For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன் ? கருணாநிதி கேள்வி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மதுவிலக்குப் பிரச்சினையிலே உண்மையான அக்கறையுள்ள அரசு எது என்பதும், அக்கறையுள்ளவர்கள் யார் என்பதும், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். உண்மையிலேயே அக்கறை உள்ளவராக ஜெயலலிதா இருந்தால், ஐந்தாண்டு காலமாக ஆட்சியிலே இருந்த போது படிப்படியாக தமிழகத்திலே மதுவிலக்கை நடை முறைப்படுத்தியிருக்க மாட்டாரா? என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் ஜெயலலிதா, நேற்றைய தினம், சட்டப் பேரவையில், சில கருத்துகளைப் பதிவு செய்வது தனது கடமை என்று கூறிக் கொண்டு, தமிழகத்தில் 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுவிலக்கு என்னால்தான் ரத்து செய்யப்பட்டது என்றும், 2007ஆம் ஆண்டில் பேரவையில் நான் கூறிய கருத்து ஒன்றையும் குறிப்பிட்டதோடு, மதுவிலக்கில் உண்மையான அக்கறை கொண்டுள்ளது அவருடைய தலைமையிலான அரசுதான் என்று தெரிவித்திருக்கிறார்.

karunanidhi Questions jayalalithaa over Alcohol Prohibition in tn

1971ஆம் ஆண்டைப் பற்றியும், 2007ஆம் ஆண்டைப் பற்றியும் நினைவுகூர்ந்த ஜெயலலிதாவுக்கு, கடந்த ஆண்டு 21-7-2015 அன்று "திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று நான் அறிவித்தது எப்படித்தான் ஞாபகத்திற்கு வராமல் போயிற்றோ?

திமுக சார்பில் 10-8-2015 அன்று மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி அறவழியில் ஆர்ப்பாட்டம் தமிழகமெங்கும் நடத்தப்பட்டதே, அதுவும் அம்மையாருக்குத் தெரியவில்லை.

திமுக ஆட்சியில் 1971ஆம் ஆண்டு மதுவிலக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்றாலும், அப்போதே நான் கூறியிருக்கிறேன்; இதனை திமுக முழு மனதோடு கொண்டு வரவில்லை என்றும், அப்போதுள்ள தமிழகத்தின் நிதி நிலைமைதான் அதற்குக் காரணம் என்றும் பலமுறை விளக்கியிருக்கிறேன்.

மதுவிலக்கை ஒத்தி வைத்து தமிழகச் சட்டப் பேரவையில் நான் உரை நிகழ்த்தும்போதுகூட கூறியது என்ன?

"புனித நோக்கத்துடன் இந்தியப் புவி முழுவதும் எந்தக் கொள்கை விரிவாக்கப்பட வேண்டுமென்று காந்தியடிகள் கூறினாரோ, அந்தக் கொள்கை அவர் ஏந்திய கொடி நிழலில் அணி வகுத்து நின்ற அவர்தம் தானைத் தளபதிகளாம் மாநில முதல்வர்களாலேயே பின்பற்ற முடியாமல் போனது மட்டுமல்ல; மத்திய அரசினை நடத்தும் மகாத்மாவின் வாரிசுகளாலும் புறக்கணிக்கப்பட்டது வேதனை தரும் செய்தியாகும்.

கொழுந்துவிட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்" என்று சட்டப்பேரவையில் பேசினேனே தவிர, மனச்சாட்சி இடம் கொடுக்காத நிலையில்தான் மதுவிலக்குச் சட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தேன்.

29-6-1971 அன்று நிதி நிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்குப் பதிலளித்து நான் உரையாற்றும் போது "மாண்புமிகு உறுப்பினர்களின் - தோழமைக் கட்சி நண்பர்களின் உணர்ச்சியை மதிக்கிறேன். பாராட்டுகிறேன். அவர்களில் சிலபேர் என்னைக் கெஞ்சிக்கூடக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மன்றாடிக் கேட்பதாகக்கூடச் சொன்னார்கள். அவர்களை எல்லாம் விட நான் வயதிலே சிறியவன். அப்படி மன்றாடிக் கேட்டதை, கெஞ்சிக் கேட்டதைத் தயவு செய்து திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்.

இதைத் தவிர வேறு வழி இல்லை என்ற காரணத்தால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். அதுவும் ஒத்தி வைத்திருக்கிறோம். இந்தியா முழுவதற்கும் மது விலக்குத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும் வரையில் மது விலக்கை ஒத்தி வைத்திருக்கிறோம் என்றுதான் கூறியிருக்கிறோம்" என்றுதான் கூறினேன். ஜெயலலிதா பேரவையில் நேற்றைய தினம் பேசும்போது, இதையெல்லாம் அப்படியே மறைத்து விட்டார்.

1971இல் தி.மு. கழக அரசுகள், சாராயக் கடைகளைத் திறந்தது என்றாலும், 1974இல் - திமுக ஆட்சிக் காலத்திலேயே, மீண்டும் மதுக் கடைகளை மூடி, மது விலக்கை நடைமுறைப்படுத்தியது. இதையும் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் நேற்று பேசும்போது மறைத்துவிட்டார்.

ஒத்தி வைப்பது என்பது மீண்டும் நடைமுறைக்கு வரும் என்ற அடிப்படையில்தானே? திமுக ஆட்சிக் காலத்திலேயே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் சட்ட முன்வடிவு தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக 22-8-1974 அன்று நிறைவேற்றப்பட்டது.

தி.மு.கழக ஆட்சியிலே கொண்டு வந்த மதுவிலக்கு ரத்து என்பது, தி.மு. கழக ஆட்சியிலேயே மீண்டும் திரும்பப் பெறப்பட்டு, மதுவிலக்கு நடைமுறைக்கு வந்து விட்டது என்பதுதான் உண்மை, உண்மை. ஆனால் அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியிலே என்ன செய்தார்கள்? 1981இல் அ.தி.மு.க. ஆட்சியில், முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மீண்டும் கள், சாராய விற்பனைக்காக, மதுவிலக்கை ரத்து செய்தார்.

அதற்குப் பிறகு, 2001இல் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது மது ஒழிப்பு பிரகடனம் செய்தார். எனினும், ஜெயலலிதா ஆட்சியின் அந்த ஆண்டில் மட்டும் - மதுவிலக்கு சட்டத்தின் கீழ் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா குறுகிய காலத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காரணமாகப் பதவி விலகி, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, அந்நிய மது வகைகள், 100 மில்லி 15 ரூபாய் என்கிற மலிவு விலையில் 2002 ஜனவரி முதல் வாரத்திலிருந்து விற்பனைக்கு வரும் என்று அறிவித்தார். அப்போது அ.தி.மு.க.வுக்கு தலைவி ஜெயலலிதாவா அல்லது வேறு யாராவதா?

2003ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசே மது விற்பனைக்காக "டாஸ்மாக்" நிறுவனத்தைத் தொடங்கி, அரசே ஊருக்கு ஊர் மது விற்பனைக் கடைகளைத் திறந்தது உண்மையா இல்லையா?

1991ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றதும், தி.மு.கழக ஆட்சியில் நடைமுறையில் இருந்து வந்த மலிவு விலை மது' திட்டத்தை பாபகரமான காரியம் என்பதற்காக ரத்து செய்வதாகக் கூறி; அதுதான் தன்னுடைய முதல் கையெழுத்து என்று ஜெயலலிதா விளம்பரமும் செய்து கொண்டார்.

ஆனால் அவரே "ஊரகப் பகுதிகளில் பல உயிர்களைப் பலி கொண்ட கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதைத் தவிர்க்கும் எண்ணத்துடன் 1-1-2002 முதல் மீண்டும் மலிவு விலை மது விற்பனைத் திட்டம் அறிமுகப் படுத்தப்படும்" என்று அறிவித்தார். அதாவது ரத்து செய்ததை மீண்டும் அறிமுகப்படுத்தினார்.

அப்படி அறிமுகப்படுத்திய காரணத்தினால் இரண்டு மாதங்களில் 50 கோடி ரூபாய் இழப்பு என்றும் தெரிவித்து, மலிவு விலை மது விற்பனைத் திட்டத்தை 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியிலிருந்து நிறுத்தி விடுவதாகவும் ஆணை பிறப்பித்தார்.

அதைக் கொண்டு வரும்போது ஊரகப் பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி பல பேர் சாவதைத் தடுக்கத்தான் என்று தெரிவித்தார்களே, அந்தச் சாவுகள் தொடர்ந்தாலும் பரவாயில்லை என்று மீண்டும் அதை நிறுத்தி அறிவித்தார்களா என்று தெரியவில்லை.

1991ஆம் ஆண்டு மலிவு விலை மதுவினை ரத்து செய்து விட்டு, 1992ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் ஜெயலலிதா ஆட்சியிலே பார் நடத்துவதற்கான அனுமதியினை வழங்கினார்கள். 1993ஆம் ஆண்டு, அதே ஜெயலலிதா ஆட்சியில் ஜூன் திங்கள் முதல் தமிழ்நாட்டில் பார் ஒழிக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

2002இல் அதே ஜெயலலிதா ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் மீண்டும் பார்களை வைத்துக் கொள்ள அனுமதி கொடுத்தார்கள். அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா? "மது அருந்துவோரும், பொதுமக்களும் வைத்த வேண்டுகோளை யேற்று, பார்களை வைத்துக் கொள்ள அனுமதிக்கிறோம்" என்றார்.

அப்படியென்றால் 1993ஆம் ஆண்டு பார்களை ஜெயலலிதா மூடினாரே, அப்போது மது அருந்துவோரும், பொதுமக்களும் பார்களை மூட வேண்டாமென்று கோரிக்கை வைக்கவில்லையா?

திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த ஆண்டு, நான் அறிவித்த பிறகு, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், முன்னணியினரும், சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும், மகளிர் அமைப்புகளும் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் என்னைத் தொடர்பு கொண்டு அந்த அறிவிப்பை வரவேற்றதோடு, நல்ல முடிவு என்றும் கூறினார்கள்.

2007ஆம் ஆண்டு நான் பேசியதை நினைவூட்டிய ஜெயலலிதாவுக்கு, 2008ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை நான் நினைவூட்டுகிறேன். 22-12-2008 அன்று பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாசும், மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் என்னைச் சந்தித்து தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்திய போது, அவர்கள் கூறியதில் ஒத்த கருத்துடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு, 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் முழுவதிலும் 1300 மதுக் கூடங்களை (பார்) மூடியுள்ளது என்பதையும், அதே போல் 128 சில்லறை மது விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பதையும் நினைவூட்டினேன்.

மேலும், தொடர்ந்து படிப்படியாக முழு மது விலக்கினை எய்திடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதுவரையில் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மசூதிகள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களுக்கு அருகில் மதுக்கடைகள் அமையாமல் நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவெடுத்துள்ளது என்றும், மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் 1 மணி நேரத்தைக் குறைத்து - மதுக் கடைகள் இயங்கும் என்றும் அறிவித்ததோடு, அதற்கிணங்க ஆணையும் பிறப்பிக்கப்பட்டது, உண்மையா இல்லையா?

மதுவிலக்குக் கொள்கையைப் பொறுத்தவரையில், திமுக ஆட்சியில்தான் முதன் முதலாக மதுவிலக்கு ஒத்தி வைக்கப்பட்டதைப் போல சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதுவும் உண்மையல்ல.

1937இல் ராஜாஜி தலைமையில் சென்னை மாகாண அரசு அமைந்ததும், அதுவரை சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இல்லாத மது விலக்கை அமல்படுத்தினார். ஆனால் அதுவும் 1939இல் முடிவுக்கு வந்தது. அந்த 1937ஆம் ஆண்டிலேகூட, ராஜாஜி முதலமைச்சராக இருந்த போதேகூட, சென்னை மாகாணத்தில் இருந்த 25 மாவட்டங்களில், நான்கு மாவட்டங்களில் மட்டும்தான், அதாவது சேலம், சித்தூர், கடப்பா, வட ஆற்காடு ஆகிய மாவட்டங்களில்தான் மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. மற்ற மாவட்டங்களில் 1937ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த நிலைமைதான் இருந்து வந்தது.

1948இல் ஓமந்தூரார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகுதான் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார். இது தவிர மற்ற காலங்களில் அதாவது 1937க்கு முன்பும் சரி, 1939க்குப் பின்பு 1948ஆம் ஆண்டு வரையிலும் சரி, தமிழகத்திலே மதுவிலக்கு நடைமுறையிலே இல்லை என்பதை சற்று யோசித்துப் பார்த்தால், தமிழகத்திலே தி.மு. கழக ஆட்சியில்தான் முதன் முதலாக மதுவைப் புகுத்தி விட்டார்கள் என்ற வாதம், எந்த அளவுக்கு உண்மைக்குப் புறம்பானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இன்னும் சொல்லப்போனால், மதுவிலக்கு குறித்து 13-9-1969இல் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையின் இறுதியில், "மதுவிலக்குக் கொள்கையில் தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள எந்தத் தனி மனிதனுக்கோ, எந்தக் கட்சிக்கோ உள்ள அக்கறையைவிட, அந்தக் கொள்கை மக்களுக்குத் தேவையானது என்பதில், தி.மு. கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞருக்கு அதிக அக்கறையும், அதிகப் பிடிப்பும் உண்டு என்பதை மற்றையோரைவிட அழுத்தமாக என்னால் துணிந்து கூற முடியும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த அளவுக்கு மதுவிலக்குக் கொள்கையிலே உறுதியாக இருந்த அருமை நண்பர் எம்.ஜி.ஆர். பின்னர் முதலமைச்சராக இருந்த போதுதான், மதுவிலக்கு சம்பந்தமான சட்டங்கள், திட்டங்கள் இவைகள் எல்லாம் மாற்றப்பட்டன. 1-5-1981இல் சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் கூட திறக்கப்பட்டன. ஆனால் குடிப்பவர்கள் "பெர்மிட்" ஒன்று பெற வேண்டுமென்று விதிமுறைகளில் கூறப்பட்டது.

மதுவிலக்கில் உண்மையான அக்கறையுள்ள அரசு என்று பேரவையில் ஜெயலலிதா பேசியிருக்கிறாரே, அவருடைய அ.தி.மு.க. ஆட்சியில், 2013-2014ஆம் ஆண்டில் எந்தெந்த மதுபான தயாரிப்பு கம்பெனிகளிடம் இருந்து எவ்வளவு தொகைக்கு அரசு நிறுவனத்தால், மது வாங்கப்பட்டது என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விவரம் வருமாறு:-

சிவா டிஸ்டிலரி - 572 கோடி ரூபாய்

கோல்டன் வாட்ஸ் லிமிடெட் - 583 கோடி ரூபாய்

எலைட் டிஸ்டிலரீஸ் - 659 கோடி ரூபாய்

எம்.பி. டிஸ்டிலரீஸ் - 750 கோடி ரூபாய்

இம்பீரியல் ஸ்பிரிட் - 874 கோடி ரூபாய்

மேக்ரோ - 988 கோடி ரூபாய்

எஸ்.என்.ஜே. டிஸ்டிலரி -1,125 கோடி ரூபாய்

மோகன் ப்ரூவரீஸ் அண்ட் டிஸ்டிலரீஸ் -1,171 கோடி ரூபாய்

கால்ஸ் டிஸ்டிலரீஸ் -1,317 கோடி ரூபாய்

யுனைடெட் டிஸ்டிலரீஸ் -1,557 கோடி ரூபாய்

மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரீஸ் - 2,280 கோடி ரூபாய்

இந்தப் பட்டியலைப் பார்க்கும்போது மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரீஸ் நிறுவனத்துக்கு மட்டும் மிக அதிகமாக, மற்ற நிறுவனங்களிடமிருந்து வாங்கிய மது வகையறாக்களைவிட வாங்கியிருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இதே நிலைமைதான் இப்போதும் தொடருகிறது. இந்த நிறுவனத்திற்கு மட்டும் இவ்வாறு அதிகமாக "ஆர்டர்" வழங்கப்பட்டது ஏன்? இந்த மிடாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் யார்?

மதுவிலக்குப் பிரச்சினையிலே உண்மையான அக்கறையுள்ள அரசு எது என்பதும், அக்கறையுள்ளவர்கள் யார் என்பதும், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். உண்மையிலேயே அக்கறை உள்ளவராக ஜெயலலிதா இருந்தால், ஐந்தாண்டு காலமாக ஆட்சியிலே இருந்த போது படிப்படியாக தமிழகத்திலே மதுவிலக்கை நடை முறைப்படுத்தியிருக்க மாட்டாரா? இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
Dmk chief karunanidhi Questions to chief minister jayalalithaa over Alcohol Prohibition in tn
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X