மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்து குறித்து உயர்மட்டக்குழு இன்று இரண்டாவது கட்ட ஆய்வு
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு தனது இரண்டாவது கட்ட ஆய்வை இன்று தொடங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி 2ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் 36 கடைகள் தீயில் கருகியதாக தகவல் வெளியானது.

இந்தத் தீ விபத்தில் வீர வசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. மேலும், மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. சிலைகள் மற்றும் கோவில் பழங்காலத் தூண்களில் விரிசல் ஏற்பட்டது.
மேலும், தீ விபத்து குறித்து ஆய்வு செய்யவும், சீரமைக்கவும் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழுவில் பொதுப்பணித்துறையினர், தொல்லியல் துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் ஏற்கனவே தீ விபத்து நடந்த பகுதிகளை ஆய்வு செய்திருந்த நிலையில், இன்று மீண்டும் இரண்டாவது கட்ட ஆய்வைத் தொடங்கி உள்ளனர்.
ஆய்வுக்குப் பிறகு, கோவில் வளாகத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கோவில் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஐஐடி பொறியாளர்கள் மற்றும் மின்சாரத்துறையினர் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!