For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போதை பொருள் வியாபாரிகளிடம் மாமூல்- போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை போதை பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கவும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: போதை பொருள் வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த ஐந்தரை ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்துத் துறைகளுமே ஊழல் முறைகேடுகளில் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு செயல்பட்டு வந்திருப்பதை அண்மைக்காலமாக நடந்து வரும் சோதனைகள் நிரூபித்து வருகின்றன. இந்நிலையில், "சென்னையில் போதைப் பொருட்கள் விற்கும் வியாபாரிகளிடம் மாமூல் பெற்ற உயர் போலீஸ் அதிகாரிகள் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்", என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரு.ஜார்ஜ் மாநில அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக, "தினகரன்" பத்திரிக்கையில் வெளிவந்திருக்கும் செய்தி, அதிமுக ஆட்சியில் காவல்துறை அதிகாரிகள் மட்டத்திலும் புரையோடிப் போயிருக்கும் ஊழல் விவகாரத்தை வெளிக்கொணர்ந்து இருக்கிறது.

ஏவல்துறை...

ஏவல்துறை...

அதிமுக ஆட்சியில் காவல்துறை எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் ஏவல் துறையாக பயன்படுத்தப்படுகிறது என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளையோ, சென்னை மாநகரத்தில் நடக்கும் கூலிப்படை கொலைகளையோ, தாய்மார்களின் கழுத்தில் கிடக்கும் நகைகளை பறிக்கும் செயல்களையோ தடுக்க முடியாமல் தவிக்கிறது என்றும் குற்றம் சாட்டி நான் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறேன். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இதுபற்றி பேசியிருக்கிறேன்.

வெட்கக் கேடு

வெட்கக் கேடு

ஆனால் அதிகாரத்தின் நிழலில் இருந்தவரும், அவரது குடும்பத்தினரும் காவல்துறையில் தங்கள் மனம் போன போக்கில் டிரான்ஸ்பர்கள் போட போலீஸ் அதிகாரிகளை நிர்பந்தம் செய்து வருவதையும், அதனால் காவல்துறையில் உள்ள மூத்த அதிகாரிகளே கடந்த ஆறு வருடங்களில் கறை படிந்து நிற்பதையும், இன்றைக்கு வேதனையுடன் பார்க்கும் நிலை உருவாகி விட்டது. பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பதுக்கி வைக்கும் குடோன்களை நடத்தியவர்களிடம் மாமூல் வாங்கிக் கொண்டு அவர்களுக்கும் சென்னை மாநகர காவல்துறை கை கட்டி நின்று சேவகம் செய்தது என்பது உச்சக்கட்ட வெட்கக்கேடான செயலாக அமைந்திருக்கிறது.

வீடியோ ஆதாரம்

வீடியோ ஆதாரம்

சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை, "வரி ஏய்ப்பு" புகாரின் அடிப்படையில் "குட்கா, பான்பராக்" குடோன்களில் ரெய்டு செய்தது. சென்னை புறநகரில் உள்ள மாதவரம், புழல் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட ரெய்டின் போது, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்தது தொடர்பான ரகசிய டைரிகள் சிக்கியதில், வருமான வரித்துறை அதிகாரிகளின் கிடுக்குப்பிடி விசாரணையில், இன்ஸ்பெக்டர் முதல் ஏ.டி.ஜி.பி. வரை யார் யாருக்கு எல்லாம் குட்கா விற்பனையில் மாமூல் கொடுத்தார்கள் என்றும், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா. பான்பராக் பொருள்களை குடோன்களில் பதுக்கி வைத்து சென்னை மாநகரத்திற்கே சப்ளை செய்தவர்கள் யார் யார் என்ற தகவல்களும், அதுபற்றிய வீடியோ ஆதாரங்கள் கூட வருமான வரித்துறையிடம் இருப்பதாகவும் அப்போது பத்திரிக்கை செய்திகள் வெளிவந்தன.

டிஜிபி அசோக்குமார்

டிஜிபி அசோக்குமார்

குட்கா விவகாரத்தில் "அரசியல் சட்டப் பதவி வகித்த" ஒருவரின் உறவினரும், மாநிலத்தின் உயர் பொறுப்பு ஒன்றில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகனும் ஈடுபட்டிருந்ததாக அப்போதே சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் மட்டத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சூழ்நிலையில் உயர் போலீஸ் அதிகாரிகள், குறிப்பாக ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளவர்கள் பெற்ற மாமூல் பற்றிய விவரங்களை வருமான வரித்துறை தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதமாக அனுப்பி வைத்தது என்றும், அதுபற்றிய விசாரணையை அப்போது டி.ஜி.பி.யாக இருந்த அசோக்குமார் மேற்கொண்டார் என்றும் கூறப்பட்டது. அந்த விசாரணை தொடங்கிய சில மணி நேரங்களில், டி.ஜி.பி,யாக இருந்த அசோக்குமார் திடீரென்று இரவோடு இரவாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அருணாசலம் டிரான்ஸ்பர்

அருணாசலம் டிரான்ஸ்பர்

சென்னை மாநகர காவல்துறையில் இதுபற்றி விசாரணை செய்த குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அருணாசலம் திருநெல்வேலி சரக போக்குவரத்து கழகத்திற்கு மாற்றப்பட்டார். உயர் போலீஸ் அதிகாரிகளின் மாமூல் பற்றி விசாரித்த டி.ஜி.பி.க்கும், ஐ.ஜி.க்கும் அதிமுக ஆட்சியில் நேர்ந்த அவல நிலை இது. அதன் பிறகு "குட்கா விவகாரம்" அப்படியே மூட்டை கட்டி வைக்கப்பட்டது.

விசாரணை கமிஷன்

விசாரணை கமிஷன்

இந்நிலையில், மாநிலத்தின் தலைமைச் செயலகத்திலேயே சமீபத்தில் ரெய்டு நடைபெற்றுள்ளது. இந்த சூழலில், "குட்கா விவகாரத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளின் மாமூல் விவகாரம் பற்றி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்", என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் கடிதம் எழுதியிருப்பதாக வெளிவந்துள்ள செய்தியை புறந்தள்ளி விட முடியாது.

கருப்பு ஆடுகள்

கருப்பு ஆடுகள்

ஆகவே, தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்றவற்றை தமிழகத்தில் தாராளமாக விநியோகித்தது யார், அவர்களுக்கும் அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களுக்கும் என்ன தொடர்பு, அதில் தொடர்புடைய உயர் போலீஸ் அதிகாரிகள் யார் என்பது பற்றியெல்லாம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு, காவல்துறையில் உள்ள "கறுப்பு ஆடுகள்" களையப்பட வேண்டும். "வேலியே பயிரை மேய்வது போல்" காவல்துறையில் கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகளை கண்காணிக்க வேண்டிய உயர் போலீஸ் அதிகாரிகளே, அதிமுக ஆட்சியில், "குட்கா மாமூல் கலாச்சாரத்தில்" ஈடுபட்டு மக்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றச் செயல்களை தடுக்காமல் இருந்ததை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது.

விசாரணை கமிஷன்

விசாரணை கமிஷன்

குறிப்பாக இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் போதைப் பொருட்களான, தடை செய்யப்பட்ட "குட்கா, பான்பராக்" விற்பனைக்கு உதவி செய்து வருங்காலத் தலைமுறையை போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்க முயற்சி செய்ததை அறவே பொறுத்துக் கொள்ள முடியாது. ஆகவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உடனடியாக ஒரு விசாரணை கமிஷன் அமைத்து "குட்கா மாமூல் விவகாரத்தில்" சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் அதில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Tamilnadu Opposition leader MK Stalin had demanded to probe on Police Officials who are involved in illegal pan masala racket.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X