண்ணற்ற பிரச்சினைகள் உள்ளதைப்பற்றி எதிர்க்கட்சிகள் சபையில் பேசி ஆட்சியாளரின் நிலைப்பாடுபற்றி விவாதிக்க விரும்புவது தவறா?

வெறும் மூன்று நாள்கள் மட்டும் கூட்டத்தைக் கூட்டுவது, தேவையின்றி வம்புக்கிழுக்கும் பேச்சு, அதற்குப் பதில் அளிக்க தி.மு.க. போன்ற கட்சிகளும் அதன் சட்டமன்ற தலைவர், உறுப்பினர்கள் பதில் கூறினால் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுதல் - இப்படி நடைபெறுவது கண்டு வெளி உலகத்தினர் கைகொட்டிச் சிரிக்க மாட்டார்களா?

முன்னாள் முதல்வரின் இடத்தைக் காலியாக விட்டு வைக்கலாமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தண்டனைக்கு ஆளாகி, அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியே பறிக்கப்பட்டு, சிறீரங்கம் இடைத் தேர்தல் தேதியையும் தேர்தல் கமிஷன் அறிவிக்க இருக்கும் நிலையில், அவர் சட்டமன்றத்தில் அமர்ந்த இடத்தை அப்படியே காலியாக வைத்திருப்பது என்பது எந்த வகையில் ஜனநாயக மரபு ஆகும்?

அவர் வழக்கில் வெற்றி பெற்று மீண்டு, மறுபடியும் அவைக்கு வரும்போது அவருக்குரிய இடத்தைத் தருவது தானே முறையான ஜனநாயக வழி முறையாக இருக்கமுடியும்?

இப்போதுள்ள முறைப்படி ஆளுநரால் பதவியேற்ற மாண்புமிகு முதல் அமைச்சர் அவரிடத்தை மாற்றாதது கூட அவர் விருப்பம், ஆனால், தொலைக்காட்சிப் பதிவில் முன்னாள் முதல்வர் இடம் காலியான காட்சி என்பது எங்காவது உலக ஜனநாயக வரலாற்றில் இப்படி நடந்ததாக உண்டா? கேலிக்குரியதல்லவா?

அத்துணை எதிர்க்கட்சிகளும் 3 நாள் சட்டமன்றத்தை மேலும் தொடர விடுத்த வேண்டுகோள், செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ஆகிவிட்டதே!

தேவையற்ற பிடிவாதம்!

முதல்நாள் அத்துணை எதிர்க் கட்சிகளும் சட்டமன்றத்தின்போது வெளியேறியது ஆளுங் கட்சிக்குப் பெருமை சேர்ப்பதாகுமா?

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்' (குறள் 448)
என்ற குறளை அறியாதவர்கள் அல்லவே அதிமுக ஆட்சியினர்.

பின் ஏன் இப்படி தேவையற்ற பிடிவாதம் - பொறுப்பு ஏற்றும் ஏற்காதது போன்ற ஒரு மாயத் தோற்றம்?

இவை ஆளுங் கட்சிக்கோ, ஜனநாயகத் தத்துவத்திற்கு பெருமையையோ, பலத்தையோ சேர்க்காது!

நல்லெண்ணத்தோடு கூறுகிறோம் :

சட்டமன்ற ஜனநாயகம் தழைக்க ஆரோக்கியமான அரசியல் - விவாதங்களும், பொறுப்பான பதில்களும், விமர்சனங்களைத் தாங்கும் சகிப்புத் தன்மையும் தான் சரியான அணுகுமுறைகளே தவிர, உடனே வெளியேற்றுவது, தண்டிப்பது கூடாது. மக்களவையைப் பார்த்தாவது நாம் கற்றுக் கொள்ள வேண்டாமா? இதை நல்லெண்ணத்தோடு கூறுகிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The Dravidar kalagam president K.Veeramani has condemned the Tamilnadu government for not making separate seating arrangements for DMK president Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X