For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாபம் விடும் அளவுக்கு கருணாநிதி பலவீனமாகவில்லை- கனிமொழி பேட்டி

|

சென்னை: ஒரு தேர்ந்த அரசியல் தலைவரின் மகள், அரசியலில் முக்கிய இடம் என பல முகங்களைக் கொண்ட கனிமொழி தனக்கான தனிச்சிறப்புகளைக் கொண்டவர்.

மத்தியில் எம்பியாக பதவி வகிக்கும் கனிமொழி தந்தையைப் போலவே சிறந்த கவிபுனையும் திறன் கொண்டவரும் ஆவார்.

கட்சிக்காக பிரச்சார களத்தில் தீவிரமாக குதித்துள்ள அவர் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

நல்லவர் சாபம் பலிக்காது:

நல்லவர் சாபம் பலிக்காது:

கேள்வி: கோவையில் முதல் கட்ட பிரசாரத்தை துவங்கிய, தி.மு.க., தலைவர் கருணாநிதி, "இது தான் என் கடைசி தேர்தல்" என்றும், "தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போடவில்லை என்றால், நீங்கள் உருப்பட மாட்டீர்கள் "என்றும் சாபம் விடுவது போல் பேசியிருக்கிறாரே. அந்த அளவுக்கு தி.மு.க., பலவீனமாக உள்ளதா?

பதில்: சகுனம், அபசகுனம், சாபம் இதெல்லாம் தலைவர் வாழ்க்கையில் கிடையாது. அந்த பாரம்பரியத்தில் அவர் வந்தவரும் இல்லை. எங்கள் அம்மா வேண்டுமானால், அவரிடம், "ஏங்க இப்படி...இது கடைசி தேர்தல்னு பேசுறீங்க" என்று, கேட்கலாம். எனவே, சாபம் விடும் அளவுக்கு அவர் பலவீனமாகி விட்டார் என யாராலும் கூற முடியாது. பல வெற்றி தோல்விகளை பார்த்தவர். ஒரு தேர்தலில் தோற்று விட்டோம் என்பதற்காக, இடிந்து உட்கார்ந்து விட மாட்டார். அதனால் சாபம் விட வேண்டிய அவசியம், அவருக்கு கிடையாது. "நல்லா படிக்கலேன்னா நீ உருப்பட மாட்டே" என்று, பிள்ளைகளிடம் நாம் சொல்வதில்லையா? அதுபோல தான் இதுவும். எத்தனை தோல்விகள் வந்தாலும், எழுந்து நிற்கும் சக்தி படைத்தது தி.மு.க., இந்த தேர்தலில் வெற்றி தி.மு.க வுக்கு தான்.

எல்லாமுமாய் இருப்பேன்:

எல்லாமுமாய் இருப்பேன்:

கேள்வி: தி.மு.க.,வில் உங்கள் பங்களிப்பு வெறும் ராஜ்யசபா எம்.பி., என்ற, அளவில் மட்டும் தானா?

பதில்: எனக்கு அளிக்கப்பட்ட எல்லா பணிகளையும் செய்து வருகிறேன். கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். கலை நிகழ்ச்சிகள் மூலம், சில இடங்களில் பிரசாரமும் செய்து வருகிறோம்.

பரஸ்பர உதவிதான் அது:

பரஸ்பர உதவிதான் அது:

கேள்வி: காங்கிரஸ் ஆதரவு இல்லையென்றால், கனிமொழியால் எம்.பி.,யாக முடியுமா என, காங்கிரஸ் தலைவர்கள் குமுறுகின்றனரே...

பதில்: நான் மீண்டும் எம்.பி.,யாக, காங்கிரஸ் உதவியது என்பது உண்மை தான். அதேபோல், காங்கிரசார் எம்.பி.,யாவதற்கும், தி.மு.க.,வும் பல நேரங்களில் உதவி இருக்கிறது.

ஆதரவை மறக்க கூடாது:

ஆதரவை மறக்க கூடாது:

கேள்வி: எந்த பலனும் இல்லாமல், கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சிக்கு, காங்கிரஸ் ஆதரவு அளித்தது. அப்போதெல்லாம், காங்கிரஸ் தேவைப்பட்டது; இப்போது, காங்கிரஸ் நன்றி மறந்துவிட்டதாக தி.மு.க., கூறலாமா என, காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளாரே...

பதில்: இளங்கோவனை பொறுத்தவரையில், தி.மு.க.,வை திட்டுவதில் தனி சுகம் காண்பவர். இந்த சந்தர்ப்பத்தை அவர் விட்டு விடுவாரா என்ன? ஆனால், தி.மு.க., ஆட்சியில், காங்கிரசுக்கு பங்கு தேவையில்லை என்பது, காங்கிரஸ் மேலிடம் எடுத்த முடிவு. அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? மத்திய காங்., ஆட்சியில், தி.மு.க., மட்டும் பங்கெடுக்கவில்லை; எங்களோடு பல கூட்டணி கட்சிகள், அதில் பங்கெடுத்திருந்தன. காங்., ஆட்சி புதுச்சேரியில் நடைபெற்ற போது, அதற்கு நாங்களும் வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தோம் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

கட்சியின் முடிவுதான் பிரதானம்:

கட்சியின் முடிவுதான் பிரதானம்:

கேள்வி: தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி மலருவதற்கு நீங்கள் முயற்சித்தீர்கள் என்றும், அது சிலருடைய இடையூறால் தோல்வியில் முடிந்து விட்டது என்றும், பரவலான கருத்து உள்ளதே...

பதில்: கூட்டணி விஷயத்தில், கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அது தான் முக்கியம். அதை தாண்டி, நான் எந்த முயற்சியும் எடுக்க முடியாது; எடுக்கவும் இல்லை. பொதுக்குழுவில் ஒரு திடமான முடிவு எடுத்து, கட்சி அறிவித்து விட்டது. கட்சியின் முடிவுதான் என் முடிவு.

வழக்கமான சந்திப்பு:

வழக்கமான சந்திப்பு:

கேள்வி: அப்படியென்றால், ஆசாத் எதற்காக சென்னைக்கு வந்தார்? அவரை அழைத்து வந்தது யார்?

பதில்: ஆசாத்தை பொறுத்தவரையில், அவர் சென்னை வரும்போதெல்லாம், தலைவரை சந்திப்பது வழக்கம். அந்த அடிப்படையில் தான், அந்த சந்திப்பு நடந்தது. கூட்டணி பற்றி பேசவில்லை என, ஆசாத்தே கூறியிருக்கிறார். அதுதான் உண்மை.

கூட்டணி பற்றி தெரியாது:

கூட்டணி பற்றி தெரியாது:

கேள்வி: கூட்டணி விஷயத்தில், தி.மு.க.,வின் நிலைப்பாட்டை மாற்ற, காங்கிரஸ் எந்த முயற்சியும் எடுக்கவில்லையா?

பதில்: அது எனக்கு தெரியாது.

வருத்தமெல்லாம் இல்லை:

வருத்தமெல்லாம் இல்லை:

கேள்வி: காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி அமையாமல் போனதில், தனிப்பட்ட முறையில் உங்களுக்கு வருத்தமா?

பதில்: எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கட்சி எடுத்த முடிவு இது. இதில் எனக்கென தனிப்பட்ட முறையில் எந்த கருத்தும், வருத்தமும் இருக்க முடியாது.

தலைமை முடிவுக்கு மறுப்பில்லை:

தலைமை முடிவுக்கு மறுப்பில்லை:

கேள்வி: தி.மு.க.,வில் இருந்து, மு.க.அழகிரி நீக்கப்பட்டு உள்ளது சரிதானா?

பதில்: தலைமை ஒரு முடிவை எடுத்து, இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது. அவ்வளவு தான்.

தங்கையை அண்ணன் பார்க்கலாம்:

தங்கையை அண்ணன் பார்க்கலாம்:

கேள்வி: அப்புறம் ஏன் அழகிரியை சந்தித்தீர்கள்?

பதில்: அதற்கு அவரே பதில் சொல்லியிருக்கிறார். தங்கையை பார்க்க சென்றதாகவும், உடல்நலம் பற்றி விசாரித்தாகவும் கூறியிருக்கிறார். தங்கையை பார்க்க அண்ணன் வந்தார்; அவ்வளவு தான்.

வேறுபடுத்த மாட்டேன்:

வேறுபடுத்த மாட்டேன்:

கேள்வி: உங்கள் ஆதரவாளர்களில் ஒருவருக்கு கூட, இந்த தேர்தலில் 'சீட்"கிடைக்கவில்லையே...

பதில்: கட்சியில் எனக்கென தனியாக ஆதரவாளர்கள் கிடையாது. ஒரு கட்சியில், தனக்கென தனியாக ஆதரவாளர்களை வளர்த்துக் கொள்வது, ஆரோக்கியமானது அல்ல. அறிவிக்கப்பட்டுள்ள எந்த வேட்பாளரையும் நான் வேறுபடுத்தி பார்க்கவில்லை. அவர்களின் வெற்றிக்காகவும், நான் பிரசாரம் செய்ய உள்ளேன்.

நீண்ட இழுபறி:

நீண்ட இழுபறி:

கேள்வி: உங்கள் பிரசார பயண திட்டம், நீண்ட இழுபறிக்கு பின் வெளியானதற்கு என்ன காரணம்?

பதில்: இழுபறி எல்லாம் இல்லை. வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு, மற்ற தலைவர்களின் பிரசார திட்டம் வகுக்கப்பட்ட பின், எனது நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது கட்சியில் வழக்கமான ஒரு நடைமுறை.

வாரிசுகள் நினைப்பது தவறு:

வாரிசுகள் நினைப்பது தவறு:

கேள்வி: ஒரு கட்சி என்றால், ஒரு தலைவர் தான் இருக்க முடியும். அந்த தலைவருக்கு வாரிசுகள் நிறைய பேர் இருக்கலாம்; ஆனால், அவர்கள் எல்லாருமே, அடுத்த தலைவர்களாக மாற நினைத்தால், அது சாத்தியமா? அப்படியொரு நிலையில் தானே பிரச்னைகள் ஏற்படுகின்றன?

பதில்: தலைவரின் வாரிசு என்ற ஒரே தகுதியின் காரணமாக, அடுத்த தலைவராக நினைப்பது தவறு. அதேநேரத்தில், கட்சிக்காக, 45 ஆண்டு காலமாக உழைத்தவர், தலைமைக்கு வருவதில் தவறில்லை.

நெருக்கடி இல்லை:

நெருக்கடி இல்லை:

கேள்வி: சரியோ, தப்போ... அழகிரியோ, ஸ்டாலினோ, கனிமொழியோ, இல்லை தகுதி வாய்ந்த கட்சிக்காரர் வேறு யாராவது ஒருவரோ தானே, கட்சியை வழி நடத்த முடியும்? அந்த ஒருவரை அடையாளம் காட்டுவதில், தி.மு.க வில் ஏன் இத்தனை நெருக்கடி?

பதில்: எந்த நெருக்கடியும் இல்லை. தகுதி வாய்ந்த தலைமையை, எங்கள் தலைவர் நிச்சயம் அடையாளம் காட்டுவார். அண்ணன் ஸ்டாலினை ஏற்கனவே, தலைவர் முன்மொழிந்து இருக்கிறார்.

மின்சார தட்டுப்பாடு:

மின்சார தட்டுப்பாடு:

கேள்வி: தி.மு.க., ஆட்சிக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்த மின்வெட்டு, இப்போதும் நீடிக்கிறது. ஆனாலும், இந்த தேர்தலில், அதை பிரதான பிரச்னையாக தி.மு.க முழங்காதது ஏன்?

பதில்: தி.மு.க., ஆட்சியில், வெறும் 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டை, பிரதானப்படுத்தியதே பத்திரிகைகள் தான். இப்போது, மின்சாரமே இல்லாமல், தமிழகம் இருண்டு கிடக்கிறது. ஆனால், பத்திரிகைகள் கண்டுகொள்வதில்லை. எப்போதாவது மின்சாரம் இல்லை என்றால், அது மக்களுக்கு தெரியாது. இப்போதுதான் எப்பவுமே மின்சாரம் இல்லையே. அதை மக்களே அனுபவப்பூர்வமாக நன்கு உணர்ந்துள்ளனர்.

அவர்களுக்கே பதில் தெரியும்:

அவர்களுக்கே பதில் தெரியும்:

கேள்வி: கூட்டணிக்கு அழைப்பு விடுத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வர மறுத்தது ஏன்?

பதில்: தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டு சேர தயார் என டில்லி கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் கூறியிருப்பதில் இருந்தே கம்யூனிஸ்டுகள் ஏன் வரவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பாவம் பாஜக:

பாவம் பாஜக:

கேள்வி: ஒருவேளை தேர்தலுக்கு பின், பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டு சேர்ந்து விட்டால்...

பதில்: பாவம் பாஜக மிகவும் கஷ்டப்பட நேரிடும்.

மதச்சார்பற்ற ஆட்சி:

மதச்சார்பற்ற ஆட்சி:

கேள்வி: தேர்தலுக்கு பின் திமுகவும் பாஜகவை ஆதரிக்கும் நிலை ஏற்படுமா?

பதில்: மதசார்பற்ற ஆட்சிக்கு ஆதரவு என்பதை, திருச்சி மாநாட்டிலேயே தி.மு.க., தெளிவாக அறிவித்து விட்டது. அதில் மாற்றம் இருக்காது.

இந்த ஆட்சியில் நடக்காது:

இந்த ஆட்சியில் நடக்காது:

கேள்வி: திமுக ஆட்சி காலத்தில் மட்டும் மிகவும் பிரமாண்டமாக "சென்னை சங்கமம்" நிகழ்ச்சியை நடத்தினீர்கள். இப்போது ஏன் நடத்துவதில்லை?

பதில்: இந்த ஆட்சியில் எப்படி ஒத்துழைப்பு கிடைக்கும்? இந்த ஆண்டு பொங்கல் விழாவில் இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்துவதாக அறிவித்தனர். ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். எதுவும் நடக்கவில்லை.

அந்த விபத்து நடக்க கூடாது:

அந்த விபத்து நடக்க கூடாது:

கேள்வி: ஜெயலலிதாவின் பிரதமர் ஆசை பற்றி?

பதில்: முதலில் நாற்பதும் நமதே என்றார். கருத்து கணிப்புகள் இப்போது வேறு விதமாக உள்ளன. இதனால் அதிமுக வின் சுருதி குறைந்து விட்டது. இந்தியாவின் எதிர்கால நலன் கருதி அப்படி ஒரு விபத்து நடக்காது என்று உறுதியாக நம்புகிறேன்.

பிரதானப்படுத்தவில்லை:

பிரதானப்படுத்தவில்லை:

கேள்வி: பல பிரச்னைகள் இருக்கும் பட்சத்தில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை மட்டுமே பிரசாரத்தில் பிரதானப்படுத்துவது ஏன்?

பதில்: அதை மட்டும் பிரதானப்படுத்தவில்லை. மற்ற பிரச்னைகளையும் பேசுகிறோம். எல்லா தொழில்களும் தமிழகத்தில் நசிந்து விட்டன. வேலையில்லா திண்டாட்டம் பெருகி விட்டது. 10 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாதோர் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ளனர். ஒரு தொழில் கூட இந்த ஆட்சியில் புதிதாக துவங்கப்படவில்லை. "டாஸ்மாக்" விற்பனைக்கு மட்டும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. தொழில் வளர்ச்சிக்கு எந்த இலக்கும் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. இத்தனை ஆண்டுகளாக போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்பற்ற சூழல் காரணமாக இழக்க வேண்டிய நிலையில் பெண்கள் உள்ளனர். ஒரு சமூக மாற்றத்தையே பின்னோக்கி எடுத்து செல்லும் அவல நிலை உருவாகி உள்ளது. பாலியல் கொடுமையையும் தாண்டி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள இடமாக தலைநகர் சென்னை மாறி உள்ளது. இந்த ஆட்சி வந்ததும் ஆந்திராவுக்கு ஓடிய திருடர்கள் கொள்ளையர்கள் எல்லாம் நாடு முழுவதும் உள்ள அவர்களது சொந்த பந்தங்களை எல்லாம் அழைத்துக் கொண்டு தமிழகத்திற்கு வந்து விட்டனர். தமிழகம் தான் நமக்கு பாதுகாப்பான இடம் என ஒட்டுமொத்த கொள்ளையர்களும் கூறி வருகின்றனர்.

அதற்கு இணையாகாது:

அதற்கு இணையாகாது:

கேள்வி: நீங்கள் ஜெயலலிதாவின் சொத்து பட்டியலை கையில் எடுத்தீர்கள்.அதற்கு பதிலடியாக அவரும் தி.மு.கவின் சொத்து பட்டியலை வெளியிட்டு வருகிறாரே.

பதில்: ஒட்டுமொத்த திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை எடுத்துக் கொண்டாலும் பெங்களூரு நீதிமன்றத்தில் வெளியான ஜெயலலிதாவின் சொத்து பட்டியலுக்கு இணையாகாது.

English summary
DMK Kanimozhi gave a special interview for a news paper about the election and various political oriented questions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X