திமுகவை யாராலும் அழிக்க முடியாது… முப்பெரும் விழாவில் பேசிய கருணாநிதி
சென்னை: திமுக முப்பெரும் விழா சென்னையில் நேற்று அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடந்தது. அதில் பாவேந்தர் விருது க.திருநாவுக்கரசுக்கும், பெரியார் விருத மும்பை ஆரிய சங்காரனுக்கும், கலைஞர் விருது எஸ்.ஏ.எம். உசேனுக்கும், அண்ணா விருது எல். கணேசனுக்கும் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் கருணாநிதி ஆற்றிய உரை:
அண்ணா அறிவாலயத்தில் இந்தக் கலைஞர் அரங்கம் இன்றையதினம் எழில் குலுங்க, ஏற்றம் விளங்க எல்லோரும் பார்த்து வியந்திட மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கின்ற இந்த அரும்பெரும் நிகழ்ச்சி என்னையும் எவ்வளவோ துன்பத்திற்கிடையே, எவ்வளவோ இடர்ப்பாடுகளுக்கிடையே, எவ்வளவோ சிக்கலான பிரச்சினைகளுக்கிடையே மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.

இன்றைக்கு இந்த நிகழ்ச்சியிலே நான் கலந்து கொண்டிருக்கும்போது, என்னுடைய நினைவெல்லாம் நான் மழலைப் பருவத்திலே இருந்த அந்தக் காலந்தொட்டு, நான் வளர்ந்து ஆளாகிற வரையில் என்னைத் தூக்கி வளர்த்து, தொட்டிலில் இட்டும், பசியாற உணவு கொடுத்தும், வாழ்த்தியும், தாலாட்டுப் பாடித் தூங்க வைத்தும் தொடர்ந்து தூக்கிக் கொண்டிருந்த காரணத்தாலேயே தன்னுடைய இடுப்பு கூட வளைந்து விட்டது என்று பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் எல்லாம் சொல்லக் கூடிய அளவிற்கு என்னிடத்திலே பாசப் பிணைப்பு வைத்திருந்த என்னுடைய அருமைச் சகோதரி குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால், தம்பி முரசொலி மாறனின் தாயார், முரசொலி செல்வத்துக்கும் தாயார் - அவர்கள் உயிர் வேதனை பட்டு, இப்போதோ எப்போதோ என்ற கேள்விக்குறியோடு படுக்கையிலே இருக்கின்ற சூழ்நிலையை எண்ணிப் பார்க்கிறேன்.
அந்தக் கவலையெல்லாம் மறந்துபோகும் அளவிற்கு, என் எதிரே வீற்றிருக்கின்ற உங்களை எண்ணுகிறேன், ஆறுதல் பெறுகிறேன். எனக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரே மருந்து, வேறு எங்கும் தேடிச் சென்று பெற்றுக் கொள்ள வேண்டியதில்லை. எந்த மருத்துவர்களிடத்திலும் கிடைக்காது.
முகங்களை பார்த்து மகிழ்ச்சி
ஒரே மருந்து, மகிழ்ச்சியாக இருக்கின்ற உங்களுடைய முகங்களைப் பார்ப்பது தான் அந்த மருந்து. உங்களுடைய ஆர்வத்தைக் காண்பது தான் அந்த மருந்து. அந்த மருந்து என்னிடத்திலே இருக்கின்ற வரையில் எனக்குப் பயன்படுகின்ற வரையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை "மண் மூடிப் போகச் செய்வோம்" என்றெல்லாம் சொல்லுகின்ற அந்த வசைமாரிகள், அந்தச் சாபக்கேடுகள் எங்களைத் தீண்டாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
ஒருவனுக்கு சாவு வரலாம். மரணம் நேரிடலாம். ஒரு மனிதனுடைய வாழ்க்கை அவனுடைய சாவோடு மரணத்தோடு முடிந்து விடுவதில்லை. மரணத்திற்குப் பிறகும் வாழ்கிறானே, அவன் தான் மனிதன். தங்களுடைய மரணத்திற்குப் பிறகும் வாழ்கிறவர்களின் பெயரால் தான் இன்றைக்கு நாம் விழாக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். மரணத்திற்கும் பிறகும் வாழ்கின்ற நம்முடைய மாபெரும் தலைவர் தந்தை பெரியார், மரணத்திற்கும் பிறகும் வாழ்கின்ற நம்முடைய இனமானத் தலைவர் பேரறிஞர் அண்ணா, மரணத்திற்கும் பிறகும் வாழ்கின்ற புரட்சிக் கவிஞர், பாரதி தாசன் இவர்கள் எல்லாம் மரணம் அடைந்தவர்கள் என்று சொல்லப்பட்டாலும் அவர்களுடைய புகழுக்கு, கீர்த்திக்கு, பெருமைக்கு என்றைக்கும் மரணம் இல்லை. அப்படிப்பட்ட அரும் செல்வங்களுடைய நினைவோடு இந்த நிகழ்ச்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
தடை இல்லையே?
எனக்கு ஒரு பெரிய ஆச்சர்யம். இதுவரையிலே இந்த விழாவிற்குக் கூட தடை வரவில்லையே, என்ன காரணம் என்பது தான். தடை வேறு எது எதற்கோ வந்திருக்கிறது. சில தலைவர்கள் சில மாவட்டங்களின் எல்லைக்கு அப்பால் செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறார்கள். சில தலைவர்கள் மாவட்டங்களில் கலந்து கொண்டாலும், குறிப்பிட்ட சில விஷயங்களைப் பற்றிப் பேசக் கூடாது என்று தடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதெல்லாம் சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் செழித்தோங்குவதாகச் சொல்லப்படுகிற தமிழகத்தில் நடைபெறுகின்ற வேடிக்கைகள், விந்தைகள். இதற்கிடையே நாம் இன்றைக்கு அரசியல் நடத்துகிறோம், சமுதாயப் புரட்சிக்கான காரியங்களைச் செய்கிறோம்.
இதையெல்லாம் செய்கிற அளவிற்கு நமக்குத் தைரியம் கொடுத்தது யார் என்பதை எண்ணிப் பார்த்தால், அதற்கு மிகச் சாதாரணமாக, எளிதாக விடை கிடைக்கும். நாம், நாமாக இருப்பதற்கே காரணம், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தான் என்பதை நன்றியுள்ள எந்த மனிதனும் மறக்க முடியாது.
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் அவர் பட்ட வேதனைகள், அவர் ஏற்றுக் கொண்ட தியாகங்கள், அவர் பட்ட அடிகள், உதைகள், சிறைச்சாலைகளிலே ஏற்பட்ட தழும்புகள் - அதைப் போலவே அண்ணா அவர்களுக்குக் கிடைத்த வசைமாரிகள், ஏசல் மொழிகள், அதற்குப் பிறகு தொடர்ந்து அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை ஆற்றிய, ஆற்றுகிற அந்தச் செயல்களுக்காக நமக்குக் கிடைக்கின்ற தொடர் தொல்லைகள், இவைகள் எல்லாம் எப்படி நம்மால் தாங்கிக் கொள்ள முடிகிறது என்பதை நினைத்துப் பார்த்தாலே எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.
தலைவர்களுக்கு நன்றிக்கடன்
ஆனால் தாங்கிக் கொள்கிறோம், நாம் தாங்கிக் கொள்கிற நேரத்திலே நம்மைத் தடவிக் கொடுத்து வளர்க்கின்ற தாயாக, தந்தையாக இருக்கின்ற தலைவர்களை எண்ணிப் பார்க்கிறோம். அந்தத் தலைவர்களுடைய பெயரால் விழா நடத்தும்போது, விழாவுக்கு நாம் தருகின்ற பெருமையை விட, யாருடைய பெயரால் விழா நடத்துகிறோமோ, அந்தப் பெயருடைய தலைவர்களுக்கு நாம் செலுத்துகின்ற நன்றி தான், இந்த விழா எடுப்பதாகும். அந்த நன்றிக்கடனுக்கான விழா தான் இன்றைய முப்பெரும் விழா.
முப்பெரும் விழா திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய அந்த நிலையை நினைத்து மகிழுகின்ற விழா. முப்பெரும் விழா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய - அவ்வப்போது கிடைக்கின்ற வெற்றிகளை எண்ணி நடத்துகின்ற விழா, பெரு விழா. அத்தகைய விழாவினை இன்றைக்கு நாம் நடத்து கிறோமென்றால், அண்ணாவை விட்டு விட்டு, தந்தை பெரியாரை விட்டு விட்டு, மறந்து விட்டு இந்த விழாக்களை நாம் நடத்த முடியாது. ஏனென்றால், அவர்களால் ஆளாக்கப்பட்டவர்கள் நாம். அவர்களுடைய பிள்ளைகள், பேரர்கள், பேத்திகள் நாம். ஒரு குடும்பப் பாசத்தோடு உருவான கட்சி.
அழிக்க முடியாது
இந்தக் கட்சியைக் குலைத்து விடலாம், இந்தக் கட்சியை அழித்து விடலாம் என்று யாராவது எண்ணுவார்களேயானால், அவர்களுக்கு இந்தத் தைரியத்தைக் கொடுத்தது, அவர்கள் இன்றைக்கு ஏற்றிருக்கின்ற அல்லது அவர்களுடைய தலையிலே சுமத்தப்பட்டிருக்கின்ற அந்தக் கிரீடத்தினுடைய மகிமை என்று கருதுவார்களேயானால், உலகத்திலே எத்தனையோ கிரீடங்கள் தவிடுபொடியாகி இருக்கின்றன. எத்தனையோ அரசுகள் இருந்த இடம் தெரியாமல் போய் இருக்கின்றன. அதைப் போல திராவிட முன்னேற்றக் கழகத்தை மண்ணிலே போட்டு நாங்கள் புதைத்து விடுவோம் என்று கூட நேற்றைக்கு ஒரு அம்மையார் சொல்லியிருக்கிறார். நான் அவர்களின் பெயரையெல்லாம் சொல்லி, இந்த நல்ல விழாவிலே இதைக் கெடுக்க விரும்பவில்லை. இது மண் மூடிப் போகும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.
உலகத்திலே பிறந்த யாராக இருந்தாலும், அவர்கள் கடைசியாக மண் மூடித் தான் போவார்கள். இதற்கு யாரும் விதி விலக்கல்ல. யாரும் மண் மூடாமல் இருக்க முடியாது. அப்படி மண் மூடிப் போகின்ற நேரத்தில் அந்த மூடப்பட்ட இடத்திலே எழுப்பப்படுகின்ற கல்லறையில் "துரோகி" என்று பெயர் எழுதப்படுகிறதா அல்லது "இனத்திற்காகப் பாடுபட்டவர்" என்று எழுதப்படுகிறதா என்பது தான் முக்கியம். அத்தகைய நிலையை எண்ணிப் பார்க்கின்ற ஒரு கூட்டம் திராவிட இயக்கத்திலே உள்ள இந்தக் கூட்டம். திராவிட இயக்கம் என்று நான் சொல்லும்போது, இன்றைக்கு விருது பெற்ற, பரிசு பெற்ற, பாராட்டுப் பெற்ற ஐந்தாறு பேரை மாத்திரமல்ல; ஒவ்வொரு வருக்கும் ஒரு தனி முத்திரை உண்டு.
எல்.ஜி. என்றால் தமிழ் காக்கும் போராட்டத்தின் தளகர்த்தர் என்று இங்கே சொன்னார்கள். ஆரிய சங்காரனுக்கு பெயர் வைத்ததே தந்தை பெரியார் தான். ஆரிய சங்காரன் என்று! நான் இந்தப் பெயரைக் குறிப்பிட்டு, தலைமைக் கழகத்திலே விவாதித்துக் கொண்டிருந்த போதுகூட, அவர்கள் என்னிடம் எழுதிக் காட்டிய போது "ஆரியசங்கரன்" என்று தான் எழுதிக் கொடுத்தார்கள். ஆரியசங்கரன் என்றால், பரமசிவனுடைய பாராட்டு. இந்த ஆரிய சங்காரன், ஆரியர்களை சங்காரம் செய்யக் கூடியவன் என்ற அந்தப் பெயரைப் பெற்றவர்.
அவருடைய இயற்பெயர் ரத்தினவேல். அந்த ரத்தினவேல், இளமைப் பருவத்திலே பம்பாயில் தந்தைப் பெரியாரைச் சந்தித்து, அவருக்கு மாலை அணிவித்த போது, "எனக்குப் பெயர் சூட்டுங்கள்" என்று கேட்டநேரத்தில், இப்போது உன் பெயர் என்ன என்று கேட்க, இவர் "ரத்தினவேல்" என்றார், அதை மாற்றி "ஆரிய சங்காரன்" என்று வைத்துக் கொள் என்று அந்தப் பெயரைச் சூட்டியவர் தந்தை பெரியார் தான்.
தந்தை பெரியார் "ஆரியத்தை" - "ஆரியர்களை" அல்ல - சங்காரம் செய்ய வேண்டும் என்று தன்னுடைய திட்டவட்டமான கருத்தை ஒரு பெயராகச் சூட்டினார். அந்தப் பெரியாரைப் பெருமைப்படுத்துகின்ற வகையில், அந்தப் பெரியாரால் பெயர் சூட்டப்பட்ட ஆரிய சங்காரனுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்றைக்கு நாம் விருது அளித்திருக்கிறோம்.
தம்பி திருநாவுக்கரசு முரசொலி பத்திரிகையில் எழுதுவது மாத்திரமல்ல, தனியாகவே பல எழுத்தோவியங்களைத் தமிழகத்திற்கு தந்தவர். அவருக்கு நாம் இன்றைக்கு விருது வழங்கியிருக்கிறோம். எஸ்.ஏ.எம். உசேன், உழைப்புக்குப் பெயர் உசேன் என்று சொன்னால் அது இந்த மனிதர் ஒருவருக்குத் தான் பொருந்தும் எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் ஓடி வந்து, உழைக்கின்ற தோழர். தன்னுடைய உடல் நிலையைப் பற்றிக் கவலைப்படாமல், குடும்பத்தின் நிலைகளைப் பற்றி வருத்தப்படாமல், கழகம், கழகம், கழகம் என்றே எல்லா நேரத்திலும் உச்சரித்துக் கொண்டு உயிர் வாழக் கூடிய ஒருவர் உசேன். இந்தப் பாராட்டை விட வேறு எந்தப் பாராட்டையும் உசேனைப் போன்றவர்கள் விரும்பாத காரணத்தால் தான் அவருக்கு என் பெயரால் உள்ள கலைஞர் விருதை இன்றைக்கு வழங்கியிருக்கிறோம்.
திருநாவுக்கரசுக்கு "பாவேந்தர் விருது" வழங்கியிருக்கிறோம் என்றால், பாவேந்தர்
"சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு
தேக்கிய நல் வாய்க்காலும் வகைப்படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன் விளைக்கும்
நிறை உழைப்பு தோள்கள் எலாம் எவரின் தோள்கள்?
கற்பிளந்து மலை பிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்து தந்த கை தான் யார் கை?
பொற்றுகளை, கடல் முத்தை மணிக் குலத்தை
போய் எடுக்க அடக்கிய மூச்சு எவரின் மூச்சு?""
என்று பாடினாரே, அந்தப் பாடலுக்காக அல்ல - அந்தப் பாட்டின் ஆழத்தைப் புரிந்து கொண்டு, அதை எழுத்தோவியமாக வடிக்கின்ற ஆற்றலாளர் தம்பி திருநாவுக்கரசு அவர்கள். பாவேந்தர் விருது, எல்லா வகையிலும் அவருக்குப் பொருத்தமுடையது.
பெருங்காயத்தின் மணம்
அண்ணா விருது பெற்றுள்ள அருமைத் தம்பி எல்.ஜி. எல்.ஜி. என்றாலே என்னுடைய இளமைப் பருவத்திலே நான் பழகிக் கொண்ட ஒரு பெயர் "எல்.ஜி." - எல்.ஜி. பெருங்காயம் என்ற ஒரு பொருள் விற்கப்படும். ரொம்பக் காரமானது. அதை குழம்பிலே போட்டால், சமையலுக்குப் பயன்படுத்தினால் ""கமகம" வென்று வாசிக்கும். அந்த "எல்.ஜி."க்கு உள்ள அருங்குணம், அந்தச் சிறப்பு அத்தனையும் நம்முடைய எல்.ஜி.க்கு உண்டு.
ஆனால் அவர் திராவிட இயக்கத்திலே அன்றும் சரி, இன்றும் சரி, இடையிலே கொஞ்ச காலம் - நீங்கள் கைதட்டுவதிலிருந்து உங்களுக்குப் புரிந்து விட்டது என்பது எனக்கும் புரிந்து விட்டது, நம்மை விட்டுச் சென்றிருந்தாலும், நம்மை விட்டுச் சென்றவர்களுக்காக நான் அதிகம் கவலைப்பட்டது எல்.ஜி. ஒருவருக்காகத் தான் என்பதை நான் தலை நிமிர்ந்து சொல்வேன். அப்படிப்பட்ட உற்றத் தோழராக, நல்ல யோசனையாளராக, கழகத்தை வளர்ப்பதற்கு அரும்பெரும் கருத்துகளைச் சொல்லக் கூடிய பேழையாக எல்.ஜி. விளங்குகிறார்.
பாவேந்தர் விருது
திருநாவுக்கரசு பாவேந்தர் விருதைப் பெற்றிருக்கிறார். அவர் இன்றைக்கும் எழுதிக் கொண்டிருக்கிறார். அந்த எழுத்துக்கள் எல்லாம் ஆய்வுக் கட்டுரைகளாக, ஆராய்ச்சிப் புதினங்களாக சில நேரங்களில் ஆரியத்தை வீழ்த்து கின்ற போர்வாள் என்ற முறையிலே அவைகள் விளங்குகின்றன. அடிக்கடி முரசொலியிலே அவர் எழுத்துகளைப் படித்திருப்பீர்கள். ஒன்றிரண்டை நானே வேண்டாமென்று தடுத்திருக்கிறேன். ஏனென்றால் அவ்வளவு பெரிய கூர்வாள்கள், ஈட்டிமுனைகள் அந்த எழுத்துகள். அதை நம்முடைய எதிரிகள் தாங்க மாட்டார்கள் என்று, எதிரிகள் மீதுள்ள அன்பால் நான் திருநாவுக்கரசைப் பார்த்து, வேண்டாம், அவர்களை விட்டு விடுங்கள் என்று சொல்லக் கூடிய அளவிற்கு எழுதக் கூடிய ஆற்றல் மாத்திரமல்ல, அந்த எண்ணத்திலே திண்மை உள்ளவர் திருநாவுக்கரசு.
கழகத்தின் மாவீரர்கள்
இத்தகைய அரும்பெரும் படைக்கலன்கள், நம்முடைய கழகத்தின் மாவீரர்களுக்கு இந்த விருதுகள் எல்லாம் இன்றைக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு வாழ்த்துகளை தம்பி ஸ்டாலின் இங்கே வழங்கியிருக்கிறார். தம்பி துரைமுருகன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று, அவர் தலைமைக்குத் தகுதி யானவர் தான் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications