For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்தி திருமணம்

By Mathi
Google Oneindia Tamil News

சேலம்: மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்தியும், முன்னாள் எம்.எல்.ஏ., வீரபாண்டி ராஜாவின் இளைய மகளுமான கிருத்திகாவின் திருமணத்தை மு.க.ஸ்டாலின் இன்று சேலத்தில் நடத்தி வைத்தார்.

லோக்சபா தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைந்த நிலையில் அக்கட்சி 65 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. தி.மு.க. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சென்னையில் பிற மாவட்டங்களின் செயலாளர் தேர்தல் நடைபெற்றது.

MK Stalin attends Veerapandi Raja's daughter marriage

இருப்பினும் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் மட்டும் நியமிக்கப்படவில்லை. இரண்டு மாவட்டங்களிலும் உச்சகட்ட கோஷ்டி பூசல் நீடிப்பதால் தி.மு.க. தலைமை திணறிக் கொண்டிருக்கிறது.

சேலத்தைப் பொறுத்தவரையில் வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்குப் பிறகு சேலம் மாவட்டச் செயலாளர் பதவி யாருக்கு என்ற கேள்விக்கு விடை கிடைக்காத நிலை நீடிக்கிறது. மாவட்டத் துணைச் செயலாளராக இருந்த எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் மாவட்டச் செயலாளர் பதவியை தந்தைக்கு பின் தனக்கே அளிக்க வேண்டும் என்று வீரபாண்டி ராஜா முழு மூச்சாக தி.மு.க. நிர்வாகிகளை தன்வசப்படுத்தி வைத்துள்ளார். அதேநேரத்தில், மாவட்டப் பொறுப்பாளராகவும், அரசியல் அனுபவமிக்கவராக விளங்கும் எஸ்.ஆர்.சிவலிங்கம் கோஷ்டி சண்டைகளுக்கு அப்பாற்பட்டு, மாவட்டச் செயலாளர் பதவியை தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.

இவர்களைத் தவிர ஸ்டாலினின் முழு நம்பிக்கையை பெற்ற வக்கீல் ராஜேந்திரனும் மல்லுக்கு நிற்கிறார். முன்னாள் அமைச்சர் செல்வகணபதியும் இந்த கோதாவில் குதித்திருக்கிறார். இப்படி சேலம் மாவட்ட திமுக செயலாளர் பதவியை பிடிக்க நான்கு கோஷ்டிகளாக பிரிந்து நின்று மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் யாரையும் நியமிக்கவும் முடியாமலும், தேர்தலை நடத்த முடியாமலும் தி.மு.க. மேலிடம் தத்தளிக்கிறது. இதனிடையே வீரபாண்டி ராஜா, பாரதிய ஜனதாவுக்கு போகிறார்... பாட்டாளி மக்கள் கட்சிக்குப் போகிறார் என்று சிலர் கொளுத்திப்போட சாகும்வரை தி.மு.க.வில்தான் இருப்பேன் என்று வீரபாண்டி ராஜா பதிலடி கொடுத்திருந்தார்.

மேலும் சேலத்தில் மாவட்ட செயலாளர் தேர்தலை நடத்தவும் தாம் தயார் என்றும் வீரபாண்டி ராஜா கூறியிருந்தார். இந்நிலையில் சேலம் 5 ரோடு அருகே உள்ள ரத்னவேல் ஜெயக்குமார் திடலில் இன்று வீரபாண்டி ராஜாவின் இளைய மகள் கிருத்திகா-ஜெயரத்னா திருமணம் இன்று காலை நடைபெற்றது.

இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். இதில் கனிமொழி எம்.பி., துரைமுருகன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. கட்சி நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழில் அதிபர்கள், தொண்டர்கள் என ஏராளமான பேர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொங்கலூர் பழனிச்சாமி, சுப. தங்கவேலன், தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் அழகாபுரம் மோகன்ராஜ், எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

English summary
DMK treasurer MK Stalin attended Veerapandi Raja’s daughter Krithiga wedding with Jayaratnam at Salem on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X