For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அள்ளி அள்ளிக் கொடுத்த நீங்கள்... கிள்ளி கிள்ளிக் கொடுத்தாலும்... துள்ளிக் குதிப்பேன் நான்: கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் நிதியாக தொண்டர்கள் கிள்ளி கொடுத்தாலும், அது திமுக வெற்றிக்கு வழி வகுக்கும் என அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த மாதம் 12-ந்தேதி அன்று ‘‘கொள்கை காத்திடக் குவியட்டும் தேர்தல் நிதி'' என்ற தலைப்பில் ‘‘முரசொலி''யில் நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இன்றோடு ஒரு மாதமே முடிகிற நிலையில் - சேர்ந்திருக்கின்ற தேர்தல் நிதி எவ்வளவு தெரியுமா? ரூ.2 கோடியே 24 லட்சத்து 80 ஆயிரத்து 275.

அப்போது 1966-ல் வசூலிக்கப்பட்ட 11 லட்சம் ரூபாய் எங்கே? இப்போது ஒரே மாத காலத்தில் இதுவரையில் சேர்ந்திருக்கின்ற தேர்தல் நிதி 2 கோடியே 24 லட்சம் ரூபாய் எங்கே?

Karunanidhi asks more donation for election

ரூபாயின் மதிப்பு ஏற்படுத்தியுள்ள மேடு, பள்ளம் இது என்பதை நான் புரிந்து கொண்டாலும், நம்மவர் அனைவரும் மகிழ்ந்து புரிந்து கொண்டாலும், இந்த ஒரே மாத காலத்தில் நாம் சேர்த்திருப்பது 2 கோடியே 24 லட்சம் ரூபாய்க்கு மேலே என்கிற போது நமது மகிழ்ச்சி எல்லை கடந்துள்ளது.

இன்னும் தமிழ் மக்களும், கழக உடன்பிறப்புகளும் எப்படியெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் நம்மைத் தள்ளப் போகிறார்களோ தெரியவில்லை. என்ன தான் அவரவர்களும் போட்டி போட்டுக் கொண்டு, வயதான பெரியோர், வயது முதிர்ந்த தாய்மார்கள், வாலிபச் சிங்கங்கள், வாரி வாரித் தருகின்ற தேர்தல் நிதி குவிந்தாலும், அதன் அளவு இந்த இரண்டு கோடி ரூபாயைத் தாண்டுமா என்பதையும், அப்படித் தாண்டி விட்டால் நம்முடைய மகிழ்ச்சியை அளக்கத் தான் முடியுமா என்பதையும் எண்ணிப் பார்த்து நமக்கு நாமே ஒருவரையொருவர் கட்டிப் பிடித்தும், கை குலுக்கியும் மன மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம்.

ஆனால் எதிரணியினர் - ‘‘ஏழைகள் பாழைகள், ஏனோ தானாக்கள் இவர்களிடமிருந்து எப்படி அதிக நிதி சேரப் போகிறது'' என்ற அங்கலாய்ப்போடு, ‘‘ஆ'' என்று வாய் பிளந்து நின்று, நாம் இதுவரை வசூலித்துள்ள இந்தத் தொகையைக் கண்டு ‘‘இவர்கள் எவ்வளவு பூரித்துப் போய் இருக்கிறார்கள், புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள்'' எனத் திகைத்துப் போவார்கள் என்பதை என்னால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

இருப்பினும் ஆளுங்கட்சியிடம் குவியவிருக்கும் - அல்லது குவிந்திருக்கும் நிதி அளவை அல்லது அவர்கள் குவிக்க இருக்கின்ற நிதியின் அளவையும் என்னால் கருதிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஆளுங்கட்சியினர் நம்மோடு மோதுவதற்கு ஏற்கனவே குவித்து வைத்திருக்கின்ற, பல தரப்பட்ட வகைகளிலும் சம்பாதித்து வைத்திருக்கின்ற நிதியையும், நாம் இன்று சேர்த்து வைத்திருக்கின்ற நிதியின் அளவையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவர்களிடம் குவிந்திருப்பது மலையளவு, நம்மிடமோ சிறு துளியளவு.

இந்தச் சிறு துளி அளவைக் கொண்டு தான் அந்த மலை அளவைச் சந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். கிராமங்களில் ‘‘வெறும் கையால் முழம் போடுவது'' என்று ஒரு பழமொழி சொல்வார்கள். நாம் அப்படி வெறும் கையோடு தான் இந்தத் தேர்தலிலும் முழம் போட முனைந்திருக்கிறோம்.

இதில் வெற்றி, பதுக்கல் வேட்டைக்காரர்களுக்கா? அல்லது பரம ஏழைகளின் பிரதிநிதிகளான நமக்கா? என்ற கேள்விக்கு பதிலளிக்கக் கூடிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தப் பதிலை நிதானமாகவும், நேர்மையாகவும், நெறி தவறாமல் அளிப்பதற்கு தி.மு.க. உன் போன்ற உடன் பிறப்புகள், உங்களால் முடிந்த வரையில், நீங்கள் முடிந்து வைத்திருக்கும் வரையில் உறுதியுடன் உதவிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறது. நானும்தான்.

இந்த நிதி விஷயத்தில் என்னை நீங்களும் எதிர்பார்க்க வைத்து என்றைக்கும் ஏமாற்றியதில்லை. அன்று அள்ளி அள்ளிக் கொடுத்த நீங்கள், இன்று நாம் வசூலிக்கும் நிதிக்கும் கிள்ளிக் கிள்ளிக் கொடுத்தாலும், தி.மு.க. பெறவிருக்கின்ற மகத்தான வெற்றிக்கு அது வழித்துணையாய் அமையும் என்று துள்ளிக் குதிப்பவர்களில் நானும் ஒருவன் என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்.

எனவே இடையே இருக்கின்ற நாள்களில் இன்று போல் என்றென்றும் என்னைக் கழக அலுவலகத்திலோ, வீட்டிலோ அல்லது வழியிலோ சந்திக்கும் போதெல்லாம் நீட்டுங்கள் தேர்தல் நிதியை. காட்டுங்கள் தமிழகத்தின் நல்வாழ்வுக்கான ஒளி மிகுந்த வழியை.

இவ்வாறு அதில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

English summary
The DMK president Karunanidhi has requested the party men to give more donation for the election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X