For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக கூட்டணியில் தொடரும் அவமதிப்பு… அன்று வைகோ… இன்று இடதுசாரிகள்

By Mayura Akilan
|

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கல்தா கொடுக்கப்பட்டுவிட்டது. இப்போது எங்கே போய் முட்டிக் கொள்வது என இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் புலம்பிக் கொண்டிருக்கின்றன.

கூட்டணிக் கட்சிகளை காத்திருக்க வைத்து கழற்றி விடுவது ஒன்றும் அதிமுக தலைமைக்கு புதிதில்லை. 2011ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இருந்த மதிமுகவிற்கு நிகழ்ந்த அவமானத்தில் இருந்தாவது பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் தனித்து கூட்டணி என்று அதிமுக உறுதியாக அறிவித்த பின்னரும் இடதுசாரிகள் அதிமுக கூட்டணியில் சேர விரும்பியதுதான் அவர்கள் செய்த இமாலயத் தவறு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

வைகோவின் நிலை

வைகோவின் நிலை

கடந்த 2006ல் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக அணிக்கு திரும்பிய மதிமுக, 2011ம் ஆண்டுவரை கூட்டணியில் நீடித்தது. இரு கட்சிகளும் இணைந்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தளவுக்கு இணக்கமாக இருந்த கட்சிகளுக்கு இடையே 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் வராது என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஒதுக்கிய அதிமுக

ஒதுக்கிய அதிமுக

கூட்டணியில் முதலிடமும், முன்னுரிமையும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பேச்சுவார்த்தைக்கு தயாரானார் வைகோ.ஆனால், ஒரு முறை அழைத்துப் பேசியதோடு மதிமுக பக்கம் திரும்பாமல் ஒதுங்கிக் கொண்டது.

அடம்பிடித்த அதிமுக

அடம்பிடித்த அதிமுக

பெயரளவுக்கு நடந்த சந்திப்பில் கூட மதிமுகவுக்கு 6 தொகுதியில் ஆரம்பித்து 9 தொகுதி வரை மட்டுமே தர முடியும் என்பதை திரும்பத் திரும்பக் கூறியுள்ளனர். ஆனால், 35 தொகுதிகளை முதலில் கேட்ட வைகோ, கடைசியில் 21ல் நின்றார். 15 அல்லது 16 கிடைத்திருந்தால் கூட கூட்டணியில் சேர்ந்திருப்பார். ஆனால், அதிமுக ஒன்பதை தாண்டவே இல்லை.

2006ல் 35ல் போட்டி

2006ல் 35ல் போட்டி

2006 சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் 35ல் போட்டியிட்டு 6ல் தானே வென்றீர்கள். அதிலும் 3 எம்எல்ஏக்கள் உங்களுடன் இல்லையே, மக்களவைத் தேர்தலில் 4 சீட் தந்து ஒரு இடத்தில் தான் வென்றீர்கள், இதனால் இப்போது 10 தொகுதிகள் போதாதா என்று மதிமுகவிடம் அதிமுகவினர் கேள்வி எழுப்பினார்காளாம். இதையடுத்து 184 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வெறும் 61 தொகுதிகளில்தானே வென்றது. இதற்காக அதிமுக 50 மட்டும் போட்டியிடுமா என்று மதிமுக தரப்பு பதில் கேள்வி கேட்கப்பட்டதாம்.

கூட்டணியில் விரிசல்

கூட்டணியில் விரிசல்

அந்த நேரத்தில் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக திடீரென அறிவித்தது. இது அந்த கூட்டணியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒப்பந்தம் போட்ட தேமுதிக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் அதிர்ச்சி அடைந்தன. தனி அணி அமைப்பது குறித்து ஆலோசனை தீவிரமானது. விஜயகாந்தை தேமுதிக அலுவலகத்திற்கோ சென்று சந்தித்தனர்.

அவமானப்படுத்தப்பட்ட வைகோ

அவமானப்படுத்தப்பட்ட வைகோ

ஆடிப் போன அதிமுக தலைமை சமரசம் பேச ஓடி வந்தது. இரண்டு நாள் இழுபறிக்கு பின்னர் அதிருப்தி கொடி பிடித்த கட்சிகளை கூட்டணியில் தக்க வைத்தது. அதேசமயம் மதிமுகவுடன் மறுபடியும் பேசியது அதிமுக குழு. ஆனால், 12 தொகுதிகளை தவிர வேறு இடமே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

21 இடங்கள் கேட்ட வைகோ

21 இடங்கள் கேட்ட வைகோ

அப்போது தூது வந்த குழுவிடம், தமது அதிருப்தியையும் அவமானப்படுத்தப்பட்ட விஷயத்தையும் தெரிவித்த வைகோ, 21 என்றால் எங்களை அழையுங்கள் என்று சொல்லி அனுப்பினார். ஆனாலும், மதிமுக கேட்கும் 21 தொகுதிகளை ஒதுக்க ஜெயலலிதா முன்வரவில்லை.

தேர்தல் புறக்கணிப்பு

தேர்தல் புறக்கணிப்பு

கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் தீர்மானத்தை வெளியிட்டார் வைகோ. அதோடு மட்டுமல்லாது தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்தார். அந்த தீர்மானத்தில், ‘‘அதிமுகவின் முடிவு மதிமுகவை புண்பட வைத்துள்ளது. காயப்படுத்தியுள்ளது. மதிமுகவை வெளியேற வைக்க திட்டமிட்டதை உணர முடிந்தது.

சுயமரியாதையை இழக்க மாட்டோம்

சுயமரியாதையை இழக்க மாட்டோம்

ஜெயலலிதாவுக்கு காலம் தந்த படிப்பினைகளால் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நம்பியது பொய்த்து விட்டது. சுய மரியாதையை இழந்து பதவியை பெற வேண்டிய தேவை மதிமுகவுக்கு இல்லை'' என்று கடுமையான வார்த்தைகளை கூறியிருந்தார் வைகோ.

இடதுசாரிகளும் கோபம்

இடதுசாரிகளும் கோபம்

அந்த சமயத்தில் அதிமுக தலைமை மீது இடதுசாரிகளும் கொஞ்சம் கோபமாகத்தான். அந்த கோபத்தில்தான் விஜயகாந்தை சந்தித்து தனி அணி அமைக்க வலியுறுத்தினர். இடதுசாரிகளின் அந்த செயல் ஜெயலலிதாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்த கூட்டணி

தொடர்ந்த கூட்டணி

2011ல் அதிமுக ஜெயித்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த உடனே தேமுதிக உடனாக கூட்டணி முறிந்தது. ஆனாலும் கம்யூனிஸ்ட்கள் அதிமுக உடனான உறவைத் தொடர்ந்தனர். லோக்சபா தேர்தலில் இந்த கூட்டணி நீடிக்கும் என்றே நம்பினர்.

தனித்து போட்டி

தனித்து போட்டி

அதேசமயம் அதிமுக தனித்து களமிறங்கப் போவதாக அறிவித்தது. பின்னர் கம்யூனிஸ்ட்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. திடீரென்று 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. ஆனாலும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு உடன்படிக்கைக்குப் பின்னர் அதிமுக வேட்பாளர்கள் சிலர் வாபஸ் பெறப்படுவார்கள் என்றே அறிவித்தார் ஜெயலலிதா.

பிரச்சாரம் தொடக்கம்

பிரச்சாரம் தொடக்கம்

ஆனால் கடந்த மார்ச் 3ம் தேதி ஜெயலலிதா உடன் 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இதனால் 4 தொகுதிகள் கிடைக்கும் என்று நம்பியிருந்த இடதுசாரிகள் ஏமாற்றமடைந்தனர்.

வெளியேற்றப்பட்ட பின்னணி

வெளியேற்றப்பட்ட பின்னணி

அதிமுக கூட்டணியில் இருந்து 2011ம் ஆண்டு வைகோ வெளியேற்றப்பட்டதற்கு விடுதலைப்புலிகள் ஆதரவு நிலையும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டமும்தான் முக்கிய காரணங்களாக கூறப்பட்டது. அதே போல தற்போது கம்யூனிஸ்ட்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னணியில் தேர்தலுக்கு பின்னர் பாஜக ஆதரவு நிலையை அதிமுக எடுத்துள்ளதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

பொறுமை காக்கும் கம்யூனிஸ்ட்கள்

பொறுமை காக்கும் கம்யூனிஸ்ட்கள்

ஆனாலும் ஜெயலலிதாவின் வாயினால் கூட்டணி இல்லை என்று கூறிய பின்னால் அதாவது பின்னந்தலையில் அடித்து துரத்தினால் வேறு முடிவு எடுக்கலாம் என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையாக இருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியினரோ இதற்கு மேலும் அவமானப்பட வேண்டுமா? என்கின்றனர்.

அன்று வைகோவிற்கு நடந்த சம்பவம் இன்று கம்யூனிஸ்ட்களுக்கு நடந்துள்ளது. விஜயகாந்துடன் அணி அமைக்க முயற்சித்த கம்யூனிஸ்ட்களை ஜெயலலிதா காத்திருந்து பழி தீர்த்துக் கொண்டதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

English summary
With no progress on seat-sharing talks with J. Jayalalithaa’s All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK), the Left parties—Communist Party of India (CPI) and Communist Party of India-Marxist (CPI-M)—will reconsider their decision on allying with the party for Lok Sabha elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X