For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக ஆட்சியில் காவல்துறை சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் லட்சணம் இதுதானா? - கருணாநிதி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு வேகமாகக் கெட்டழிந்து வருவது பற்றி ஒரு சில நாட்களாக ஏடுகளில் வந்துள்ள செய்திகளைப் படித்தாலே புரிந்து கொள்ள முடியும். அதிமுக ஆட்சியில் காவல்துறை சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் லட்சணம் இதுதானா? என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை:

கேள்வி :- சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப் பகலில் சுவாதி என்ற பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்ததாக கூறப்படும் குற்றவாளி ராம்குமார் என்பவனைக் காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்ததை நீங்கள் பாராட்டி எழுதி ஒரு வாரம்கூட ஆகவில்லை. அதற்குள் தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கிறது?

karunanidhi question answer statement about law and order

கருணாநிதி: காவல் துறையினரைப் பற்றி நாளிதழில் ஒரு பெட்டிச் செய்தி! அதில் நெல்லையில் இருந்து சென்னைக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் ராம்குமார் அழைத்து வரப்பட்ட போது விடிய விடியத் தூங்காமல் இருந்தாராம். காரணம், காவல் துறையினர் அவரை வழியிலே சுட்டுக் கொன்று விடுவார்களோ என்று பரிதாபமாகச் சொன்னாராம். அந்தக் குற்றவாளிக்கு ஏன் அப்படி ஒரு அச்சம்? அதற்கும் நாளிதழிலேயே ஒரு செய்தி வந்துள்ளது.

சுவாதி கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு ராம்குமார் சென்னை மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "போலீசார் என்னைக் கைது செய்ய வரும்போது, நான் கழுத்தை பிளேடால் அறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், நான் எனது கழுத்தை அறுத்துக் கொள்ளவில்லை. என்னைக் கைது செய்ய போலீசார் வந்த போது, என் கழுத்தை பிளேடால் அறுத்தனர்.

ஆனால் தனக்குத் தானே கழுத்தை அறுத்துக் கொண்டதாக என் மீது போலீசார் தற்கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தக் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளியைக் காப்பாற்றுவதற்காக என்னைப் போலீசார் கைது செய்துள்ளனர். நான் ஒரு அப்பாவி. சுவாதியை நான் கொலை செய்யவில்லை. என் மீது பொய்யாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்" என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

ராம்குமாருக்காக ஆஜராகும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறும் போது, சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் சம்மந்தம் கிடையாது. உண்மையான குற்றவாளியைக் கைது செய்வதற்குப் பதில், அப்பாவி ஏழை வாலிபரான ராம்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றவாளியை 2 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டுமென்று ஐகோர்ட் உத்தர விட்டதால், போலீசார் அவசர அவசரமாக வழக்கினை முடிக்க ராம்குமாரை கைது செய்து, குற்றத்தை ஒப்புக் கொள்ள நிர்ப்பந்தம் செய்வதாகக் கூறியிருக்கிறார். எனினும் அந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக தற்போது அவர் தெரிவித்திருப்பதாக செய்தி வந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு வேகமாகக் கெட்டழிந்து வருவது பற்றி ஒரு சில நாட்களாக ஏடுகளில் வந்துள்ள செய்திகளைப் படித்தாலே புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக 6-7-2016 அன்று காலையில் திருவாரூரிலிருந்து சென்னை வந்தவுடன் நாளேடுகளைக் கையில் எடுத்தால், சம்பளப் பணத்தை பறித்துக் கொண்டு ஓடிய கொள்ளையனுடன் தைரியமாகப் போராடிய பள்ளி ஆசிரியையை தள்ளி விட்டுக் கொலை - இந்த விபத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவரும் உயிர் இழந்திருக்கிறார்.

ஆசிரியையுடன் வந்த உறவுப் பெண் பலத்த காயமடைந்து மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வருகிறார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் நிலையத் திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்று ஒரு பக்க அளவுக்குச் செய்திகள் வந்துள் ளன. சென்னை மாநகரில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இன்றைய நாளிதழ்களில் வெளி வந்த வேறு சில செய்திகள் வருமாறு :-சென்னை வேப்பேரியில் தொழில் அதிபர் ஒருவரின் மனைவியையும், மாமியாரையும் கட்டிப் போட்டு விட்டு, கத்தி முனையில் 20 லட்சம் நகை, பணம் கொள்ளை! சங்கரன்கோவில் அருகே, பஞ்சாயத்துத் தலைவர் கொலை வழக்கில், ஜாமீனில் வந்த கலியன் என்ற ராமச்சந்திரன் நேற்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சாத்தான்குளம் அருகே, ஒரு கொள்ளையைத் தடுத்த கோயில் காவலாளி முத்துவை கொள்ளையர்கள் கட்டிப் போட்டு அடித்தே கொலை செய்துள்ளார்கள். கோவில் உண்டியல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கம் அருகே, காவல் நிலையம் அருகிலேயே இரண்டு கடைகளை உடைத்து பணம் மற்றும் பொருள்களைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

கொருக்குப்பேட்டையில் இரவில் டாஸ்மாக் மது விற்பனை செய்த 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது. பெரம்பூர் பகுதியில் மாமூல் வசூலிப்பதில் முன் விரோதம் ஏற்பட்டு, பிரபல ரவுடிக்கு வெட்டு. திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை மறித்து 20 சவரன் செயின் பறிப்பு. இன்று ஒரு நாள் வந்த சட்டம் ஒழுங்கு பற்றிய செய்திகள்தான் இவை.

வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாகி மதன் மே மாதம் 28ஆம் தேதி கடிதம் எழுதி வைத்து விட்டுத் தலைமறைவானார். இன்றுவரை நம்முடைய காவல் துறை அவரைத் தேடிக் கொண்டிருக்கிறது. நியாயமான விசாரணை இல்லை என்று கருதும் நிலை ஏற்பட்டால், இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று நேற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் தெரிவித்திருக்கிறார்கள்.

2 மாதங்களுக்கு முன்பு வேலூர் அருகே மொபட்டில் சென்ற பெண் சப் இன்ஸ்பெக்டரைத் தாக்கி செயினைப் பறித்துச் சென்றார்கள். படுகாயமடைந்த அந்த பெண் சப் இன்ஸ்பெக்டர், செல்வாம்பாள் கடந்த வாரம் பரிதாபமாக இறந்திருக்கிறார். கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளிகளை இன்னமும் காவல் துறை தேடிக் கொண்டிருக்கின்றது.

இதுதான் அ.தி.மு.க. அரசின் காவல் துறை சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கும் இலட்சணம்! இந்தக் காவல் துறைக்குப் பொறுப்பேற்றிருப்பவர் தான் முதமைச்சர் ஜெயலலிதா! எனினும், தமிழகம் அமைதிப் பூங்கா என்று திரும்பத் திரும்பச் சொல்லி ஆட்சியினர் திருப்தி அடைகிறார்கள். அவர்களுடைய அகராதியில் "அமைதிப் பூங்கா" என்பதற்குப் பொருள் ஏதும் இல்லாத வெற்றுச் சொற்றொடர் போலும்! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMk chief karunanidhi issued the question, answer statement about law and order in tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X