For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின்வெட்டு- நோயாளிகள் பலி; சவக்கிடங்குகளில் உடல்கள் கெட்டுப் போய் துர்நாற்றம்: விஜயகாந்த்

By Chakra
Google Oneindia Tamil News

Patients are dying in government hospitals due to power cuts: Vijaykanth
சென்னை: தமிழகத்தில் நிலவும் மிகக் கடுமையான மின் வெட்டுப் பிரச்சனையால், அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கூட பலியாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின் தடையாலும், ஜெனரேட்டர் இயங்காததாலும் செயற்கை சுவாக கருவிகள் வேலை செய்யவில்லை. இதனால் ஒரு விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த பத்திரிகையாளர் பொன். முருகன் மற்றும் சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ரவீந்திரன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆனால், மின்வெட்டுப் பிரச்சனையால் அவர்கள் பலியாகவில்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் வழக்கம்போல் கதை விட்டு வருகின்றனர்.

இந் நிலையில் இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் நிலவி வரும் மின் பிரச்னை தொடர்பாக மக்களவைத் தேர்தலின்போதே கூறினேன். ஆனால் அதிமுக அரசு தேர்தலுக்காக மட்டும் தமிழகத்தில் மின் பிரச்னையே இல்லை என்பதைப் போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியது. மின்வெட்டு என்ற பேச்சே தமிழகத்தில் இல்லை என்பது‌ போன்ற மாயத்தோற்றத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார்.

கோடை காலம் ஆரம்பித்தவுடன் மின்வெட்டின் சுயரூபம் தெரியும் என்று‌ சொல்லி வந்தேன். அப்போது‌ நீண்ட நெடிய விளக்கத்தை அளித்து‌ தமிழகம் மின்மிகை மாநிலம் ஆனது‌ போல முதல்வர் ஜெயலலிதா பேசினார். ஆனால், நடப்பது‌ என்ன?

இப்போது சென்னையில் 4 மணி நேரமும், பிற மாவட்டங்களில் 8 முதல் 12 மணி நேரமும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

தொழில் நகரங்கள் முடங்கிப் போய் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர். கோடையின் தாக்கத்தால் இரவு நேரங்களில் மக்கள் தூக்கமின்றி அவதிப்படுகின்றனர்.

மின்சாரம் இல்லாததால் விவசாயத்துக்கு நீர் பாய்ச்ச முடியவில்லை. குடிநீர் பஞ்சம் அதிகமாக நிலவுவ தால் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல், உண்ணாவிரதம், முற்றுகைப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருள் சூழ்ந்துள்ள நேரத்தில் கொள்ளை அடிப்பதும், வழிப்பறி செய்வதும் என சட்டம் ஒழுங்கும் சீர்கெட்டுப் போய் உள்ளது.

மருத்துவமனைகளும், நோயாளிகளும்கூட இந்த மின்வெட்டில் இருந்து தப்பவில்லை. ஆயிரக்கணக்கானோர் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட நோயாளிகள் மின் தடையால் உயிர் பிழைக்கப் போராடியுள்ளனர். அதில் இரண்டு நோயாளிகள் உயிர் இழந்துள்ளனர்.

இந்த செய்தியை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மின் தடையால் செயற்கை சுவாசக் கருவிகள் செயல்படவில்லை என்று தெரிகிறது. அந்த நேரத்தில் டாக்டர்கள் யாருமே இல்லாமல், நர்சுகள் மட்டுமே பணியில் இருந்து‌ள்ளனர். அதன் பின் அங்கே வந்த டாக்டர்கள், இருவரும் இறக்கவில்லை என்று‌ கூறி இறந்தவர்களின் உடல்களுக்கு, 'ரமணா' படத்தில் வருவதைப் போல் செயற்கை சுவாசம் அளித்ததாகவும், உடன் இருந்த உறவினர்கள் தகராறு‌ செய்த பிறகே, இறந்ததை உறு‌தி செய்ததாக சொல்லப்படுகிறது‌.

போதாக்குறைக்கு மருத்து‌வமனையின் சவக்கிடங்கில் உடல்கள் கெட்டுப் போகாமல் இருக்க 'ப்ரீசர்' பெட்டிகளில் வைத்து‌ பாதுகாக்கப்படுகிறது‌. இந்த மின்வெட்டினால், ப்ரீசர்கள் கூட செயல்படாமல் பல உடல்கள் கெட்டுப்போய் அதிலிருந்து‌ துர்நாற்றம் ஏற்படும் அளவுக்கு மோசமான நிலை உள்ளது‌.

இந்த ஆட்சியில் நோயாளிகளின் உயிரையும் காப்பாற்ற முடியவில்லை. இறந்தவரின் உடலையும் பாதுகாக்க முடியவில்லை. இதைவிட தமிழகத்தில் வேறு கொடுமை இருக்க வாய்ப்பில்லை.

சென்னையில் குண்டுவெடிப்பு, தமிழகம் முழுவது‌ம் மின்வெட்டு, குடிநீர் பஞ்சம், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு என தமிழகம் மிக மோசமான நிலையில் உள்ளது‌. இது‌போன்ற இக்கட்டான சூழலில் கூட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் அமர்ந்து‌ மக்கள் பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முன்வராமல், கொடநாட்டில் குளுகுளுவென ஓய்வெடுத்து‌ வருகிறாரே, இது‌ நியாயமா?.

இவருடைய செயலைப் பார்க்கும்போது, ரோம் நகரம் பற்றி எரியும் போது‌, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது‌.

மேலு‌ம், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பொன்முருகன், மாங்காட்டைச் சேர்ந்த ரவீந்திரன் ஆகியோர் குடும்பங்களுக்கு எனது‌ ஆழ்ந்த இரங்கலையும், அனு‌தாபத்தையும் தெரிவித்து‌க் கொள்கிறேன். இரு குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுகின்ற வகையில் நிதியுதவியை தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்று‌ம் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

English summary
Patients are dying in government hospitals due to power cuts and bodies are rotting because of no power supply to freezers in mortuaries, said DMDK president Vijaykanth
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X