எறும்பை கூட கொல்ல நினைக்கமாட்டேன்.. அஜித் குமார் இறப்பு பற்றி நிகிதா கண்ணீருடன் வெளியிட்ட ஆடியோ!
சிவகங்கை: "அஜித் குமார் இறந்ததை நினைத்து நானும், என் தாயும் தினமும் அழுகிறோம். குக்கர் மூடியில் எறும்பு இருந்தால் கூட அதை லேசாக தட்டிவிடும் இளகிய மனம் கொண்டவள் நான்." என உருக்கமாகப் பேசி ஆடியோ வெளியிட்டுள்ளார் நிகிதா.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக வேலை செய்து வந்த அஜித் குமார் மீது மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிகிதா என்பவர் 10 சவரன் நகையை காணவில்லை எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவரது புகாரின் பேரில் அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர் அவரை கொடூரமாகவும் சித்திரவதை செய்து தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

அஜித் குமார் கஸ்டடி மரணம்
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 5 பேரும் கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவல் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைகிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. தொடர்ந்து இந்த வழக்கை தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த நிலையில் அஜித் குமார் மீது புகார் அளித்த பேராசிரியர் நிகிதா மீது பல்வேறு பண மோசடி வழக்குகள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் பேராசிரியராக பணிபுரிந்த நிகிதா மாணவர்களிடம் தகாத வார்த்தையில் பேசியது தொடர்பாகவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு கல்லூரி மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
புகார் அளித்த நிகிதா
நிகிதாவின் நகைகள் காணாமல் போகவில்லை. கோவிலில் அஜித் குமாருடன் நடந்த வாக்குவாதத்தை மனதில் வைத்து வேண்டுமென்றே பொய் புகார் சொல்லி அவரை சிக்க வைத்துள்ளார் நிகிதா என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. நிகிதா மீது அடுத்தடுத்த புகார்கள் வெளிவருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது அவர் தனது தாயுடன் தலைமாறாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் அஜித் குமார் மரண வழக்கில் தொடர்புடைய நிகிதா தற்போது புதிய ஆடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள நிகிதா, "நான் ரொம்ப வேதனையுடனும், துயரத்துடனு இந்த மெசேஜை அனுப்புகிறேன். ஒரு பெண் இந்த சமுதாயத்தில் படித்து, வளர்ந்து, உயர் கல்வி எல்லாம் பயின்று மேலே வந்து ஒரு வேலை வாங்கி தன்னோட தாய் தகப்பனை காப்பாற்றுவது.. ஒரு குடும்பத்தை காப்பாற்றுவது என்பது பெரிய சவாலான் விஷயம்.
நிகிதா பேசிய ஆடியோ
ஒரு பெண் சின்ன தவறு செய்தால் குற்றம் சொல்ல ஆயிரம் பேரும் வந்து அவளை குழி தோண்டி பூமியில் புதைக்கிற வரைக்கும் விட மாட்டார்கள். ஏனென்றால் பெண்களுக்கு இந்த சமுதாயம் அவ்வளவு நீதிதான் கொடுக்கிறது. இந்த விவகாரத்தில் நான் வந்து அமைதியாக இருக்கிறேன் என்றால் தம்பி அஜித் குமார் மரணம் கண்டிப்பா ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வேதனை.
அவங்க தாய் அழுதாங்களோ இல்லையோ.. நானும் என் தாயும் தினம் அழுதுகொண்டு இருக்கிறோம். சம்பவதன்று நான் ஸ்டேஷன் போய் அறநிலைத்துறை அதிகாரிகளோடு புகார் அளித்துவிட்டு வந்துவிட்டேன். வீடியோ எடுத்த சத்தீஸ்வரன் நாள் முழுவதும் எங்களோடு தான் இருந்தார். அதன்பிறகு நடந்த நிகழ்வுகள் எதுவுமே எனக்கு தெரியாது. என்ன நடந்தது என்று கூட தெரியாது.
பல துரோகங்களை சந்தித்துள்ளேன்
என்ன பொறுத்தளவுக்கு நான் அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக நான் குற்றவாளி கிடையாது. அது கடவுளுக்கு தெரியும். எவ்வளவோ பேர் என் மீது அவதூறுகளை வாரி இறைக்கிறீர்கள். கடவுள் என் மன உறுதியை சோதிக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறேன். நான் எனது வயதான தாயை பராமரித்துக் கொள்வதற்காக தான் நான் கல்லூரிக்கு செல்ல முடியாத கட்டாய சூழலில் இருக்கிறேன். இப்போது விடுமுறையில் இருப்பது போல பேசுகிறார்கள். கல்லூரி திறந்த பிறகு 1 நாள் தான் சென்றுள்ளேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல துரோகங்களைச் சந்தித்துள்ளேன்.
நான் பல முறை மன்னிப்பு கேட்க வேண்டும்
எந்த ஒரு உயர் அதிகாரியும் எனக்கு தெரியாது. முதல்வர் ஸ்டாலினுடன் சேர்த்து வைத்து பேசுகிறார்கள். முதலமைச்சர் மீது எனக்கு மரியாதை தான் உள்ளது. வேறு தனிப்பட்ட முறையில் எந்த தொடர்பும் கிடையாது. முதல்வரே அஜித் குமாரின் தாயிடம் மன்னிப்பு கேட்கிறார் என்றால் நான் அஜித் குமாரின் தாயிடம் பல முறை மன்னிப்பு கேட்கவேண்டும்.
என்னை கேமராக்கள் தன்னை சூழ்ந்து கொண்டு இருப்பதால் வெளியே வர முடியவில்லை. நான் உயிர்களை மிகவும் நேசிப்பவள். எந்த உயிருக்கும் பாதிப்பு வரக்கூடாது என நினைப்பேன். குக்கர் மூடியில் ஒரு எறும்பு ஒட்டி இருந்தால் கூட அதை மெதுவாக தள்ளி விட்டு விட்டுத்தான் நான் சாதம் வைப்பேன். வாழ்வது எல்லா உயிர்களின் உரிமை. அழிப்பதற்கு நமக்கு உரிமை கிடையாது.
எனக்கு யாரையும் தெரியாது
எனக்கு ஐஏஎஸ் அதிகாரியை தெரியும், அவருக்கு போன் செய்தேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். அஜித் குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என உண்மையாகவே அக்கறை இருந்தால் இப்படி திசை திருப்பும் வகையில் செய்தி ஊடகங்கள் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கை மீது சேற்றை வாரியிறைப்பது இந்த சமூகத்துக்கு தேவை இல்லாத விஷயம்.
நான் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். எனது அப்பா ஒரு நேர்மையான அரசு அதிகாரி. ஒவ்வொரு ஆண்டும் கலெக்டரிடம் பாராட்டு பெற்றவர். இதை உலகமே எதிர்த்தாலும் நான் தெரிவிப்பேன். என் அப்பா உயர் பதவியில் இருந்தாலும், லோன் வாங்கி நாங்கள் வீடு கட்டினோம். நாங்கள் எந்த சூழ்நிலையிலும் சட்டத்தின் வழியே நடக்கிறோம்." எனப் பேசியுள்ளார் நிகிதா.












Click it and Unblock the Notifications