For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லைப் பெரியாறில் புதிய அணைக்காக குழு அமைக்கும் கேரளாவின் யோசனைக்கு கருணாநிதி எதிர்ப்பு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக குழு ஒன்றை அமைக்கும் கேரளாவின் யோசனைக்கு திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த முதல் அமைச்சர் ஜெயலலிதா, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம், அதன் முழு நீர்த்தேக்க அளவான 152 அடிக்கு உயர்த்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

கேரள மாநில முதல்வராகத் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பினராயி விஜயன் அவர்கள் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றித் தமிழக அரசுடன் சுமூகமாகப் பேசித் தீர்வு காண விரும்புவதாகக் கடந்த மாதக் கடைசியில் கூறியிருந்தார். முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் டெல்லி சென்றிருந்த பினராயி விஜயனிடம், செய்தியாளர்கள் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு குறித்துக் கேட்ட போது இவ்வாறு கூறியிருக்கிறார்.

பினராயி விஜயன் முதல் கருத்து

பினராயி விஜயன் முதல் கருத்து

மேலும் "தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டுமென்ற முந்தைய கேரள அரசின் கொள்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. முல்லைப் பெரியாறு அணை வலுவுடன் இருப்பதாக உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் அணையைப் பார்வையிட்டு, பல்வேறு ஆய்வுகள் நடத்திய பிறகே அறிக்கை அளித்துள்ளனர். அந்தக் குழுவின் கருத்தை கேரள அரசு ஏற்கிறது. அணை விவகாரத்தில் எவ்வித முரண்பாடுகளையும் கடைப்பிடிக்க நாங்கள் விரும்பவில்லை. எந்தப் பிரச்சினை ஆனாலும் தமிழக அரசுடன் நேரடியாகவே பேசித் தீர்வு காண்போம்" என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள்

ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள்

உடனடியாக அவருடைய கருத்தினை வரவேற்றதோடு, இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா முன் வர வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் கடிதங்கள் எழுதியவன் என்ற முறையிலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், பிரதமராக இருந்த திரு. மன்மோகன் சிங் அவர்களின் ஆலோசனைப்படியும் கேரள முதல்வரோடு பேச்சுவார்த்தைகள் நடத்தியவன் என்ற முறையிலும், முல்லைப் பெரியாறு பிரச்சினையை உச்ச நீதி மன்றத்திற்கு எடுத்துச் சென்றவன் என்ற முறையிலும், பிரச்சினையை நல்ல முடிவுக்குக் கொண்டு வரத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டவன் என்ற முறையிலும் இதை நான் கூறுகிறேன் என்று எனது அறிக்கையிலே தெரிவித்திருந்தேன்.

நிராகரித்த ஜெ..

நிராகரித்த ஜெ..

ஆனால் இவன் என்ன சொல்வது? நாம் என்ன கேட்பது? என்ற தோரணையில் கேரள முதல்வரின் கருத்தைப் பற்றி எந்தவிதமான தொடர் நடவடிக்கையும் எடுக்க தமிழக முதலமைச்சர் முயற்சி செய்யவில்லை. ஆனால் கேரளாவில் உள்ள எதிர்க் கட்சியினர் கேரள முதலமைச்சரின் கருத்துக்கு தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தார்கள்.

ஆளுநர் உரையில்....

ஆளுநர் உரையில்....

அங்கே ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக புதிய அணை கட்டுவதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சில நாட்களுக்கு முன்பு தெரிவித்த கேரள முதல்வரின் கருத்துக்கு மாறாக, தற்போது கேரள மாநிலச் சட்டப் பேரவையில் ஆற்றப்பட்ட கேரள கவர்னர் உரையில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கேரள அரசு உறுதியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

புதிய குழு

புதிய குழு

மேலும் அந்த உரையில், "முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அரசு உறுதியாக உள்ளது. அணையின் நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என்ற முடிவிலும் கேரள அரசு உறுதியாக உள்ளது. ஆனாலும் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அணையின் பாதுகாப்பு, பலம், ஆயுள் உட்பட அனைத்து விஷயங்களுக்கும் தீர்வு காணும் வகையில் புதிய குழு ஒன்றை அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது" என்று கூறப்பட்டுள்ளதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

பிரச்சனையை நீட்டிக்கத்தான் உதவும்...

பிரச்சனையை நீட்டிக்கத்தான் உதவும்...

புதிய அணை கட்டுவது சம்பந்தமாக முதன் முதலில் கேரள அரசின் சார்பில் பிரச்சினை எழுப்பப்பட்ட போதே, 1979ஆம் ஆண்டில் அது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு, சாத்தியமில்லை என்று கருதி கை விடப்பட்டது. அதே பிரச்சினையை மீண்டும் எழுப்புவதால், அது பிரச்சினையை நீட்டிக்க உதவுமே தவிர, உச்ச நீதி மன்ற உத்தரவின்படி தீர்வு காணப் பயன்படாது என்பதைக் கேரள அரசு உணர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

ஜெ.வுக்கு கோரிக்கை

ஜெ.வுக்கு கோரிக்கை

கேரளாவின் இன்றைய முதல்வர் பதவிப் பொறுப்பேற்றவுடன் பிரச்சினையின் அனைத்துப் பரிமாணங்களையும் ஆராய்ந்தறிந்த பின்னர் கூறியவாறு தான், உச்ச நீதி மன்றம், முல்லைப் பெரியாறு அணையிலே நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்த வழக்கில், 27-2-2006 அன்று வழங்கிய தீர்ப்பில், "முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது" என்று தெரிவித்திருக்கின்றது. உச்ச நீதி மன்றத் தீர்ப்பிலும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கேரள முதலமைச்சர் பதவிப் பொறுப்பேற்றவுடன் அனுபவம் மற்றும் அறிவாற்றலின் அடிப்டையில் கூறிய கருத்திலும் முழு நம்பிக்கை வைத்து மேற்கொண்டு ஆற்ற வேண்டிய தொடர்பணிகளை நிறைவேற்றிட , மத்திய அரசும், தமிழக கேரள மாநில அரசுகளும் உடனடியாக ஆவன செய்ய முன் வர வேண்டும் என்பதோடு, அதற்கான தொடக்க முயற்சிகளை தமிழக அரசு தாமதப்படுத்தாமல் மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi has opposed New Dam at Mullai Periyar River
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X