For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் உயிரோடும் மூச்சோடும் கலந்தவர் காஸ்ட்ரோ- கருணாநிதி புகழஞ்சலி #FidelCastro

உலக பெருமைக்குரிய தலைவர்களில் பிடல் காஸ்ட்ரோ தான் மறக்க முடியாதவர்களில் ஒருவர் என திமுக தலைவர் கருணாநிதி புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார். 90 வயதான பிடல் காஸ்ட்ரோ சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்தார். பிடல் காஸ்ட்ரோ ஆட்சிக்கு வந்ததும் கியூபாவில் இலவச கல்வியை அறிமுகப்படுத்தினார். 995ம் ஆண்டு யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபா படிப்பறிவு 96 சதவீதம் ஆனது குறிப்பிடத்தக்கது. கியூபாவில் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் 60 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்படத்தக்கது. மருத்துவத்துறையிலும் கியூபா உயர்வுபெற காஸ்ட்ரோ காரணம் ஆவார். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் கியூபாவில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்கின்றன.

Karunanidhi condole the death of Fidel Castro

பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு இந்திய அரசியல் தலைவர்களும், தமிழக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உலக பெருமைக்குரிய தலைவர்களில் பிடல் காஸ்ட்ரோ தான் மறக்க முடியாதவர்களில் ஒருவர் என கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும் என் உயிரோடும் மூச்சோடும் கலந்தவர் காஸ்ட்ரோ என கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி :

ஒரு சின்னஞ்சிறிய நாட்டில் சிங்கக் குட்டியாக உலவி பெருமைக் குரிய புரட்சித் தலைவனாக வளர்ந்த பிடல் காஸ்ட்ரோ நான் மறக்க முடியாத மாவீரர்களில் ஒருவர். கியூபா மண்ணின் நெஞ்சம் நிறைந்த அந்தத் தலைவனைப் பற்றியும் அவன் நடத்திய போராட்டத்திற்கு துணை நின்ற தளபதிகளாக இருந்தோர், பொறுமை காத்து பொறுப்பேற்றோர் ஆகிய இவர்களைப் பற்றியும் அந்தக் கியூபா நாட்டின் பெருமை போற்றும் விழா ஒன்று 2006ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற போது அந்த மாநாட்டில் நான் வழங்கிய கவிதையினை தற்போது நினைவூட்டுவதே மறைந்த அந்த மாவீரனுக்கு நான் செலுத்தும் அஞ்சலியாகும். பிடல் காஸ்ட்ரோவை இழந்து வாடும் "கியூபா" நாட்டு மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அவரது அபிமானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக!

உயிரோடிருக்கும் உலகத் தலைவர்கள் வரிசையில் உங்களைக் கவர்ந்த ஒருவரின் பெயரைக் கூறுக என்றார்; உயிரோடிருப்பவர் மட்டுமல்ல; என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள ஒரு தலைவர் உண்டு; அவர் தான் பிடல் காஸ்ட்ரோ என்றேன்.

இளம்பிராயத்திலேயே அவர் எழுச்சி முரசு! புரட்சிக் கனல்! இனங்கண்டு எதிரிகளை வீழ்த்திக் காட்டும் மூளைக்குச் சொந்தக்காரர்!

இருளில் சர்வாதிகாரியாகவும், வெளிச்சத்தில் ஜனநாயகவாதியாகவும் இரட்டை வேட அரசியல் நடத்திய 'பாடிஸ்டா' எனும் பசுத்தோல் வேங்கை; அந்த விலங்கின் வேஷத்தைக் கலைக்கத் துணிந்து; அதற்கோர் அணியைத் தயாரித்துப் போரிட்டுத் தோல்வியுற்று; சிறைப்பட்டு; நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட போது தான் "வரலாறு என்னை விடுதலை செய்யும்'' எனும் வைர வரிகளைச் சரித்திரப் புத்தகத்தில் வையம் புகழ் சித்திரமாகப் பதிய வைத்தார்; காஸ்ட்ரோ!

பாடிஸ்டா ஆட்சியில் பிடலுக்கு பதினைந்தாண்டு சிறை என்றதும் - பற்றி யெரிந்த மக்களின் புரட்சி நெருப்புக்கு; ஈடு கொடுக்க முடியாமல் இரண்டே ஆண்டுகளில் சிறைக் கதவு திறந்தது, சிங்கம் வெளியே வந்தது - அந்த சிங்கத்துக்கோர் சிறுத்தை துணை சேர்ந்தது; அதன் பெயர்தான் சேகுவேரா!

தங்கத் தம்பியாம் ராவ் காஸ்ட்ரோவையும், தம்பி போன்ற சேகுவேராவையும், அங்கம் வகிக்கச் செய்து ஆர்த்தெழுந்து போரிட்டு முன்னேறவே; பங்கமுற்ற பாடிஸ்டா பயந்து நடுங்கி - இனி கியூபா மக்களிடம் தன் சேட்டைகள் செல்லாதென்று நீயும் வா என்று ஆணவத்தையும் அழைத்துக் கொண்டு; நாட்டை விட்டே ஓடி விட்டான்; நல்லாட்சி மலர வழி விட்டு! கேட்டைக் களைந்தெறிந்த காஸ்ட்ரோ; தலைமை வழி காட்டியானார்!

கடமையும் பொறுப்பும் வந்தவுடன் கடந்த காலத்தை மறந்து விடாமல்; சோதனைகளை சந்தித்து மறைந்த ஜோஷ் மார்ட்டியின் தலைமைக்கும், சாதனைகள் புரிந்து மறைந்த சிபாசின் வழிகாட்டுதலுக்கும், மதிப்பும் மரியாதையும் அளித்திட மறக்காத மாவீரர் தான் பிடல் காஸ்ட்ரோ!

'கியூபா' சின்னஞ் சிறிய நாடு ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட அழகிய தேன் கூடு! தேன் கூடென்று ஏன் சொல்கிறேன் தெரியுமா?

தெரியாமல் அமெரிக்கா கை வைக்கும் போதெல்லாம் கொட்டி விடும் தேனீக்கள் கியூபாவின் மக்கள் - அந்தக் கூடு காக்கும் காவல்காரர் தான் பிடல் காஸ்ட்ரோ!

நல்வாழ்வுச் சட்டங்கள் பலவும் - மக்கள் நலம் பெருக்கும் சாதனைகள் பலவும் இல்வாழ்வையும் துறந்து இலட்சியத்துக்காக வாழ்ந்திடும் காஸ்ட்ரோவின் புகழ்மிகு வரலாற்றின் பொன்னேடுகளாய் புதிய புதிய பக்கங்களாய்ப் புரண்டு கொண்டேயிருக்கின்றன.

உலகின் சர்க்கரைக் கிண்ணம் எனப் பேசுமளவுக்குக் கரும்பு வயல்களைக் கொண்ட கியூபாவில் சர்க்கரை வாங்குவதையே நிறுத்தி பொருளாதாரச் சரிவு ஏற்படுத்த அமெரிக்கா ஆயத்தமான போது; சீனாவும், சோவியத்தும் தான் சிநேக நாடுகளாய்க் காஸ்ட்ரோவுக்கு கை கொடுத்த கதை உலகறியும்!

"வாழை தென்னை மரங்களை வலிமைமிகு துதிக்கையால் யானை முறித்துப் போட்டு விடும் அந்த யானை போன்றதே அமெரிக்கா' என்றனர். அதற்கு காஸ்ட்ரோ அஞ்சி நடுங்கவில்லை.

வாழை மரம், தென்னை மரங்களை; யானை, வாயிலே போட்டுக் கொள்ளலாம் எளிதாக! ஆனால் அங்குசத்தை யானை விழுங்க முடியுமா? அங்குசந்தான் கியூபா; அமெரிக்க யானைக்கு!

வெள்ளி விழா ஐ.நா. சபைக்கு நடந்த போது - பல நாடுகளின் தலைவர்களுக்கு மத்தியில் முப்பத்திரண்டு வயது நிரம்பிய சிவப்பு நட்சத்திரமாக முதுபெரும் தலைவர்களால் பாராட்டப் பெற்றவர் பிடல் காஸ்ட்ரோ முதற்கட்டமாக ஸ்பெயின் நாட்டின் காலனி கியூபா - அடுத்த கட்டம் அமெரிக்காவின் காலுக்கு அணியாக ஆக வேண்டும் கியூபா என்று ஆதிக்கபுரியினர் முனைந்த போது; அது தான் முடியாது; அந்தக் காலையே முடமாக்குவோமென்று - மக்களைத் திரட்டினார் பிடல் காஸ்ட்ரோ - மலைப்புற்ற ஏகாதிபத்தியவாதிகள்; பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடினர் என்றால்; அது பிடல் காஸ்ட்ரோவின் உறுதிக்கும் - அவரைப் பின்பற்றும் மக்களின் மகத்தான சக்திக்கும்; பின்பலமாய் மார்க்சின் தத்துவம் இருப்பதற்கும் அடையாளம்! என்று தெரிவித்துள்ளார்.

English summary
DMK president Karunanidhi has expressed condoles the death of Cuban legendary revolutionary leader Fidel Castro.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X