For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெட்கமில்லை; வெட்கமில்லை; இதில் யாருக்கும் வெட்கமில்லை: கருணாநிதி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சியினர் மூன்றரை ஆண்டுக் காலத்திலேயே தமிழ்நாட்டின் நிதி நிலைமையை பாழ்படுத்தித் திவாலாக்கி விட்டார்கள்; நம்பி வாக்களித்த மக்களின் நம்பிக்கையைக் கொன்று ஏமாற்றி விட்டார்கள் என்பது தான் அசைக்க முடியாத உண்மை. வெட்கமில்லை; வெட்கமில்லை; இதில் யாருக்கும் வெட்கமில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்திருப்பதாவது,

தமிழக அரசின் நிதி நிலைமை பற்றி பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளன. நாளேடுகளிலும், வார இதழ்களிலும் அதைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள். இருந்தாலும் ஆட்சியினரிடமிருந்து எந்தவிதமான விளக்கமோ பதிலோ இதுவரை வரவில்லை. குறிப்பாக ஆங்கில நாளிதழ், "இந்து", 31-12-2014 அன்று "T.N. facing financial crunch - CM admits to Limited Sources of Revenue" (http://www.thehindu.com/.../tamil-nadu-fac.../article6739964.ece ) என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரையே வெளியிட்டிருந்தது.

பிரதமருக்கு கடிதம்

பிரதமருக்கு கடிதம்

நாளிதழ்கள் வெளியிடுவதை விட தமிழக முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்குக் கடந்த மாதம் எழுதிய கடிதம் ஒன்றில், "தமிழ்நாடு ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது; தமிழக அரசுக்குக் குறிப்பிட்ட வருவாய் ஆதாரங்கள் மட்டுமே உள்ளதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, கூடுதலாக எந்தவொரு நிதிச் சுமையையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்வது என்பது மிகக் கடினமானதாகும்" என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

நிதி நிலைமை

நிதி நிலைமை

"இந்து" வெளியிட்டுள்ள செய்தியில், "It's Official and out in the open. The State Government's financial health is quite bad. It was revealed in an innocuous statement by Chief Minister, O. Panner selvam" " அதாவது "அது அலுவல் சம்மந்தப்பட்டது; ஆனாலும் வெளியே வந்துவிட்டது. மாநில அரசின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ளது. முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்தின் அறிக்கையிலேயே இது கூறப்பட்டுள்ளது"" என்று எழுதப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில் (2014-2015) தமிழ்நாடு அரசு ரூ. 289 கோடி கூடுதல் வருவாய் பெற்று விளங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 13-2-2014 அன்று இன்றைய முதலமைச்சரும், அன்றைய நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் படித்த நிதிநிலை அறிக்கையில் பக்கம் 68இல், "2014-2015ஆம் ஆண்டில் வருவாய் உபரி 289.36 கோடி ரூபாயாக இருக்கும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அவருடைய இந்தக் கணிப்பு தவறாகிவிட்டது.

வருவாய் பற்றாக்குறை

வருவாய் பற்றாக்குறை

இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாத நிறைவில், தமிழ்நாடு அரசின் வருவாய்ப் பற்றாக்குறை 7,652 கோடி ரூபாயாக இருப்பதாக "இந்து" பத்திரிகையே தெரிவித்துள்ளது. அரசின் வரி வருவாய், மொத்த வருவாயில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமாக இருப்பது வழக்கம். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் வரவில்லை என்பது 2014ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது தெரிய வந்துள்ளது. 91 ஆயிரத்து 835 கோடி ரூபாய்மாநில அரசின் சொந்த வரி வருவாயாகக் கிடைக்க வேண்டுமென்று மதிப்பிடப்பட்டதற்கு மாறாக, 37ஆயிரத்து 56 கோடி ரூபாய் மட்டுமே இந்தக் காலக் கட்டத்தில் கிடைத்துள்ளது.

மாநில அரசின் வரி வருவாயில் உள்ள பல்வேறு இனங்களின் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது, எந்தத் துறையும் ஒன்றுமே எதிர்பார்த்த அளவுக்கு வருவாயை ஈட்டவில்லை என்பதை அறியலாம். எதிர்பார்க்கப்பட்ட மாநில அரசின் வருவாய் 20.3 சதவிகிதமென்றால், வந்திருப்பது 14.6 சதவிகிதம்தான்; மத்திய வரி மற்றும் மத்திய அரசின் ஒதுக்கீடு மூலமாக 49 சதவிகித வருவாய் கிடைக்குமென்று எதிர்பார்த்ததற்கு மாறாக, 37.68 சதவிகிதம் தான் வரவு வந்துள்ளது. வர்த்தக வரி மூலமாக 23.35 சதவிகிதம் எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் வந்திருப் பதோ 1.48 சதவிகிதம் தான்.

மாநில எக்சைஸ் மூலமாக 28.75 சதவிகிதம் எதிர்பார்க்கப்பட்டது; வந்ததோ 10.87 சதவிகிதம்தான். பத்திரப் பதிவுத்துறை மற்றும் ஸ்டாம்ப் பேப்பர் மூலம் 26.89 சதவிகிதம் கிடைக்குமென்று திட்டமிட்டிருந்த நிலையில், - 2.49 சதவிகித அளவுக் கும், வாகன வரியைப் பொறுத்தவரையில் 39.71 சதவிகிதம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் வெறும் 2.73 சதவிகித அளவுக்கும்தான் கிடைக்குமென்று "இந்து" நாளிதழ் விரிவாக எழுதியுள்ளது.

திருப்தி இல்லை

திருப்தி இல்லை

மூத்த அதிகாரி ஒருவரே, "உள்நாட்டுப் பொருள்கள் மீதான தீர்வை மற்றும் பதிவுத் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை" என்று ஒப்புக் கொண்டிருக்கிறார் ("The performance in respect of excise and registration is disappointing" acknowledges a senior official) என்பதை விளக்கிடும் "இந்து" நாளேடு, அந்தக் கட்டுரையை முடிக்கும்போது, "The early signs of the declining financial health were visible even during the previous year (2013-2014) when the State registered a revenue deficit of about Rs. 1,790 crore, as per supplementary accounts. The revenue deficit came after two successive years of revenue surplus" (சென்ற ஆண்டே, அதாவது 2013-2014 நிதியாண்டிலேயே 1,790 கோடி ரூபாய் அளவுக்கு மாநிலத்தில் வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்ட போதே தமிழக நிதிநிலை மோசமாகிக் கொண்டு வருவதற்கான அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிந்தன. இரண்டாண்டுகள் தொடர்ந்து வருவாய் உபரி ஏற்பட்டதற்குப் பிறகு, வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது) என்று தமிழக அரசின் நிதி நிலையை தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.

நிதி நெருக்கடி

நிதி நெருக்கடி

இன்னும் சொல்லப்போனால் இந்த வார இதழ் "ஜூனியர் விகடனில்" "நிதி நெருக்கடியில் தமிழக அரசு" என்ற தலைப்பில் செய்தியாளர் எஸ்.ஏ.எம். பரக்கத் அலி விளக்கக் கட்டுரை ஒன்றினைத் தீட்டியிருக்கிறார். அதில், "எந்த இலக்கையும் எட்ட முடியாமல் நிதித் துறை தடுமாறி வருகிறது. டாஸ்மாக் வருவாயை உயர்த்துவதில்தான் அரசு அதிக அக்கறை எடுத்துக் கொண்டது. அந்த அளவுக்கு நிர்வாகத் திறமையை மற்ற துறைகளிலும் காட்டியிருந்தால், மொத்த வருவாய் அதிகரித் திருக்கும். அரசின் மெத்தனம்தான் இதற்குக் காரணம். அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் வெளியிடப்படும். அப்போது வரி வருவாய் பதினெட்டாயிரம் கோடி ரூபாய் குறைவாகக் கிடைக்கும். அதைச் சமாளிக்க கடன் வாங்குவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை.

கடன்

கடன்

ஏற்கனவே ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தமிழக அரசு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனால் மாநிலத்தின் மொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படும். பழைய வரி பாக்கிகளை வசூலிக்கவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும் அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தமிழக அரசின் கடன் தவிர மின்வாரியத்தின் கடன் ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. பொதுத் துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்தால் தமிழகத் தின் மொத்தக் கடன் சுமை நான்கு இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டும்"" என்று நிதித் துறை வட்டாரம் தெரிவித்ததாக விரிவாக எழுதியிருக்கின்றது.

மேலும் அந்த இதழின் செய்தியாளரிடம், "தமிழர் குல சாமியே! தன்மானச் சிங்கமே! ஸ்ரீரங்கத்தின் கீதையே! மூன்றெழுத்து மந்திரமே! தியாகமே! மாதரசியே! எனச் சட்டசபையில் பேசுவதற்காக தமிழ்ப் புலவரைத் தேடிப் பிடித்து பக்கத்தில் வைத்துக் கொள்ளும் ஓ. பன்னீர் செல்வம், அரசின் நிதிநிலை பற்றியும் கொஞ்சம் கவலைப்பட வேண்டும்"" என்று நிதித் துறை அதிகாரிகள் கூறினார்களாம்.

ஆலோசனை

ஆலோசனை

அந்தக் கட்டுரையின் முடிவில், "தலைமைச் செயலாளருக்கு மேல் ஓர் ஆலோசகர், டி.ஜி.பி.க்கு மேல் ஓர் ஆலோசகர், பொதுப் பணித் துறையிலும் ஓர் ஆலோசகர், எல்லோருக்கும் மேலே ஒரு மக்கள் முதல்வர் என பல எஜமானர்கள் இருந்தும், தமிழக அரசின் நிதி நிலையைத் தூக்கி நிறுத்த ஒருவரும் ஆலோசனை சொல்லவில்லையா? கூவம் நதியைச் சீரமைக்க ரூ. 3,833.62 கோடியில் பெரும் திட்டம், ஆறுகள் இணைப்பு வெள்ளத் தடுப்புப் பணிக்கு ரூ. 5,166 கோடி, 3 வழித் தடங்களில் ரூ. 8,350 கோடியில் மோனோ ரெயில் திட்டம், ரூ. 1,075 கோடியில் நெமிலிச்சேரியையும், மீஞ்சூரையும் இணைக்கும் இரண்டாம் கட்ட வெளிவட்டச் சாலை, சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா, தேர்வாய்க் கண்டிகை, திருக்கண்டலம், ராமஞ்சேரி ஆகிய இடங்களில் தலா ஒரு டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய ஏரிகள் என கடந்த பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்ட பல அறிவிப்புகளை எப்போது நிறைவேற்றுவார்கள்? அவற்றுக்கெல்லாம் எங்கிருந்து பணம் கொண்டு வருவார்கள்? பன்னீர் செல்வம் சொல்வது போல... "அறுக்க மாட்டாதவன் இடுப்புல, அம்பத்தெட்டு அருவாளாம்"" என்று கூறப்பட்டுள்ளது. நிதி ஆதாரமே இல்லாமல் செய்யப்படும் அறிவிப்புகள் யாரை ஏமாற்ற? பொய் நெல்லைக் குத்தியே பொங்கலாம் என்று நினைத்தார்களோ?

திவால்

திவால்

ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளுக்குள்ளேயே தமிழக அரசை திவாலாக்கி, நிதி நிலையைத் தெருவிலே நிறுத்தக்கூடிய நெருக்கடியை உருவாக்கிய பெருமைக்குரியவர்கள் தான் (?) ஜெயலலிதா கட்சியினர்! போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை கடந்த பதினைந்து மாத காலமாக நிறைவேற்றாமல் இருந்து, அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்த பிறகுதான் அழைத்துப் பேசவே முன்வந்தவர்கள் இந்த ஆட்சியினர்! ஏன்? தமிழக அரசு அலுவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. தமிழர் திருநாள், பொங்கல் விழாவிற்கு இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாக போனஸ் வழங்குவதற்கான அறிவிப்பினைச் செய்திட வேண்டும்.

110வது விதி

110வது விதி

உண்மை நிலையை அப்படியே மறைத்துவிட்டு, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, பேரவை கூடுகிறது என்றால், உடனே நினைவுக்கு வருவது ஜெயலலிதாவின் 110வது விதியின் கீழான அறிக்கைதான். 110வது விதியின் கீழ் அத்தனை அறிக்கைகளையும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாதான் படித்தாரே தவிர, வேறு யாராவது ஓர் அமைச்சரை விட்டு, அவர்களுடைய துறை பற்றிய அறிக்கைகளைப் படிக்கச் செய்தார்களா? ஏன் தமிழக அரசே முதலமைச் சருக்கு மட்டும்தான் சொந்தமானதா? கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஜெயலலிதா 139 அறிக்கைகளை 110வது விதியின் கீழ் படித்திருக்கிறார். 2013-2014ஆம் ஆண்டில் மாத்திரம் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கைகளில் 236 திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார் என்றும், ஆனால் அதில் 116 திட்டங்களுக்குத்தான் அரசாணைகள் வெளியிடப்பட்டன என்றும் இப்போது முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையிலேயே தெரிவித்தார்.

ஜெயலலிதா அறிவித்த எஞ்சிய 120 திட்டங்களுக்கான அரசாணைகளே பிறப்பிக்கப்பட வில்லை என்ற தகவலே பன்னீர்செல்வம் மூலமாகத் தான் நமக்குத் தெரிந்தது. அரசாணைகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும், 236 திட்டங்களில் 5 திட்டங்களுக்கான பணிகள்தான் முடிக்கப்பட்டுள்ளன என்றும் பன்னீர் செல்வம் பேரவையிலே கூறினார். அப்படியென்றால் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 236 திட்டங்களில் இன்னும் 231 திட்டங்கள் முடிக்கப்படவில்லை. முடிக்கப்படாததற்குக் காரணம் அதற்கான நிதி ஆதாரம் இல்லை என்பதுதான்.

திட்டங்களின் மதிப்பு

திட்டங்களின் மதிப்பு

நான் முன்பே விளக்கமாக எழுதியது போல, கடந்த நான்காண்டுகளில் ஜெயலலிதா சட்டப்பேரவையில் படித்த 110வது விதியின் கீழான அறிக்கைகளிலே கூறப்பட்ட திட்டங்களின் மொத்த மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா? ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 500 கோடியே 93 இலட்சம் ரூபாய். கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை யில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை படிக்கப்பட்ட போது, ஓர் ஆண்டுக்கான தமிழக அரசின் வருவாய் வரவுகள் என்று குறிப்பிட்ட தொகை எவ்வளவு தெரியுமா? ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 389 கோடியே 89 இலட்ச ரூபாய். அதாவது ஓராண்டில் தமிழக அரசின் வருவாய் வரவுகள் என்று குறிப்பிட்ட தொகை அளவுக்குச் சமமான அளவில் ஜெயலலிதா 110வது விதியின் கீழான அறிக்கையிலே மட்டும் திட்டங்களை அறிவித்திருக்கிறார் என்றால் நடப்பது என்ன அரசா? கேலிக்கூத்தா? நாளேடுகளில் அன்றாடம் தன் பெயரில் ஓர் அறிவிப்பு வரவேண்டுமென்பதற்காகத் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா? அதற்கான நிதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா? """"யார் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு நம்மிடம் கேள்வி கேட்கப் போகிறார்கள்"" என்று மேம்போக்காக நடந்து கொள்வதா? இப்போது அன்றாடம் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு போனஸ் கொடுக்க நிதி இல்லை எனால் இதெல்லாம் யாருடைய குற்றம்? 10-12-2014 அன்று 110வது விதியின் கீழ் படிக்கப்பட்ட ஒரு சில திட்டங்களையெல்லாம் நான் எடுத்துக்காட்டி, அவைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு விட்டனவா என்று இந்த அரசிடம் கேட்டிருந்தேனே, அதற்கு ஏதாவது இந்த அரசினால் பதில் கூற முடிந்ததா?

ஓ.பி.எஸ்.

ஓ.பி.எஸ்.

இந்த ஆட்சியிலே என்ன நடக்கிறது? முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா நீதிமன்றத்தினால் தண்டனை பெற்று வீட்டுக்குப் போய் விட்டார். தற்போது முதலமைச்சராக இருக்கும் பன்னீர்செல்வத்திடம் எந்த அமைச்சருக்காவது உரிய மரியாதை இருக்கிறதா? எங்கும் ஊழல், எதிலும் ஊழல், அனுதினமும் ஊழல், அத்தனையும் ஊழல் என்ற நிலையில்தானே ஆட்சி நடக்கிறது? கடந்த மூன்றரை ஆண்டுகளில் எத்தனை அமைச் சர்கள் மீது அவர்களே நடவடிக்கை எடுத்திருக் கிறார்கள்? தவறு செய்தார்கள் என்று முதலமைச்சரே புரிந்து கொண்டு எடுத்த நடவடிக்கைதானே அவை? இல்லை என்று மறுக்க முடியுமா?

வேறு எந்த ஆட்சியிலாவது இத்தனை அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா? அந்த அமைச்சர்கள் செய்த தவறுகள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டதா? தற்போது அது போல எந்த அமைச்சர் மீதாவது முதலமைச்சரால் நடவடிக்கை எடுக்க முடியுமா? அவருடைய நிலையே கேள்விக் குறியாக உள்ளது. இந்த ஆட்சியினர் மீது எத்தனை ஊழல்கள்? ஆவின் பால் கலப்பட ஊழல் ஒன்று போதாதா? பால் கட்டணம் உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு, கரும்புக்குக் கொள் முதல் விலை அறிவிக்கப் படவில்லை, கிரானைட் ஊழல் பற்றி நீதிபதியே விசாரணைக் கமிஷன் வைத்தால், அதற்கு எத்தனை முட்டுக் கட்டைகள்? சத்துணவு சாப்பிடும் குழந்தை களுக்கான முட்டைகள் வாங்குவதிலே ஊழல் நடைபெற்றதாகக் கூறப்பட்டதே, ஏடுகளில் செய்தி வந்ததே, என்னவாயிற்று? பருப்புக் கொள்முதலில் விதிமுறைகள் மீறப்பட்டதாக வந்த செய்திக்குப் பதில் எங்கே?

தொழிற்சாலைகள்

தொழிற்சாலைகள்

புதிய தொழிற்சாலைகள் ஏதாவது உண்டா? வெளி மாநில முதலமைச்சர்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு வந்து இங்கேயுள்ள தொழிலதிபர்களை எல்லாம் அழைக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? இதுவரை மூடப்பட்ட நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற தொழிற் சாலைகள் இன்னும் எத்தனை? இதுதான் தொழில் வளர்ச்சிக்கான அடையாளமா? தொலைநோக்குத் திட்டங்கள் என அறிவிக்கப்பட்டவை எல்லாம் என்ன வாயிற்று? சென்னை மாநகர மேயர் மீது குற்றச்சாட்டு, நடவடிக்கை என்றெல்லாம் ஏடுகளிலே செய்தி வந்ததே, என்ன ஆயிற்று? வந்த செய்தி பொய்யா? நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, ஜாமீனில் ஜெயலலிதா வீட்டிலே இருக்கிறார். மேல் முறையீடு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசுப் பணியில் இருக்கும் அதிகாரிகள் அவரைச் சென்று சந்திக்கிறார்கள், ஆலோசனை நடத்துகிறார்கள் என்றால் சட்ட நெறிமுறைகளின்படி அது சரிதானா? இதற்கெல்லாம் விடிவு வேண்டாமா? ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களையும், காவல் துறை அதிகாரிகளையும் அழைத்து முதலமைச்சர் நடத்தும் மாநாடு ஏன் இந்த ஆண்டு நடத்தப்படவில்லை?

வெட்கம் இல்லை

வெட்கம் இல்லை

கடந்த ஆண்டு கலெக்டர்கள் மாநாட்டை நடத்தி, முதலமைச்சர் எத்தனையோ அறிவிப்புகளைச் செய்தாரே, அந்த அறிவிப்புகள் எல்லாம் என்ன ஆயிற்று? அது குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்ற கோரிக்கைக்கு என்ன பதில்? எப்படியோ, அ.தி.மு.க. ஆட்சியினர் மூன்றரை ஆண்டுக் காலத்திலேயே தமிழ்நாட்டின் நிதி நிலைமையை பாழ்படுத்தித் திவாலாக்கி விட்டார்கள்; நம்பி வாக்களித்த மக்களின் நம்பிக்கையைக் கொன்று ஏமாற்றி விட்டார்கள் என்பது தான் அசைக்க முடியாத உண்மை. வெட்கமில்லை; வெட்கமில்லை; இதில் யாருக்கும் வெட்கமில்லை! என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK leader Karunanidhi blasted ADMK government for spending the government money without earning anything.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X