"அம்மா என்றழைக்காத உயிரில்லையே"... இன்னும் ஜெ. புகழ் பாடும் செய்தித்துறை!
சென்னை: தமிழக அரசின் இணையதளங்களில் இன்னும் ஜெயலலிதா முழுமையாக அகலவில்லை. அவரது அப்பீல் மீதான தீர்ப்பு வரும் வரை இதே நிலைதான் தொடரும் போலத் தெரிகிறது. ஒவ்வொரு இணையதளத்திலும் ரொம்பவே யோசித்து யோசித்துத்தான் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் படத்தை சேர்த்து வருகின்றனர், ஜெயலலிதாவை நீக்கி வருகின்றனர். ஆனால் செய்தி விளம்பரத்துறையிலோ, மருந்துக்குக் கூட பன்னீர் செல்வத்தின் படம் இல்லை. மாறாக ஜெயலலிதாதான் பிரமாண்டமாக காட்சி தருகிறார்.
தளத்தின் முகப்பிலிருந்து இடம் பெற்றுள்ள அனைத்துப் படங்களிலும் ஜெயலலிதாதான் உள்ளார்.

இந்த செய்தித்துறை தளத்தில் முதல்வர் ஜெயலலிதா என்றுதான் போடப்பட்டுள்ளது. ஜெயலலிதா தொடர்பான செய்திகளும், படங்களுமே இடம் பெற்றுள்ளன.
பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தது, நிதியுதவி அளித்தது உள்ளிட்ட படங்கள்தான் இடம் பெற்றுள்ளன.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரோ, படமோ, அவர் குறித்த செய்திகளோ இல்லை. இத்தனைக்கும் அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முக்கியப் பணி இந்தத் துறையிடம் உள்ளது. ஆனால் அந்தத் துறையோ தவறான தகவல்களுடன் காணப்பட்டது.
இந்த துறைதான் முதல்வர், அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ படங்களை அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் இத்துறையின் இணையதளத்திலேயே தப்புத் தப்பான படங்கள் இடம் பெற்றிருந்தது ஆச்சரியமாக உள்ளது.
மருந்துக்குக் கூடமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் படத்தைப் போடாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. குறைந்தது ஒரு பாஸ்போர்ட் சைஸ் படமாவது போட்டிருக்கலாம். ஆனால் அது கூட இல்லை. அவர் அமைச்சராக இருந்தபோது எடுத்த படத்தைக் கூட பார்க்க முடியவில்லை என்றால் எந்த அளவுக்கு ஓ.பன்னீர் செல்வத்தை செய்தித்துறை புறக்கணித்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ரொம்பக் கேவலம்!