For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்எல்சியில் நேற்று நடந்தது உள்நாட்டுப் போர்.. கருணாநிதி கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

Karunanidhi condemns NLC firing
சென்னை: என்எல்சி தொழிலாளர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். அதை உள்நாட்டுப் போர் என்றும் அவர் கடுமையாக வர்ணித்துள்ளார். தமிழக தொழிலாளர்களை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் விரட்டி விரட்டி தாக்கியதையும் அவர் கடுமையாக கண்டித்துள்ளார். மேலும் இதுதான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படும் பாடு என்றும் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை...

"பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பார்கள்! நேற்றையதினம் நெய்வேலியில் உள்நாட்டுப் போர் ஒன்றே நடைபெற்றிருக்கிறது. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த 35 வயதே நிரம்பிய ராஜ்குமார் என்பவர், மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து நெய்வேலி இரண்டாவது சுரங்கத்தின் நுழைவு வாயிலில், தொழிலாளர்களுக்கும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினருக்கும் இடையே
கலவரம் மூண்டு இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்கள் மீது மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி விரட்டியதில், பல தொழிலாளர்கள் காயமடைந்துள்ளார்கள்.

தொழிலாளர்களைத் தாக்கியதோடு நிறுத்தாமல், அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களையும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் அடித்து நொறுக்கியதில், 20 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்ததாக செய்திகள் வந்துள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற தொ.மு.ச. தலைவர் திருமால்வளவனையும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் தாக்கி, அவர் காயமடைந்து தற்போது சென்னையில் மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டிருக்கிறார். பாதுகாப்புக்காக வந்த போலீசாரும் தொழிலாளர்களை விரட்டிச் சென்று, அவர்கள் தஞ்சம் புகுந்த வீடுகளுக்குள் நுழைந்து தாக்கியதாக செய்தி வந்திருக்கிறது.

தொழிலாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியதாகவும், நிறுவனப் பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதாகவும் அவர்களுடைய கேமராக்கள் நொறுக்கப்பட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

ஆனால் தமிழக அரசின் சார்பில் எந்தவொரு அமைச்சரோ, அதிகாரிகளோ சென்று நிலைமையைப் பார்த்ததாகவோ, தொழிலாளர்களைச் சமாதானப்படுத்தியதாகவோ தகவல்கள் வரவில்லை. காவல் துறையைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரி தான் சம்பவங்கள் நடைபெற்ற பிறகு அதிரடிப்படையினரோடும், வேறு சில அதிகாரிகளோடும் அங்கே வந்திருக்கிறார்கள்.

இந்த ஆட்சியில் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு வன்முறைகள் ஆங்காங்கு நடைபெறுகிறது என்பதற்கு இதெல்லாம் தக்க உதாரணங்களாகும்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரண நிதி கூட இந்த அரசினால் இதுவரை அறிவிக்கப்படவில்லை. உடனடி அரசு நிர்வாகத்தில் இருப்போர் நெய்வேலியில் அமைதி திரும்புவதற்கும், தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் முடிவடைவதற்கும், மறைந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு போதுமான நிவாரண நிதி அளிக்கவும் முன்வரவேண்டுமென்று வலியுறுத்துவதோடு, முதலமைச்சரின் தேர்தல் சுற்றுப் பயணத்திற்காக ஆயிரக்கணக்கான போலீசாரைக் கொண்டு வந்து குவிக்கும் காவல் துறை, இதுபோன்ற தொழிலாளர்களின் துயரத்தைக் களையவும் முன் வர வேண்டுமென்று வற்புறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK chief Karunanidhi has condemned the NLC firing which claimed one worker's life and dubbed the attack on TN workers by the CISF forces, as 'civil war'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X