For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாற்றுத் திறனாளிகளிடம் பரிவு காட்ட அ.தி.மு.க. ஆட்சிக்கு மனமில்லை: கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காது கேளாதோர் குறைகளைக் காது கொடுத்துக் கேட்பதற்கோ, கண் தெரியாதோர் தமது தேவைகளைத் தெரிவிக்க வந்தால் அவர்களைக் கண் திறந்து பார்ப்பதற்கோ, ஜெயலலிதா ஆட்சியினர் யாரும் முன்வரவில்லை; மொத்தத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் பரிவு காட்ட அ.தி.மு.க. ஆட்சிக்கு மனமில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

மனித சமுதாயத்தில், காது கேளாதவராய், கண் தெரியாதவராய், வாய் பேச முடியாதவர் களாய், கை கால்களைப் பயன்படுத்த இயலாத வர்களாய், மன நோயாளிகளாய் உள்ள அனை வரையுமே "ஊனமுற்றோர்" என்பதற்குப் பதிலாக, ஓர் அவயவத்தின் செயல்பாட்டுக் குறையால் அவர்களுடைய மற்றைய திறன் மேலும் ஒரு பங்கு சிறப்புறுகிறது என்ற அடிப்படையில் அவர்களை "மாற்றுத் திறனாளிகள்" என்று அழைக்கின்ற முறை குறித்து 2007ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் அவையில் விவாதிக்கப்பட்டது.

Karunanidhi

அந்த விவாதத்தின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் உரிமைக்கான ஐக்கிய நாடுகள் இணக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அதில் நமது இந்திய நாடு ஏழாவது நாடாகக் கையொப்பம் இட்டுள்ளது.

அந்த இணக்க ஒப்பந்தம் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் நாள் முதல், "சர்வதேச மனித உரிமைச் சட்டம்"" ஆக அமைந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இனி "ஊன முற்றோர்" என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள், "மாற்றுத் திறனாளிகள்" என அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தேன்.

அதனைத் தொடர்ந்து 19.3.2010 அன்று புதிய சட்டப்பேரவையில் முதன்முதலாக அளிக்கப்பட்ட 2010-2011 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் "மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும்"" என அறிவிக்கப்பட்டு அன்றே அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

அதன்பின்னர், தலைமைச் செயலகத்தில் "மாற்றுத் திறனாளிகள் நலத்துறை" எனும் புதிய துறை 27.3.2010 அன்று உருவாக்கப்பட்டு, அத்துறையின் அரசுச் செயலாளராக ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பொறுப்பேற்றார்.

அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும், "ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் அலுவலகம்" "மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம் (Commissionerate for the Welfare of the Differently Abled) "" எனவும், "தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியம்" "தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் (Tamil Nadu Welfare Board for the Differently Abled )" எனவும் குறிப்பிடப்படும் என்றும், "ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர்" "மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் (Commissioner for the Differently Abled)"" எனவும்,"மாவட்ட ஊனமுற்றோருக்கான மறுவாழ்வு அலுவலர்" "மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் (District Differently Abled Welfare Officer)"" எனவும், குறிப்பிடப்படுவார்கள் என்று கழக அரசு 27.3.2010 அன்று ஆணை பிறப்பித்து, நடைமுறைப்படுத்தியுள்ளது.

2010-2011இல் முதன்முறையாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கெனப் பேரவையில் தனியே, "மானியக் கோரிக்கை" அளிக்கப்பட்டு, அதன்மீது மாற்றுத் திறனாளிகள் நலம் குறித்து விரிவாக ஆராய்ந்து புதிய திட்டங்களை உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கென முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் 2005-2006 ஆம் ஆண்டில் 49 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில்; திமுக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டினைப் படிப்படியாக உயர்த்தி, 2010-2011ஆம் ஆண்டில் 176 கோடி ரூபாய் என மூன்றரை மடங்கு உயர்த்தி ஒதுக்கீடு செய்தது.

தமிழக முதலமைச்சரைத் தலைவராகக் கொண்டு மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் 26.4.2010 அன்று தி.மு.க ஆட்சியில் திருத்தி அமைக்கப்பட்டது.10 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் நல வாரிய உறுப்பினராக பதிவு செய்யப்பட்டனர். திமுக ஆட்சிக் காலத்தில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 856 மாற்றுத் திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.

நான் கதை வசனம் எழுதிய இளைஞன் திரைப்படத்திற்காக கிடைத்த 45 இலட்சம் ரூபாய் தொகையினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி, பின்னர் அதனை 2010-2011ஆம் ஆண்டில் மாற்றுத் திறனாளிகளின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அளித்திட தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்திற்கு வழங்கப்பட்டது.

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அவர்கள் தமிழக முதலமைச்சரைச் சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டு, 200 மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து பார்வையற்ற பட்டதாரிகள் மற்றும் கல்லூரி மாணவர் சங்கத் தலைவர் நாகராஜன் என்பவர் "ஒவ்வொரு ஆண்டும், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பல கோடி ரூபாய் செலவிடப் படுவதாக அரசு கூறுகிறது. ஆனால் மடக்கு குச்சிகள், கண்ணாடி போன்றவற்றை வழங்கியதைத் தவிர்த்து, வேறு எதையும் நடைமுறைப் படுத்தவில்லை" என்று அ.தி.மு.க. அரசின் மீது குற்றஞ்சாட்டினார்.

ஆனால், தி.மு.க ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்திய போது அரசின் அணுகுமுறை என்ன தெரியுமா? சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக காலை ஏடுகளில் செய்தியைப் படித்துவிட்டு, காலை உணவு கூட அருந்தாமல் அப்படியே கீழே இறங்கி காரில் ஏறி நேராக அவர்கள் போராட்டம் நடத்திய இடத்திற்கே சென்று அவர்களின் கோரிக்கைகள் உடனடியாக ஏற்கப்படும் என்று கூறி போராட்டத்தை நிறுத்தச் செய்தவன் நான்.

மாற்றுத் திறனாளிகளை அ.தி.மு.க. அரசு சந்திக்கவே பல முறை மறுத்து, அவர்கள் போராட்டம் நடத்திய பிறகு முதலமைச்சர் பெயரால் சில அறிவிப்புகள் மட்டும் வந்தன. அந்த அறிவிப்பில் "பி.எட்., படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பி.எட்., பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக்கூடிய காலிப் பணியிடங்களிலும் பணி அமர்த்தப்படுவர்" என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் "இதற்கான அரசாணை கூட இன்னும் வராமல் மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்" என்று செய்திகள் வெளியிடப்பட்டன.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையிலிருந்து இன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதாவைப் பார்த்து உதவித் தொகை பெறலாம் என்று நம்பிக்கையோடு வந்த செல்வராஜ் என்ற மாற்றுத் திறனாளியை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து விட்ட காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டு மாண்டுவிட்டார் என்ற செய்தியும் இந்த ஆட்சிக் காலத்திலேதான் வந்தது.

திமுக ஆட்சிக் காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக எந்த அளவுக்கு சாதனைகளைச் செய்தோம் என்பதற்கு மாறாக இன்று அ.தி.மு.க. ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நிலை என்ன?

"தமிழகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான சட்டம், கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது என்று அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

திமுக ஆட்சியில் படிக்கப்பட்ட அந்த நிதிநிலை அறிக்கையிலேயே "தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு, வருவாய் உச்ச வரம்பு இன்றி, 500 ரூபாய் வீதம் மாதாந்திர உதவித் தொகையை கழக அரசு வழங்கி வருவதால் 50 ஆயிரம் பேர் பயன்பெற்று வருகின்றனர்.

கண் பார்வையற்றோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு உதவித் தொகைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆசிரியப் பணி புரிய சிறப்பு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காது கேளாதோருக்குக் குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே கண்டறிந்து சிறப்புக் கல்வி அளிக்கும் பள்ளிகள் மாவட்டந்தோறும் தொடங்கப்பட்டுள்ளன.

கை, கால் ஊனமுற்றோருக்குப் பயணச் சலுகைகளுடன், நாட்டிலேயே முதல் முறையாக மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள் முதலான பல்வேறு உதவிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பற்ற பார்வையற்றோருக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டம், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு 60 ஆயிரம் பேர் இத்திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதல் முறையாக தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் 2008-2009ஆம் ஆண்டிலிருந்து 1000 பேருக்கு மாத உதவித் தொகையாக 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 2005-2006ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் நலனுக்குச் செலவிடப்பட்ட தொகை ரூபாய் 49 கோடி அளவாக இருந்ததை, வரும் நிதியாண்டில் ரூபாய் 176 கோடியாக உயர்த்தியுள்ளதுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை என்னுடைய நேரடி மேற்பார்வையில் இயங்கும்" - என்று திமுக ஆட்சியின் நிதிநிலை அறிக்கையிலே எழுதப்பட்டிருந்தது. இந்த விவரங்களிலிருந்து மாற்றுத் திறனாளிகள் திமுக ஆட்சியில் எந்த அளவுக்கு பாதுகாக்கப்பட்டார்கள் என்ற விவரத்தையும், தற்போது அவர்கள் எந்த அளவுக்கு அவதியுறுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

காது கேளாதோர் குறைகளைக் காது கொடுத்துக் கேட்பதற்கோ, கண் தெரியாதோர் தமது தேவைகளைத் தெரிவிக்க வந்தால் அவர்களைக் கண் திறந்து பார்ப்பதற்கோ, வாய் பேச முடியாதோரின் வாழ்க்கை நிலையை வாய் விட்டுப் பேசுவதற்கோ, கை கால்களைப் பயன்படுத்த இயலாதோருக்கு உதவிக் கரம் நீட்டுவதற்கோ ஜெயலலிதா ஆட்சியினர் யாரும் முன்வரவில்லை; மொத்தத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் பரிவு காட்ட அ.தி.மு.க. ஆட்சிக்கு மனமில்லை!

English summary
DMK president Karunanidhi has blamed the ADMK govt for its apathy towards physically challenged persons
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X