For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமேஸ்வரம் கும்பாபிஷேகம்: காசி விஸ்வநாதருக்கு வெள்ளி நாகாபரணம் காணிக்கை கொடுத்த ஓ.பி.எஸ் மகன்...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 20ம் தேதி நடத்த தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்ததை அடுத்து 15ம் தேதி முதல் யாகபூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கும்பாபிஷேகத்தில் பங்கேற்க பக்தர்கள் கூட்டம் ஒருபக்கம் குவிந்து வர, அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குடும்பத்தினர், ரமேஸ்வரம் கும்பாபிஷேக பணியில் ஆர்வம் காட்டுவதோடு, அங்குள்ள காசி விஸ்வநாதருக்கு 9 கிலோ எடை கெண்ட வெள்ளி நாகாபரணத்தையும் காணிக்கையாக அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Minister OPS Family Nagaparanam for Rameswaram temple

வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள ராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணிய தலங்களாகக் கருதப்படுகின்றன. காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் ராமேஸ்வரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி ராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப் பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாகும்.

ராமேஸ்வரம் கோவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். இக்கோவிலில் ராமலிங்கம், காசி விஸ்வநாதர் பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகிய இவருக்கும் தனித்தனியே விமானங்கள் அமைந்திருக்கின்றன.

சுவாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சந்நிதியில் சீதாதேவியால் உருவாக்கப்பட்டு ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமலிங்கர் சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் தழும்பு இன்றும் காணலாம். சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் சந்நிதி அமைந்துள்ளது. இதுவே அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும். இந்த இரண்டு லிங்கங்கள் நிறுவப்பட்டதற்கு புராண கதைகள் சொல்லப்படுகின்றன.

ராமன் வழிபட்ட லிங்கம்

ராமாயணப் போரில் ராவணனைக் கொன்றபிறகு சீதையை சிறைமீட்டு ராமபிரான் அழைத்து வருகிறார். ராமேஸ்வரம் தலம் வந்தபிறகு, ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து, அனுமனை சிவலிங்கம் கொண்டுவருமாறு காசிக்கு அனுப்புகிறார். சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால் சீதை கடற்கரையில் உள்ள மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள். இராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார்.

அனுமன் கொண்டு வந்த லிங்கம்

காலம் கடந்து வந்த அனுமன் தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்று தனது வாலினால் ராமபிரான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்று தோல்வியுற்று நின்றார். ராமர் அனுமனை சமாதானப்படுத்தி அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு அருகில் பிரதிஷ்டை செய்தார். மேலும் அனுமன் கொண்டுவந்த லிங்கத்திற்கே முதல் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

காசி விஸ்வநாதருக்கு முதல் பூஜை

அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் ராமலிங்கத்திற்கு வடபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனுமன் கொண்டுவந்த லிங்கம் காசி விசுவநாதர் எனப்படும். இன்றும் இந்த காசி விசுவநாதருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. பின்பே ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமலிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது.

கும்பாபிஷேக சர்ச்சை

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த பந்தல்கால் நடப்பட்டது முதலே சர்ச்சை தொடங்கிவிட்டது. ராமேஸ்வரத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலில் வரும் 20ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணிகள் நடந்து வருகிறது. கும்பாபிஷேகம் நடத்த சிருங்கேரி சுவாமிகளிடம் ஒப்புதல் பெறவில்லை. பர்வதவர்த்தினி அம்மன் சிலை சேதமடைந்துள்ளது.

ஜனவரி 20 கும்பாபிஷேகம்

ஜனவரி 20ம் தேதி தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த தேதி, கும்பாபிஷேகம் நடத்த உகந்ததல்ல என ஜோதிடர்களும், ஆன்மிகவாதிகளும் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதவிர, ராமேஸ்வரம் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளும் முழுமையாக நடைபெறவில்லை. எனவே, ஜனவரி 20ம் தேதி ராமேஸ்வரம் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டிருந்தது. இதேபோல் பக்சி சிவராஜன் என்பவரும் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

எல்லா நாளும் நல்ல நாளே

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர், கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுக்களில் நாள், நட்சத்திரம் சரியில்லை என்பதில் நீதிமன்றம் தலையிட முடியாது. கடவுளுக்கு எல்லா நாட்களும் உகந்ததே. நல்ல நாளில்லை என்று கூறமுடியாது. இதில் தலையிடுவது நீதிமன்றத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது. சேதமடைந்துள்ளதாக கூறப்படும் பர்வதவர்த்தினி அம்மன் சிலையில் தங்க தகடுகள் மூலம் சேதப்பகுதியை மறைக்கலாம். எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

யாகசாலை பூஜைகள்

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவினை அடுத்து கும்பாபிஷேக பணிகள் தீவிரமடைந்தன. ஜனவரி 16ம் தேதி சனிக்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. அமைச்சர்கள், மடாதிபதிகள் என யாரும் பங்கேற்காத நிலையிலும் உள்ளூர் அ.தி.மு.க-வினர் அதிக அளவில் திரண்டு இருந்தனர்.

ஓ.பி.எஸ் இளைய மகன்

ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் ராமேஸ்வரம் கோயில் யாகசாலை பூஜையில் பங்கேற்றது உள்ளூர் விஐபிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருக்குக் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பு மரியாதை அளித்தனர்.

வெள்ளி நாகாபரண காணிக்கை

யாகசாலை பூஜையில் பங்கேற்ற ஜெயபிரதீப், ராமநாதசுவாமி கோயிலில் உள்ள காசி விஸ்வநாதருக்கு 9.850 கிலோ எடை கொண்ட வெள்ளி நாகாபரணத்தை காணிக்கையாக அளித்தார். குடமுழுக்குத் தொடர்பான செலவினங்களில் ஒரு பகுதியையும் ஓ.பி.எஸ் குடும்பத்தினர் ஏற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டசபை தேர்தல் நெருங்குவதால் வாரிசுகளும் சீட் கேட்க முடிவு செய்துள்ளார்களோ என்னவோ?

சக்தி பீடம்

பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இது "சேதுபீடம்'' ஆகும். இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட இக்கோவிலின் மூன்றாம் பிரகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிரகாரம் உலகப்பிரசித்தி பெற்றதாகும்.

22 தீர்த்தங்கள்

ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது தான் மிக சிறப்பாக கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன.

அக்னிதீர்த்தக் கடல்

அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் ராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு, ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. தனுஷ்கோடி பல வருடங்களுக்கு முன்பு புயலில் அழிந்த பிறகு, கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள், பிதிர்கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன.

English summary
Minister O.Panneerselvam family donate Nagaparanam for Kasiviswanathar in Rameswaram Temple. The Madurai bench of the Madras high court on Thursday dismissed a batch of two writ petitions that challenged the kumbabishekam at the Lord Ramanathaswamy temple in Rameswaram, scheduled to be held on January 20.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X