புதிய மின் இணைப்பு.. தென்காசி விவசாயி மின்வாரிய அதிகாரிக்கு கொடுத்த மறக்க முடியாத ஷாக்
தென்காசி: தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே காளிராஜ் என்பவர் தனது பழைய வீட்டை புதுப்பித்து புதிய மின் இணைப்பு பெற விரும்பினார். அதற்காக மின்வாரிய அதிகாரிகளை அணுகிய போது 2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குருவிகுளத்தை அடுத்த கொக்குகுளம் கிராமத்தில் 32 வயதாகும் காளிராஜ் விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது தந்தையின் வீட்டை புதுப்பித்து, அதற்கு மின் இணைப்பு பெற விரும்பினார். இதற்காக காளிராஜ் கடந்த 12-8-2026 அன்று தென்காசி மாவட்டம் பழங்கோட்டை மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு வணிக ஆய்வாளர் கருப்பசாமியிடம் கேட்டார். அதற்கு கருப்பசாமி, "புதிய மின் இணைப்பு பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து விட்டு வந்து தகவல் தெரிவியுங்கள்" என்றார்.

அதன்படி மறுநாள் காலையிலே காளிராஜ் புதிய மின் இணைப்பு பெற ஆன்லைன் மூலம் ரூ.5,575 கட்டணம் செலுத்தினார். பின்னர் மதியம் அவர் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று, வணிக ஆய்வாளர் கருப்பசாமியிடம் விண்ணப்பத்தையும், மற்ற ஆவணங்களையும் வழங்கியதாக கூறப்படுகிறது.
அந்த ஆவணங்களை பெற்றுக்கொண்ட மின் வணிக ஆய்வாளர் கருப்பசாமி, "வீட்டை நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப ரூ.2 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும்" என்று கேட்டாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி காளிராஜ், இது குறித்து தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்தை காளிராஜிடம் கொடுத்து அனுப்பினர்.
அவற்றை பெற்றுக்கொண்ட அவர், மின்வாரிய அலுவலகத்தில் இருந்த வணிக ஆய்வாளர் கருப்பசாமியிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று கருப்பசாமியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மின் வணிக ஆய்வாளரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தென்காசி மாவட்டம் மின்வாரிய ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
