For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பகவத் கீதையை தேசிய நூலக அறிவிப்பதா? கருணாநிதி, டாக்டர் ராமதாஸ் கண்டனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தேசிய நூலாக பகவத் கீதையை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளதற்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Karunanidhi opposes Bhagavad Gita as national scripture

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

மத்திய அரசில் பா.ஜ.க. பொறுப்பேற்றதற்குப் பிறகு, சமூக வலைத் தளங்களில் கட்டாயம் "இந்தி" என்று தொடங்கி, "குரு உத்சவ்" என்று விழா எடுத்து, பாடமொழியாக "சமஸ்கிருதம்" என்று அறிவித்து, "இந்தியா இந்துக்கள் தேசமே" என்ற பேச்சுகளுக்கெல்லாம் இடம் கொடுத்து, மத்திய அமைச்சர் ஒருவரே அவசரப்பட்டு சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்து, அதற்காக பிரதமரே வருத்தம் கலந்த தொனியில் சமாதானம் செய்து பதில் கூறுகின்ற அளவுக்கு நிலைமை மாறி, இப்போது அடுத்த கட்டமாக "பகவத் கீதை" தேசியப் புனித நூலாக அறிவிக்கப்படுவதாக உள்ளது என்றும், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருவதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்து, மீண்டும் ஒரு "வம்பை" விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்.

டெல்லியில் 7-12-2014 அன்று நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய விஸ்வ இந்து பரிஷத் தலைவர், அசோக் சிங்கால், "இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை தேசியப் புனித நூலாக பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அறிவிக்கவேண்டும்" என்று பேசியதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், "பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்ற போது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பக்வத் கீதையைத் தான் பரிசளித்தார் என்றும், அப்போதே அதற்குத் தேசியப் புனித நுhல் தகுதி வழங்கப் பட்டு விட்டது என்றும், அதனைத் தேசியப் புனித நூல் என்ற அறிவிப்பு தான் இந்த ஆட்சியில் இன்னும் அரசு ரீதியாக வெளியிடப்படவில்லை என்றும், அந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டு விடும் என்றும்

பேசியிருக்கிறார்.

இந்தியா ஒரு மதச் சார்பற்ற குடியரசு நாடு என்று தான் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையிலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் "இந்து" மதம், "இஸ்லாமிய" மதம், "கிறித்தவ" மதம் "சீக்கிய" மதம், "ஜைன" மதம் போன்ற பல்வேறு மதங்கள் இருந்தாலும், அனைத்து மதங்களையும் சமமாகப் பாவித்து மதச் சார்பற்ற தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் அடிப்படை கோட்பாடாக இருந்திட வேண்டும்.

பல்வேறு மொழிகள், கலாச்சார பாரம்பரியங்கள், இனவேறுபாடுகள் இந்தியாவில் இருப்பதால்தான் இது பன்முகம் கொண்டு பரந்து விரிந்த நாடு; இங்கு சமத்துவமும், சமதர்மமும் போற்றப்பட வேண்டும் என்பது தான் அடிப்படைக் கொள்கையாக அமைந்திட வேண்டும். ஜனநாயகத்தில் அரசியலமைப்புச் சட்டம் தான் புனித நூலாகும் என்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது கண்டனத்தை வெளியுறவுத் துறை அமைச்சரின் கருத்துக்கு எதிராகத் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளது "அர்த்தமற்ற" கருத்து என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. அரசு பல்வேறு வகையில் மக்கள் நலம் பேணும் செயல்களில் ஈடுபட்டாலும் இது போன்ற தேவையற்ற செயல்களில் அவ்வப்போது ஈடுபடுவதன் மூலம் அதன் பெயரைக் கெடுத்துக் கொள்கிறதோ என்றும், பா.ஜ.க. அரசு முன்னோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், பின்னோக்கி இரண்டு அடிகள் வைக்கிறதோ என்று நடுநிலையாளர்கள் எண்ணுகின்ற முறையில் தான் நடைபெறுகிறது என்றும் எண்ண வேண்டியிருப்பதால்; பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சர்ச்சைக்குரிய இப்படிப்பட்ட கருத்துகளை ஒவ்வொருவரும் எழுப்பி மக்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நடந்து வளர்ச்சிப் பணிக்குக் குந்தகம் ஏற்படுத்தாதவாறு மிகுந்த எச்சரிக்கையோடு மத்திய அரசை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்று வலியுறுத்துவோடு, தேசியப் புனித நூலாக பகவத் கீதை அறிவிக்கப்படும் என்ற வெளியுறவுத் துறை அமைச்சரின் பேச்சுக்கு திராவிட ந்முன்னேற்றக் கழகத்தின் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.''

டாக்டர் ராமதாஸ் கண்டனம்

இதேபோல பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

டெல்லியில் நேற்று நடைபெற்ற பகவத் கீதை தொடர்பான விழாவில் பேசிய விசுவ இந்து பரிசத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த அறிவிப்பை சுஷ்மா வெளியிட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே இக்கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பிய சுஷ்மா, இப்போது தமது கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதால் அதற்கு செயல் வடிவம் கொடுக்கத் துடிக்கிறார். மதச்சார்பற்ற நாடு என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்திற்கு இலக்கணமாகவும் திகழும் இந்தியாவில் ஒரு சாராரின் புனித நூலாக கருதப்படும் கீதையை அனைத்துத் தரப்பினர் மீதும் திணிப்பது சரியானதாக இருக்காது.

அனைத்துத் தரப்பினரின் பிரச்னைகளுக்கும் பகவத் கீதையில் தீர்வு சொல்லப்பட்டிருப்பதால் தான் அதை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று தாம் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பகவத் கீதையில் பல நல்ல கருத்துக்கள் இருப்பதை மறுப்பதற்கல்ல. அதே கருத்துக்கள் திருக்குர் ஆனிலும், பைபிளிலும் உள்ளன. கீதை, குரான், பைபிள் ஆகிய மூன்றும் வெவ்வெறு மதங்களை பின்பற்றுபவர்களின் புனித நூலாக இருந்தாலும் அவை ஒரே மாதிரியான பாடங்களைத் தான் போதிக்கின்றன. இந்த சூழலில் கீதையை தேசிய நூலாக அறிவிப்பது, இந்தியாவை இந்து தேசமாக மாற்றும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டிருக்கிறது என்ற வாதத்திற்கு வலு சேர்ப்பதாகவே அமையும்.

உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது. இதை வலியுறுத்தி கடந்த 13.04.2005 அன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

கீதையுடன் ஒப்பிடும்போது திருக்குறளில் ஏராளமான முற்போக்குக் கருத்துகள் உள்ளன. கல்வி, சுகாதாரம், மனிதநேயம், உணவு முறை, தாய் அன்பு, போர், பெரியோரை மதித்தல், ஆட்சி முறை, எதிர்க்கட்சிகளுக்கான இலக்கணம் என திருக்குறளில் இல்லாதது எதுவுமே இல்லை என்னும் அளவுக்கு மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் உள்ளன. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை' என்ற ஒன்றே முக்கால் அடியில் உலகப் பொதுவுடமைக் கொள்கையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் இந்த உலகிற்கு வடித்துக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

'கடமையை செய்... பலனை எதிர்பாராதே' என்ற நிலக்கிழாரியக் கொள்கையை பகவத் கீதை வலியுறுத்துகிறது. ஆனால், திருக்குறளோ, ''தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்" என்று எந்த முயற்சிக்கும் பயன் உண்டு என்ற நம்பிக்கையை விதைக்கிறது. ''எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது... எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்" என்று கூறுவதன் மூலம் விதிப்பயனை நம்ப வேண்டும் என்று கீதை போதிக்கிறது. ''ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்" என்பதன் மூலம் சோர்வின்றி உழைத்தால் விதியையும் வெற்றி கொள்ளலாம் என்கிறது திருக்குறள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவையும் போதித்த திருக்குறளுக்கு மட்டுமே இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப்படும் தகுதி உள்ளது.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர் கடந்த 6 மாதங்களில் போற்றத்தக்க வகையில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மாறாக மொழித் திணிப்பு மற்றும் கலாச்சாரத் திணிப்பு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. ஒருபுறம் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று சுஷ்மா கூறும் நிலையில், இன்னொருபுறம் தமிழகத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்.

மொழித்திணிப்பையும், கலாச்சாரத் திணிப்பையும் தமிழகம் மட்டும் தான் கடுமையாக எதிர்க்கிறது என்பதால் ஒரு புறம் திருவள்ளுவரின் பிறந்த நாள் வட இந்திய பள்ளிகளில் கொண்டாடப்படும் என்று அறிவித்துவிட்டு, அதற்கான கொண்டாட்டங்களில் தமிழ்நாட்டு மக்கள் ஈடுபட்டிருக்கும்போது கீதையை தேசிய நூலாக அறிவிக்கத் துடிப்பது மோசடி அரசியலாகவே பார்க்கப்படும். எனவே, கீதையை தேசிய நூலாக அறிவிப்பதை கைவிட்டு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
DMK president M. Karunanidhi and PMK founder Dr.Ramadass on Monday condemned External Affairs Minister Sushma Swaraj for her proposal to make the Bhagavad Gita a national scripture, saying India is a secular country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X