For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நள்ளிரவில் என்னைக் கைது செய்ததை கடுமையாக கண்டித்தவர் ராமச்சந்திர ஆதித்தன்- கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi condoles the death of B Ramachandra Adityan
சென்னை: தமிழ், தமிழர்கள், பிற்படுத்தப்பட்டோர் நலன் என்பவற்றில் என்றைக்கும் குறையாத அக்கறையும் ஆர்வமும் கொண்டவர் ராமச்சந்திர ஆதித்தன் அவர்கள். நள்ளிரவில் என்னைக் கைது செய்ததை மிகக் கடுமையாக கண்டித்த ராமச்சந்திர ஆதித்தன் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாலைமுரசு அதிபர் பா.ராமச்சந்திரன் ஆதித்தன் மறைவுக்கு திமுக தலைவர் தெரிவித்துள்ள இரங்கல்...

மாலைமுரசு அதிபர் பா. ராமச்சந்திர ஆதித்தன் அவர்களை இழந்து வாடும், அவருடைய அருமைச்செல்வன் கண்ணன் ஆதித்தன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், மாலை முரசு இதழில் பணியாற்றும் தொழிலாளத் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமு கழக ஆட்சியில் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்த போது தமிழகச் சட்டப் பேரவையின் தலைவராகவும், பின்னர் நான் முதலமைச்சராக ஆன பின்னர் தமிழக அரசின் வேளாண்மை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சராகவும் பணியாற்றி மாப்புகழ் கொண்டவரும், தமிழகத்தில் பாமரர்களும் நாளேடுகளைப் படிக்க வேண்டுமென்ற உணர்வுக்கு வித்திட்டவரு மான சி.பா. ஆதித்தனார் அவர்களின் மூத்த மைந்தர், அருமை நண்பர், பா. ராமச்சந்திர ஆதித்தன் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

தமிழ், தமிழர்கள், பிற்படுத்தப்பட்டோர் நலன் என்பவற்றில் என்றைக்கும் குறையாத அக்கறையும் ஆர்வமும் கொண்டவர் ராமச்சந்திர ஆதித்தன் அவர்கள். நான் முதலமைச்சராக ஆன போது மிகவும் பெருமைப்பட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக ஆகியிருக்கிறார் என்றெல்லாம் பாராட்டியவர்.

இன்னும் சொல்லப் போனால் 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே, நள்ளிரவில் கதவை உடைத்துக் கொண்டு வீடு புகுந்து என்னைக் காவல் துறையினர் கைது செய்து இழுத்துச் சென்ற கொடுமையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவருடைய "மாலை முரசு" நாளிதழில் முதல் பக்கத்திலேயே ராமச்சந்திர ஆதித்தன் தன்னுடைய கையொப்பமிட்டு ஒரு தலையங்கம் எழுதியிருந்தார்.

அதில், "ஜுன் 30, சுதந்திர இந்தியச் சரித்திரத்தில் ஒரு கறுப்பு நாள்! தமிழகத்தின் மூத்த தலைவரான கலைஞரை தட்டி எழுப்பி, அவரை அரக்கத்தனமாக போலீஸ் உயர் அதிகாரிகள் அடித்து இழுத்துச் சென்று சிறையில் தள்ளிய கொடுமை நிகழ்ந்த நாள். அரசியல் சட்டம் ஒரு மாநில முதலமைச்சருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, ஜனநாயக மரபுகளையும், சட்ட விதிகளையும் மீறி முதல்வர் ஜெயலலிதா; கலைஞர் மீது வரம்பு மீறிய இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார். மத்திய அரசு இதில் தலையிட்டு கலைஞர் மீது மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட உயர் போலீஸ் அதிகாரிகள் அனைவரது மீதும் வன்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உணர்ச்சி பொங்க அவர் எழுதியிருந்த அந்தக் கண்டனக் குரலை நான் என்றைக்கும் மறந்திட இயலாது.

அவர் மறைவு, தமிழ்ச் சமுதாயத்திற்கும், பத்திரிகை உலகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும், அவருடைய அருமைச் செல்வன் கண்ணன் ஆதித்தன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், மாலை முரசு இதழில் பணியாற்றும் தொழிலாளத் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

English summary
DMK president Karunanidhi has condoled the demise of media mogul B Ramachandra Adityan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X