For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்... முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்!

பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வை திரும்பப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் முதல்வருக்கு எழுதியுள்ள கடித்தத்தில் கூறியுள்ளதாவது : தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் மாநகரப் பேருந்துகளின் கட்டணத்தை திடீரென்று கடந்த 19.1.2018 அன்று இரவு உயர்த்தி, 20.1.2018 அன்றே இரவோடு இரவாக அமலுக்கு வந்திருப்பதால், இந்த அதிபயங்கரத் தாக்குதலின் காரணமாக, வாங்கும் சக்தியோ தாங்கும் சக்தியோ எதுவுமற்ற அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகி உறைந்து போயிருக்கிறார்கள்.

சிறு வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள், பெண்கள் உள்ளிட்ட கூலித் தொழிலாளர்கள்,மருத்துவமனை செல்வோர், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் அனைவரும் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகியிருக்கி றார்கள். மாநிலம் முழுவதும் ஏழை எளிய நடுத்தர மக்கள் முன்வந்து நடத்தும் தன்னெழுச்சியான போராட்டங்களின் வாயிலாக வெகுமக்களின் கொந்தளிப்பையும் கோபத்தையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் உணர்ந்திருப்பீர்கள் என்று நான் எண்ணுகிறேன்.

தீர்வு காணக் கூடிய பிரச்னைகள் தான்

தீர்வு காணக் கூடிய பிரச்னைகள் தான்

"அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது"என்ற நிலைப்பாட்டை எடுத்து அதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று தடை பெற்ற இந்த அரசு, போக்குவரத்துக் கட்டண உயர்வு என்ற அரசின் கொள்கை முடிவு தொடர்பாக ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 24.11. 2017 அன்று தெரிவித்த கருத்தின் (dd) அடிப்படையில் 3600 கோடி ரூபாய் அளவிற்கு கட்டண உயர்வை அறிவித்திருப்பது இந்த அரசின் இரட்டை வேடத்தையும் கபட நாடகத்தையும் காட்டுகிறது. அதுமட்டுமின்றி கட்டண உயர்வுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ள வேறு காரணங்கள் அனைத்துமே வழக்கமான அலுவலக நடைமுறைக் காரணங்கள் என்பது மட்டுமல்ல- இப்படியொரு கடுமையான கட்டண உயர்வு இன்றியே, சாமர்த்தியமாகத் தீர்வு காணக்கூடிய பிரச்சினைகள்தான் என்பதை அரசு நிர்வாகத்தைக் கையாளும் வல்லுநர்கள் அனைவரும் அறிவர்

திசை திருப்பும் காரணங்கள்

திசை திருப்பும் காரணங்கள்

பேருந்துகளை இயக்குவதற்கான டீசல் செலவு 28.7 சதவீதம் என்று 2017-2018ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, பராமரிப்பிற்காக வெறும் 3சதவீதம் தான் செலவாகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் போக்குவரத்திற்கான இன்றியமையாத சேவையில் இருக்கும் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் டீசல் விலை உயர்வு, பராமரிப்புச் செலவு என்ற திசைதிருப்பும் காரணங்கள் எல்லாம் திடீர் பேருந்துக் கட்டண உயர்வுக்காக சிரமப்பட்டுத் "தோண்டிக் கண்டெடுக்கப்பட்ட காரணங்களாகவே" உள்ளன.

அரசின் வாதத்திற்கு மாறான செய்தி

அரசின் வாதத்திற்கு மாறான செய்தி

புதிய பேருந்துகளின் விலை உயர்வும் ஒரு காரணம் என்று கூறியிருந்தாலும், இன்று ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் போக்குவரத்து செயலாளர் அளித்துள்ள பேட்டியில் "22,000 பேருந்துகளில் 15 ஆயிரம் பேருந்து களுக்கு மேல் பேருந்துகளின் ஆயுளான ஆறரை வருடங்களைக் கடந்த பேருந்துகள்"என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். 19.1.2018 அன்று வெளியிடப்பட்ட போக்குவரத்துத் துறை அறிவிப்பில் இதுவே 16,800க்கும் மேற்பட்ட பேருந்துகளாக கூறப்பட்டுள்ள நிலையில், புதிய பேருந்துகள் விலை உயர்வு என்பது சொல்ல வேண்டுமே என்பதற்காக தேடிக் கண்டுபிடித்து சொல்லப்பட்டுள்ள செயற்கையான காரணங்களாகவே கருதுகிறேன். அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து கட்டணம் குறைவு என்று அரசுத் தரப்பில் வாதிட முயற்சித்தாலும், பத்திரிக்கையில் அதற்கு மாறான செய்திகள் வெளிவந்துள்ளதை மாண்புமிகு முதலமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

லாபத்தில் இயக்க நடவடிக்கை

லாபத்தில் இயக்க நடவடிக்கை

ஆகவே போக்குவரத்துக் கழக பேருந்துகளை அடித்தட்டு மக்கள் தவிர ஐ.டி. ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பணிக்குச் செல்வோரும் பயன்படுத்துகிறார்கள் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது சரியான அணுகுமுறையாகவே இருக்கும் என்று நம்புகிறேன். போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத்தை சீர் செய்வது, வருமானத்தைப் பெருக்குவது, வருவாய் கிடைக்கும் வழித்தடங்கள் அனைத்திலும் அரசுப் பேருந்துகளை இயக்குவது, புதிய பேருந்துகளை வாங்கி எரி பொருள் இயக்கத்திறனை அதிகரிப்பது, நவீன அணுகுமுறையில் விளம்பர உத்திகளை கையாள்வது போன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமே போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க வைக்கவும், போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையாகச் சேரவேண்டிய சலுகைகளை பிடித்து வைத்துக் கொள்ளாமல் காலமுறைப்படி வழங்கவும், பொதுமக்களுக்கு போக்குவரத்து சேவை செய்யவும் பேருதவியாக இருக்கும்.

நியாயமல்ல

நியாயமல்ல

நடைமுறைக்குச் சாத்தியமான அப்படியொரு அணுகுமுறையைத் தவிர்த்துவிட்டு, எளிதான வழிமுறையான கட்டண உயர்வு மூலம் மட்டுமே போக்குவரத்துக் கழகங்களை நிர்வகித்திட முடியும் என்று நினைப்பது நியாயமான முறையல்ல. போக்குவரத்துக் கழகங்களின் ஸ்திரத்தன்மைக்கும் இது எவ்விதத்திலும் ஏற்றதாக அமையாது. மக்களின் சேவைக்காகவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பேருந்து கள் நாட்டுடைமையாக்கப்பட்டன. அந்த அடிப்படை நோக்கத்தை சிதறடிக்கும் விதத்திலும் நாட்டுடைமைத் தத்துவத்தைச் சிறுமைப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள இந்த பேருந்துக் கட்டண உயர்வு அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதோடு மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களுக்குமே பாதிப்பை ஏற்படுத்தி தண்டிப்பதைப் போன்றதாகும்.

இரட்டிப்பு சுமை

இரட்டிப்பு சுமை

இந்தக் கட்டண உயர்வால் ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவித்துத் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்கள் மேலும் தாங்க முடியாத இன்னொரு கட்டண சுமை, விலைவாசி உயர்வு ஆகிய இரட்டிப்பு சுமையை தாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது மிகுந்த வேதனைக்குரியது.
ஆகவே திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கை யினை ஏற்றும், மாநிலம் முழுவதும் மக்களும், மாணவர்களும் தன்னெழுச்சி யாக நடத்திக் கொண்டிருக்கும் போராட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், 19.1.2018 அன்று தமிழக அரசு அறிவித்துள்ள 67சதவீதம் முதல் 108சதவீதம் வரையிலான ரூபாய் 3600 கோடி ரூபாய் அளவிலான பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

English summary
TN Opposition leader M.K.Stalin writes letter to CM Palanisamy to reduce the hike bus fare as people were already suffering more due to price rise and this is more stressfull to their financial status.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X