For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொல்லாங்கு மனப்பான்மையுடன் அறிக்கை வெளியிடுவதா? ஸ்டாலினுக்கு அமைச்சர் காமராஜ் கண்டனம்

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்நோக்கம் கொண்டு அறி்க்கை வெளியிட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டிக் கொடுப்பதை குற்றமாகக் கூறுவதா என்று ஸ்டாலினுக்கு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இனியும் இப்படிப்பட்ட உள்நோக்கம் கொண்ட அறிக்கைகளை வெளியிடுவதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி மற்றும் தொடர்ச்சியாக மீண்டும் அதிமுக வெற்றி பெற்று இதுநாள் வரையிலுமான ஆட்சியில் எந்தக் குற்றச்சாட்டோ, குறைபாடோ சொல்ல முடியாத காரணத்தால், வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற கதையாக, குடும்ப அட்டைகளுக்கு பதில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, ஸ்மார்ட் கார்டு திட்டத்தை செயல்படுத்தாமல் மெத்தனம் காட்டுவதா? என்றும், ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 318 கோடி ரூபாய் நிதி என்னஆனது? என்றும் மனம் போன போக்கில் வினாக்களை அள்ளி வீசியிருக்கிறார் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

 minister kamaraj Condemns on stalin statement about smart ration card

புத்தாண்டின் புதுநாளில் மக்களை ஊக்கப்படுத்தவோ உற்சாகப்படுத்தவோ நல்லதாக நாலுவார்த்தை சொல்லாமல், பொல்லாங்கு மனதுடன் பொய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள 2 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரத்து 386 ரேஷன் அட்டைதாரர்களும் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி பெற்றிடவேண்டும் என்பதற்காக, ஜெயலலிதாவின் விலையில்லா அரிசி உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களையும் எவ்வித தடங்கலுமின்றி அவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்பதற்காக, ஒரு தற்காலிக ஏற்பாடாக உள்தாள் ஒட்டப்படும் என்று அரசு ஆணையிட்டதுதான் ஸ்டாலினை இப்படி கூப்பாடு போட வைத்திருக்கிறது.

தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைகள், 2005-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது தான் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த குடும்ப அட்டைகளின் காலக்கெடு முடிவுற்று 2009-ம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் புதிய குடும்ப அட்டைகளாக மாற்றி வழங்கி இருக்கவேண்டும்.

ஆனால் 2010, 2011 ஆகிய இரு ஆண்டுகளிலும் குடும்ப அட்டைகள் உள்தாள் ஒட்டித்தான் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது என்பது மட்டுமல்ல புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் திமுக ஆட்சியினரால் எடுக்கப்படவில்லை. ஜெயலலிதா, 2011-ம் ஆண்டு மே திங்களில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு இதன்மீது தனிக்கவனம் செலுத்தியதன் அடிப்படையில் புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

புதிய விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படையில் கனிணிமயமான காலத்திற்கேற்ப பொதுவிநியோகத் திட்டத்தை நவீனப்படுத்தி, போலி குடும்ப அட்டைகளை முழுவதுமாக களைந்து, உரியவர்களுக்கு மட்டுமே பொருட்கள் சென்றடையும் வகையில் மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) தயாரித்து வழங்கிட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார்.

அவரின் ஆணையின்படி இத்திட்ட செயல்பாட்டிற்கென 16.09.2014 அன்று அரசு ஒப்புதல் வழங்கி, பொது விநியோகத் திட்டத்தினை முழு கனிணிமயமாக்குதல் மூலம் புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல், குடிமைப் பொருள் வழங்கல் தொடர்பான அனைத்து அலுவலகங்கள் மற்றும் கிடங்குகளை இணையவழி இணைத்தல், குடிமக்கள் குறைதீர் நிவாரணங்களை இணையவழி வழங்குதல், கட்டணமில்லா தொலைபேசி புகார் வசதி செய்தல் இன்றியமையா பண்டங்கள் நகர்வினை முழுமையாக கணினி வழி கண்காணித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டத்தினை செயல்படுத்திட ரூ.318.40 கோடி என நிர்ணயிக்கப்பட்டது.

இந்த 318 கோடி ரூபாய் நிதிதான் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். இப்பணிகளை மேற்கொள்ள 18.09.2014 அன்று விலைப்புள்ளி கோரப்பட்டு, அதன் அடிப்படையில், பொது விநியோகத் திட்டத்தை முழுவதும் கனிணிமயமாக்குதலுக்கான ஒப்பந்தம் 02.03.2015 அன்று மேற்கொள்ளப்பட்டது.

ஸ்மார்ட் கார்டு என்னும் மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு மத்திய அரசின் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டோடு ஆதார் அட்டைகளுடன் ஒருங்கிணைத்து, அதன் அடிப்படையில்தான் ஸ்மார்ட் கார்டு வழங்க முடியும். தமிழகத்தில் உள்ள 34,686 நியாயவிலைக் கடைகளுக்கும் மின்னணு இயந்திரங்கள் வழங்கப்பட்டுவிட்டன.

மொத்தமுள்ள 2 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரத்து 386 குடும்ப அட்டைகளில் 1,90,35,089 குடும்ப அட்டைகள் மின்னணு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்குமான ஆதார் எண்கள் முழுமையாக பதிவு செய்த குடும்ப அட்டைகள் 92,51,646 (49%), குடும்ப அட்டையில் ஒரு உறுப்பினர் ஆதார் எண் மட்டும் பதிவு செய்த குடும்ப அட்டைகள் 87,32,774 (46%), முழுமையாக ஆதார் எண்கள் பதிவு செய்யாத குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 10,50,669 ஆக உள்ளது.

ஆதார் எண்கள் பதிவு அடிப்படையிலேயே ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட முடியும் என்பதால் முழுமையான ஆதார் அட்டை பதிவு பெறுவதற்காக 2016 டிசம்பர் முதல் வீடு வீடாக சென்று அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் முழுமையாக ஆதார் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நடைமுறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் முழுமையான ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. அப்பொழுது இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுவதுமாக செலவு செய்யப்படும்.

இன்னும் ஒரு சில மாதங்களில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்கான பணிகள் வெளிப்படையாக, வெகு வேகமாக, நடைபெறுவதை அறிந்துகொண்டு 'நான் சொன்னேன் சொன்னதால்தான் நடந்தது' என்று கூறுவதற்காகவே ஒரு தவறான அறிக்கையை வெளியிடுவது எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகா என்று வினவ விரும்புகிறேன்.

அதிமுக ஆட்சியில் பொது விநியோகத் திட்டம் செம்மையாக நடைபெறாதது போலவும், திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டது என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் செம்மையான பணி, 04.07.2014 அன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அனைத்து மாநில உணவு அமைச்சர்களின் மாநாட்டில் பாராட்டப்பட்டது.

மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது விநியோகத் திட்ட அமைச்சகம் தனது 07.05.2015 கடிதம் வாயிலாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், காவல்துறை இயக்குநர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி, அதில் தமிழகக் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டி, அதனை பின்பற்றவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது என்பதை எதிர்க் கட்சித்தலைவர் தெரிந்துகொள்ளவேண்டும்.

தமிழக மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திட, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் 5500 கோடி ரூபாய் உணவு மானியமாக வழங்கும் அரசு ஜெயலலிதாவின் அரசு என்பதை அவருக்கு சுட்டிக் காட்ட விழைகிறேன்.

குடும்ப அட்டைகளுக்கு மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி தொடர்ந்து வழங்கி தமிழக மக்களின் பசிப்பிணி தீர்க்கும் அரசாக ஜெயலலிதா அரசு இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை எதிர்கட்சித் தலைவரின் மனசாட்சி ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்று தெரியவில்லை.

தற்போது நடைமுறையில் உள்ள ரேஷன் அட்டைகள் மூலம், ஜெயலலிதாவின் விலையில்லா அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதிலும், முகவரிக்கான முக்கிய அடையாள ஆவணமாக எதிர்கொள்வதிலும், எந்த பிரச்சினையும் இல்லை.

இன்னும் ஒரு சில மாதங்களில் மிகக் கச்சிதமான முறையில் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் வரையில், அத்தியாவசியப் பொருட்களை முறையாக தடங்கலின்றி வழங்கிடவேண்டும் என்பதற்காகவே உள்தாள் ஒட்டப்படுகிறது.

ஆனால் குடும்ப அட்டைகளின் காலக்கெடு முடிவடைந்தும் புதிய அட்டைகள் வழங்குவதற்கான எந்தவிதமான அடுத்த கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளமால் இரண்டு ஆண்டுகள் உள்தாள் ஒட்டிக் கொடுத்தது திமுக அரசு என்பதை வசதியாக மறந்துவிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டவாறு நவீனமான, கச்சிதமான ஸ்மார்ட் கார்டு வழங்கிட வேண்டும் என்பதற்காக அவ்வாறு வழங்கப்படுகின்ற வரையில் உள்தாள் ஒட்டிக் கொடுப்பதை குற்றமாகக் கூறி எதிர்க் கட்சித் தலைவர் கேள்வி கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

இனியும் இப்படிப்பட்ட உள்நோக்கம் கொண்ட அறிக்கைகளை வெளியிடுவதை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். தவறான அறிக்கை வெளியிடும் தனது மனப்போக்கை அவர் திருத்திக் கொள்ள வேண்டும்'' என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

English summary
Tamilnadu food minister kamaraj Condemns on Opposition leader M.K.stalin's statement about smart ration card
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X