For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குறுவையைப் போல பறிபோகும் 'சம்பா'... 'அம்போ'வென கைவிட்ட அதிமுக அரசு- கருணாநிதி சாடல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவையைப் போல சம்பா சாகுபடியும் பறிபோகிறது... ஆனால் அதிமுக அரசு விவசாயிகளை அம்போவென கைவிட்டுவிட்டது என திமுக தலைவர் கருணாநிதி சாடியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:

ஆடிப் பெருக்கு நிகழ்ச்சியை டெல்டா மாவட்ட விவசாயிகள் கொண்டாடுவதற்கு ஏதுவாக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். நான் அப்போதே, அந்தத் தண்ணீர் செல்லும் வழித் தடங்களில், செடி-கொடிகள் மற்றும் புதர்கள் மண்டிக் கிடப்பதால், திறக்கப்படுகின்ற தண்ணீர் ஆடிப்பெருக்கு விழாவிற்குள் கடைமடைப் பகுதிகளுக்குப் போய்ச் சேருமா என்பதில் சந்தேகம் இருப்பதால், அரசு உடனடியாக ஆற்று வழியெங்கும் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தேன்.

Karunanidhi slams Jayalalithaa on Cauvery issue

அடுத்து, இன்று (2-8-2016) வந்துள்ள செய்தியில், மேட்டூர் அணை நீர் திறப்பு தாமதமாவதால், நடப்பாண்டு ஆடிப் பட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் 13.10 இலட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12ஆம் தேதியன்று பாசனத்திற்காக நீர் திறக்கப்படும்.

ஆனால் அ.தி.மு.க. ஆட்சி வந்ததிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்காகத் தண்ணீர் திறப்பது தகராறு தான். அ.தி.மு.க. ஆட்சியில் மேட்டூர் அணை நீர் திறப்பு எப்போது என்று பார்த்தால், 2002இல் செப்டம்பர் 6 அன்றும், 2003இல் அக்டோபர் 7 அன்றும், 2004இல் ஆகஸ்ட் 14 அன்றும், 2005இல் ஆகஸ்ட் 4 அன்றும், 2012இல் செப்டம்பர் 17 அன்றும், 2013இல் ஆகஸ்ட் 2 அன்றும், 2014இல் ஆகஸ்ட் 10 அன்றும், 2015இல் ஆகஸ்ட் 9 அன்றும் தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டு, அதன் காரணமாக அ.தி.மு.க. ஆட்சியிலே ஒவ்வொரு ஆண்டும் குறுவை பொய்த்துக் கொண்டே இருக்கிறதே தவிர, புதிய நம்பிக்கை எதுவும் இல்லை.

அ.தி.மு.க. ஆட்சி என்றாலே குறுவை பொய்த்துப் போவதென்பது தொடர்கதையாகி விட்டது. இப்போது 2016-ல், தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக, டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவைச் சாகுபடியை இழந்து, மீளாத் துயரத்தில் மூழ்கியிருக்கிறார்கள். பட்ட காலிலேயே படும் என்பதைப் போல, சம்பாவை நம்பிக் கொண்டிருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகளை திகைப்பில் ஆழ்த்தும் வண்ணம் இன்று செய்தி வந்துள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை, கடலுhர் ஆகிய நான்கு டெல்டா மாவட்டங்களில் 12 இலட்சம் ஏக்கரிலும்; சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட, எட்டு காவிரி கரையோர மாவட்டங்களில் 5.10 இலட்சம் ஏக்கரில் பொதுவாக குறுவை மற்றும் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்படும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக, தாமதமாக ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் தண்ணீர் திறந்ததால், டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் 2 இலட்சம் ஏக்கரில் குறுவை பாதித்தது. நடப்பாண்டிலோ, 2 இலட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், மேலும் 13.10 இலட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் செய்வதற்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

அவர்கள் கண்விழித்துக் காலமெல்லாம் காத்திருந்தாலும், நெஞ்சக் கனவு நிறைவேறுமா என்பதற்கு நிம்மதி தரும் பதிலேதும் இல்லை. ஆளும் அ.தி.மு.க. வினரும் அது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்வதாகத் தெரிய வில்லை.

நேற்றையதினம் மேட்டூர் அணை நீர் இருப்பு 23.84 டி.எம்.சி.யாக இருந்தது. அணையில் 52 டி.எம்.சி.க்கு மேல் நீர் இருந்தால் மட்டுமே அதாவது இப்போது இருப்பதைப் போல் மேலும் ஒன்றரை மடங்கு தண்ணீர் வந்தால் மட்டுமே, பாசனத்திற்கு நீர் திறக்கப்படும். இதனால் இந்த ஆண்டு டெல்டா மற்றும் காவிரிக் கரை யோர மாவட்டங்களில், இரண்டு லட்சம் ஏக்கரில் குறுவை மட்டுமின்றி, 13.10 இலட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் பாதிக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அஞ்சிக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐந்தாண்டுகளாகக் குறுவைக் கனவு தகர்ந்து தவிடுபொடியாகி விட்டது; இந்த ஆண்டு சம்பாவாவது விவசாயிகளைக் காப்பாற்றுமா; அப்படிக் காப்பாற்றத் தவறி விட்டால், ஏற்கனவே நொறுங்கிப் போய் விட்ட அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்பது எப்படி என்பதைப் பற்றி ஜெயலலிதா தான் விளக்கி உரைத்திட வேண்டும்.

மேலும் விவசாயிகளின் கடன்களைத் தீர்க்கும் பிரச்சினையில், சிறு, குறு விவசாயிகளின் கடன்களைத் தீர்ப்பதற்காக மட்டுமே முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும், சிறு, குறு விவசாயிகளைப் போலவே பாதிப்புக்காளாகியிருக்கும் மற்ற விவசாயிகள் பெற்ற கடனைத் தீர்ப்பது பற்றி எந்தவிதமான அறிவிப்பும் இதுவரை இல்லை என்றும் கூறுகிறார்கள்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை அரசிதழில் வெளியிட்டதோடு சரி; காவிரி மேலாண்மை வாரியமும் அமைக்கப்படவில்லை; காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் உருவாக்கப்படவில்லை. இதைப்பற்றியெல்லாம் மத்திய - மாநில அரசுகள் கிஞ்சிற்றும் கவலைகொள்வதாகத் தெரியவில்லை. காவிரியில் தேவையான தண்ணீரை, மனிதாபிமான அடிப்படையில் கர்நாடக அரசுடன் கலந்து பேசியாவது, கொண்டு வருவதற்கான வழி வகை பற்றி ஜெயலலிதா சிந்தித்துப் பார்க்கிறாரா என்பதும், விவசாயிகளுக்குத் தெரியவில்லை.

குறுவையோ பறி போய் விட்டது; சம்பாவோ பறி போய்க் கொண்டிருக்கிறது; என்று கூக்குரலிட்டுப் புலம்புவதைத் தவிர விவசாயிகளுக்கு வேறு கதியில்லை. டெல்டா மாவட்ட விவசாயிகளைத் துன்ப சாகரத்திற்குள் தள்ளி, அதிமுக அரசு அவர்களை "அம்போ" வெனக் கை விட்டு விட்டது என்று வெளிப்படையாகவே நான் குற்றம் சாட்டுகிறேன்; விளக்கம் தருவாரா ஜெயலலிதா?

English summary
DMK leader Karunanidhi slammed TN CM Jayalalithaa on Cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X