For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி: கர்நாடகா தேர்தலுக்காக தமிழக நலன்களை காவு கொடுக்கும் மத்திய அரசு: ஸ்டாலின் பாய்ச்சல்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்காக காவிரி விவகாரம் உள்ளிட்ட தமிழக நலன்களைக் காவு கொடுக்க மத்திய அரசு துணிந்துவிட்ட்தாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

நீண்டகால விசாரணைக்குப் பின்னர் வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையே சீர்குலைக்கும், கெட்ட நோக்கத்துடன், காவிரி இறுதித் தீர்ப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முன்பு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு வாதிட்டிருப்பது கண்டனத்திற்கு உரியதும், பேரதிர்ச்சியளிக்கக் கூடியது மாகும். 2007-ல் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை அளித்தது.

அது அரசிதழிலும் வெளியிடப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் உத்தர விட்டும் அமைக்காமல், அரசியல் நோக்கங்களுக்காக வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகின்ற மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது காவிரி இறுதித் தீர்ப்பையே தமிழகத்திற்கு முற்றிலும் விரோதமாக மாற்றும் வகையில் தனது வாதங்களை உச்சநீதிமன்றத்தின் முன்பு எடுத்து வைப்பது, 'கர்நாடக மாநிலத்தில் தேர்தலைச் சந்திக்க வேண்டும்', என்ற குறுகிய நோக்கத்திற்காக தமிழகத்தின் நலனை, தமிழக விவசாயிகளின் நலன்களை காவு கொடுக்கத் தயாராகி விட்டது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

மத்திய அரசின் சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், நடுவர் மன்றத்தின் முடிவுகள் மறுஆய்வுக்கு உட்பட்டது", என்று கர்நாடக அரசு இதுவரை கூறி வந்த வாதத்தையே பிரதிபலித்திருப்பது பெரும் கவலயளிக்கிறது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, அதன்படி காவேரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதுதான் மத்திய அரசின் உடனடிக் கடமையே தவிர, நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை மறுஆய்வு செய்வதல்ல.

கருகிப் போன விவசாயம்

கருகிப் போன விவசாயம்

ஏற்கனவே, "மூன்று தினங்களுக்குள் காவேரி மேலாண்மை வாரியத்தை அமையுங்கள்", என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, முதலில் ஒப்புக் கொண்டு விட்டு, பிறகு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு பல்டி அடித்ததால், காவிரி டெல்டா விவசாயம் கடந்த ஐந்து ஆண்டுகளாக கருகிப் போனது. 2013-ல் காவிரி இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டாலும், இன்றுவரை ஏறக்குறைய நான்கு வருடங்களாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை. அதனால்தான் நேற்றைய தினம் நடைபெற்ற விசாரணையில் கூட, "ஏன் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை?", என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

கொத்து கொத்தாக தற்கொலை

கொத்து கொத்தாக தற்கொலை

காவிரி டெல்டாவில் விவசாயம் பொய்த்துப் போய்விட்டது. விவசாயிகள் கொத்துக்கொத்தாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். டெல்லியில் தமிழக விவசாயிகள் 66 நாட்களுக்கும் மேலாக, இரண்டாவது முறையாக, தங்களை வருத்திக் கொண்டு, போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், "காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மறுஆய்வுக்கு உட்பட்டது", "காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும்", "வறட்சி ஆண்டுகள் குறித்து போதிய வழிகாட்டுதல் இல்லை", "காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் நிறைய குழப்பங்கள் இருக்கிறது. அதனால் 12 சந்தேகங்கள் மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது", என்றெல்லாம் காவிரி இறுதித் தீர்ப்பையே செயலிழக்க வைக்கும் முடக்குவாதத்தில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பது, தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் செய்துள்ள மன்னிக்க முடியாத மிகப்பெரும் துரோகம் ஆகும்.

உள்நோக்கம்

உள்நோக்கம்

இறுதித் தீர்ப்பை ஏற்க மறுத்துள்ள கர்நாடக மாநிலத்துடன் உள்நோக்கத்தோடு கைகோர்த்து, மத்திய அரசு இப்படிச் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசின் வாதம் தமிழக மக்களின் இதயத்தை ஈட்டி கொண்டு ஆழமாகக் குத்தியிருக்கிறது. ஆகவே நடுவர் மன்றம் அளித்த காவிரி இறுதித் தீர்ப்பினை அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, அதுகுறித்து கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக மத்திய அரசு இத்தனை சந்தேகங்களை எழுப்புவது ஏன்?

சப்பை கட்டா?

சப்பை கட்டா?

வறட்சிக் காலங்களில் கர்நாடகம் எப்படி தமிழகத்திற்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பது, இறுதித் தீர்ப்பில் மாதம் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள போதும், ‘வறட்சிக் காலம் பற்றித் தெளிவு இல்லை', என்று மத்திய அரசு திடீரென்று கூறுவது ஏன்? கர்நாடக மாநிலத்தில் நடைபெறப் போகும் சட்டமன்ற தேர்தலில் அம்மாநில மக்களின் ஆதரவைப் பெற, தமிழகத்தின் நலனை - உரிமைகளை அடகு வைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவது ஏன்? தமிழகத்திற்கு இழைக்கப்படும் இந்த பச்சைத் துரோகத்திற்கு, மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் என்ன சப்பைக்கட்டு கட்ட போகிறார்கள்? இதுவரை அவர்கள் இதுகுறித்துக் கண்டித்து அறிக்கை வெளியிடாதது ஏன்?

தமிழகம் மன்னிக்காது

தமிழகம் மன்னிக்காது

ஆகவே, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படும் அளவிற்கு உச்ச நீதிமன்றத்தில் புதுப்புது சந்தேகங்களை எழுப்புவதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு உடனே கைவிட வேண்டும். உச்ச நீதிமன்றமே இருமுறை மத்திய அரசைக் கண்டித்திருப்பதால், காவிரி மேலாண்மை வாரியத்தை இனிமேலும் காலம் தாழ்த்தாமல் அமைக்க, மனசாட்சிக்கு மதிப்பளித்து மத்திய அரசு முன் வர வேண்டுமே தவிர, காவிரி இறுதித் தீர்ப்பை செயலிழக்க வைக்கும் கர்நாடக மாநிலத்தின் முயற்சிக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு துணை போகக்கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இறுதித் தீர்ப்பை மாற்ற முயற்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசைத் தமிழக மக்கள் எப்போதும் மன்னிக்க மாட்டார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK Working President MK Stalin slammed that the Centre's stand on Cauvery river issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X