For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ஆஸ்த்மா பிரச்னை உள்ளவர்கள் மறந்தும் கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்து விடாதீர்கள்'

By Vignesh
Google Oneindia Tamil News

சென்னை: குடும்பத்தோடு சென்னைக்குச் செல்பவர்களுக்குத்தான் குறைந்த வாடகைக்கு வீடு கிடைப்பது, அந்த வீட்டில் குடிதண்ணீர் கிடைப்பது, அவசரத்துக்கு பேருந்து, ரயில் கிடைப்பது எனப் பலப்பல பிரச்னைகள். பேச்சிலர்களாகச் சென்னைக்குச் செல்லும் பலருக்கும் ஆதரவுக்கரம் நீட்டி அணைத்துக் கொள்பவை அந்நகரின் மேன்ஷன்கள்.

புறாக்கூண்டு சைஸில் இருந்தாலும், தலைநகரைத் தேடி ஓடி வந்த அத்தனை பேருக்கும், அவர்களின் ஆரம்பகாலங்களில் அடைக்கலம் கொடுத்தவை மேன்ஷன்கள்தான். வெளியூரிலிருந்து வந்து இன்று பேர் தெரிகிற அளவுக்கு வளர்ந்திருக்கும் பலரும் தங்களது ஆரம்பகால மேன்ஷன் வாழ்க்கையை மட்டும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

எல்லோருடைய வாழ்க்கையும் ஆகப்பெரும் க்ளிஷேதான். கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் காலெடுத்து வைத்ததும், அழைக்க ஒரு தொலைபேசி எண் மட்டும் எல்லோருக்கும் கிடைத்துவிடுகிறது. மேன்ஷனில் ஏற்கெனவே தங்கியிருக்கும் நண்பரின் அறைக்குச் சென்று கூட்டுக்குடித்தனத்தில் ஒரு ஓரமாகப் பங்கு போடுவோம்.

அட்வான்ஸே இல்லை பாஸ்!

அட்வான்ஸே இல்லை பாஸ்!

'வாடகை ரொம்பக் கம்மி, அட்வான்ஸே தேவையில்ல பாஸ்...' என்றெல்லாம் அளந்து விட்டார்கள் என்றால் அந்த அறையில் ஃபேன் ஓடாது, மழை பெய்தாலும் ஜன்னலை மூட முடியாது, பாத்ரூம் பாழடைந்து போயிருக்கும் என்றறிக. கொஞ்சம் உயரமானவர்கள் கால் நீட்டிப் படுக்கமுடியாத அளவுக்குக் கோரமான பங்களாக்களும் கூட வாய்க்கலாம்.

குனிஞ்சு பாக்காதீங்கப்பு

குனிஞ்சு பாக்காதீங்கப்பு

'அறையில் எந்தப் பொருளையும் நகர்த்தி விடாதீர்கள் கொசுக்கூட்டம் வரலாம்', 'ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் மறந்தும் கட்டிலுக்கு அடியில் எல்லாம் குனிந்து பார்த்துவிடாதீர்கள்' என எச்சரிக்கை போர்டு மாட்டாத அத்தனை அபாயங்களும் மேன்ஷன்களில் இருக்கும்.

முந்தாநாள் பரோட்டோவின் மிச்ச சொச்சம்

முந்தாநாள் பரோட்டோவின் மிச்ச சொச்சம்

எந்த மேன்ஷனுக்குப் போனாலும் முந்தாநாள் வாங்கிவந்த பரோட்டா சால்னாவின் மிச்சசொச்சம் மூலையில் கிடக்கும். எப்போதோ ஒரு நல்லநாளுக்கு குடித்த காபி கப் தண்ணி படாமல் காற்று வாங்கிக் கொண்டிருக்கும். கை காலை தெரியாத்தனமாக எங்கேயாவது நீட்டினால் பாட்டில் கடகடவென உருளும் சத்தம் கேட்கும்.

டோன்ட் வொர்ரி பழகிரும்

டோன்ட் வொர்ரி பழகிரும்

இன்னும் சில மேன்ஷன்கள் படிகளில் எல்லாம் வெற்றிலைக் கறைகளும், புகையிலைப் பொட்டலங்களுமாகப் படத்தில் வரும் 420 குடோன்களைப் போலவே காணப்படும். தண்ணீர் பைப்பைத் திறந்தால் ப்ரில் இங்க் டப்பா தவறி வாட்டர் டேங்குக்குள் விழுந்துவிட்டதோ என எகிடுதகிடான சந்தேகங்களும் வரலாம். டோன்ட் வொர்ரி ப்ரோ.. பழகிரும்!

டெரர் வசனம்

டெரர் வசனம்

இன்னும் கொஞ்சம் வசதியோடு மேன்ஷன் பார்த்தா, 'வாடகையும் கொஞ்சம் அதிகமா இருக்கும் பரவால்லயா என 'கருப்பசாமி குத்தகைதாரர்' வடிவேலு ரேஞ்சுக்கு டெரராக வசனம் பேசுவார்கள் மேன்ஷன் வாட்ச்மேன்கள்.

பேஸ்ட் காலி..!

பேஸ்ட் காலி..!

ரூம் மட்டும்தான் இப்படியானு லேசுபாசா நினைச்சிடக் கூடாது. பக்கத்து ரூம்களில் இருக்கும் புண்ணியவான்கள் கொஞ்சம் கொடூரமாகவே பிஹேவ் செய்வார்கள். மேன்ஷனுக்குப் போன முதல் நாள், ஃப்ரெண்ட்ஷிப் புடிக்கிறேன் பேர்வழி என பக்கத்து ரூம் பிரகஸ்பதியைப் பார்த்துப் புன்னகைத்து வைத்துவிட்டால் காலையில் விடிந்ததும் அவர் முகத்தில்தான் விழிக்கவேண்டியிருக்கும். 'பாஸ்... பேஸ்ட் இன்னிக்குனு பார்த்து காலியாகிடுச்சு. இன்டர்வியூ போகணும். கொஞ்சம் தர்றீங்களா...' என்பார். இதில் என்ன சிக்கல் என்றால் பாவம் அந்த நபருக்கு தினமும் பேஸ்ட் காலியாகும் வியாதி இருக்கும்.

ஓ இது உங்க ரூல்மா!

ஓ இது உங்க ரூல்மா!

கொசுவத்தியைத் தலைமாட்டில் வைத்துவிட்டுப் படுத்தாலும் மூஞ்சி மேலேயே கொசுக்கள் வட்டம் போடும். எப்படியோ ஆண்டவன் புண்ணியத்தில் தூங்கத் தொடங்கும்போது, யாரோ ஒருத்தர் வந்து கதவைத் தட்டுவார். 'ப்ளாஸ்... ஓ இது உங்க ரூல்மா... பை த பை என் ர்லூம் ழாக் ஓப்ளன் பண்ணமுடில... கொஞ்ச்ழம் பண்ணிவுட முடிமா?' என வெறுப்பேற்றுவார் ஒருத்தர்.

கழுதைக்கு வாக்கப்பட்டா

கழுதைக்கு வாக்கப்பட்டா

'கழுதைக்கு வாக்கப்பட்டா உதை வாங்கித்தானே ஆகணும்'னு மனசுல நினைச்சிக்கிட்டே அந்த ஆளையும் திட்டிக்கிட்டு திறந்து விட்டுட்டுப் போய்ப் படுப்போம். கண்ணயரும்போது திரும்ப கதவைத் தட்டி, 'ப்ளாஸ்... தாங்க்ஸ் சொல்ல மறழ்ந்துட்டேன். தாங்க்ஸ்' என்பார். 'வாழ வந்த ஊர்ல ஏன் கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போவானேன்'னு ஆத்திரத்தை அடக்கிக்கிட்டு கதவைச் சாத்துவோம்.

இப்படி எத்தனை பிரச்னை இருந்தாலும், ஊர்ல இருந்து வந்து பட்டிக்காட்டான் முட்டாய்க்கடையைப் பார்த்தமாதிரி நின்ன நமக்கு வாழ்க்கை தந்து வாடகைக்கு இடமும் தந்த மேன்ஷனை மறக்க முடியுமா?

English summary
The Chennai's mansions are stretching support to many people who go to Chennai as invaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X