For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவின் நாடகங்களைக் கண்டு ஏமாறுவதற்கு நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல: கருணாநிதி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா அமைச்சர்கள் மீது எடுக்கும் தற்போதைய நடவடிக்கைகளை கண்டு ஏமாறுவதற்கு நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசில் என்னதான் நடக்கிறது? கடந்த ஐந்தாண்டு காலமாக ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் மீதெல்லாம் அவ்வப்போது பல்வேறு புகார்கள் வெளிவந்தன. குறிப்பாக மின்துறை அமைச்சர் மீது பல கோடி ரூபாய் ஊழல் புகார்கள் எல்லாம் பூர்வாங்க ஆதாரங்களுடன் கூறப்பட்டன. அப்போதெல்லாம் முதல்வர் ஜெயலலிதா கண்டு கொள்ளாமல் பாராமுகமாகவே இருந்தார். தற்போது என்ன நிலைமை?

 people's will not believe on jayalalithaa activities: karunanidhi

அன்றாடம் நாளேடுகளைப் பிரித்தால் வருகின்ற செய்திகள் எத்தகையவை? அமைச்சரவையில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில், ஏன் இரண்டு முறை நீதிமன்ற நடவடிக்கைகளால் ஜெயலலிதா பதவியிலிருந்து இறங்க வேண்டிய நேரத்தில் முதல்வராகவே இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். இன்றும் அவர்தான் நிதியமைச்சர். ஆனால் அவருடைய கதி என்ன? அவருடைய நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஜெயலலிதா வாய்மொழி உத்தரவு உளவுத் துறைக்குப் பிறப்பித்து, அவர்கள் பன்னீர்செல்வத்திற்கு எங்கெங்கே எவ்வளவு சொத்து, என்னென்ன முறைகேடுகளைச் செய்திருக்கிறார், எம்.எல்.ஏ. சீட் வாங்கித் தருவதாக அவருடைய ஆதரவாளர்கள் வசூலித்த பணம் எத்தனை கோடி என்ற விவரங்களையெல்லாம் திரட்டியிருக்கிறார்களாம்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி செய்த தவறால் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நாகமுத்து என்ற பூசாரி கடிதம் எழுதி விட்டு உயிர் துறந்தது பற்றி எதிர்க்கட்சிகள் குறைகூறிய போது அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? கிடையாது. இன்று அதே ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் செய்கின்ற தவறுகள் பற்றி புலனாய்வுத் துறை ஆராய்ந்து அறிக்கை கொடுக்கிறதாம்.

ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், பழனியப்பன் ஆகிய மூன்று அமைச்சர்களும் மாநிலம் முழுதும் பலரிடம் எம்.எல்.ஏ. சீட் வாங்கித் தருவதாக கோடி கோடியாக வசூல் செய்திருப்பதெல்லாம் அன்றாடம் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று அமைச்சர்களும் சென்னையை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று கார்டன் உத்தர விட்டுள்ளதாம். அதோடு, இவர்கள் கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று தடை ஆணையாம்.

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், அதிமுக மீனவர் பிரிவு துணைச் செயலாளர் டி.ரமேஷ், வேளச்சேரி எம்.எல்.ஏ. அசோக், தேனி மாவட்டம் எல்லப்பட்டி முருகன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கள் சின்னையா, தண்டரை மனோகரன், விஜயபாஸ்கர், தாம்பரம் கரிகாலன், வரகூர் அருணாசலம் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

நத்தம் விசுவநாதனின் நெருங்கிய நண்பரான பழனி நகரச் செயலாளர், கே.மாரியப்பன் பதவியும் பறிக்கப்பட்டது. தொடர்ந்து தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்ட எம்.எம்.பாபுவின் மாவட்டச் செயலாளர் பதவியும், ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்த டி.ஆர்.என்.வரதராஜன், தேனி மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருந்த ஆர்.ஆர்.ஜெகதீஸ், ஆண்டிப்பட்டி ஒன்றியம் மாவட்டப் பிரதிநிதி பொறுப்பில் இருந்த எம்.ராஜ்குமார் ஆகியோர் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.

ஓ.பன்னீர்செல்வத்தின் நிழல் என்று வர்ணிக்கப்பட்டு வந்த சீனி கந்தசாமி, போயஸ் கார்டன் முன்னாள் ஊழியர் ரமேஷ்குமார், சிவகாசியைச் சேர்ந்த சிவக்குமார் ஆகிய 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில், நீலாங்கரையில் சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து, மாநிலம் முழுவதும் பன்னீர்செல்வம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உதவியுடன் ஏராளமானவர் களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளதாகத் தெரிவித்தனர். அவர்கள் மூவரும், நாங்கள் அப்பாவிகள், எங்களுக்கு சம்பளம் மட்டுமே கொடுத்தனர், முழுப் பணத்தையும் மேலிடத்தில் கொடுத்து விட்டோம், ஏராளமானவர்களிடம் நாங்கள் பணம் வாங்கிக் கொடுத்துள்ளோம் என்று கூறியிருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி, சென்னையில் முடக்கி வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். அவருடைய நெருங்கிய நண்பர் செல்லமுத்து, கடமலை மயிலை ஒன்றியத் தலைவர் முருக்கோடை ராமர் இல்லத் திருமணங்கள் எல்லாம் அவருடைய தலைமையிலேதான் நடைபெறுவதாக இருந்தாலுங்கூட, கலந்து கொள்ளவில்லையாம். அந்த அழைப்பிதழ்களில் கூட வழக்கமாக இடம் பெறும் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெறவில்லையாம். திருமணத்தில் கலந்துகொள்ள பயணம் புறப்பட்ட பிறகு, ரத்தாகி விட்டதாம்.

அமைச்சர் ஓ.பி.எஸ். எங்கே? என்றே நாளேடு ஒன்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், தமிழக நிதியமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு ஆட்சி மேலிடத்தில் ஏற்பட்ட சிக்கலைத் தொடர்ந்து, அவர் தொடர்பான வதந்திகள், நாலாபுறமும் றெக்கை கட்டிப் பறக்கின்றன. குறிப்பாக வாட்ஸ்-அப்பில் அவர் பற்றிய செய்திகள், நொடிக்கொரு முறை வந்து பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை கலக்கம் அடைய வைத்துள்ளது.

நத்தம் விசுவநாதனின் ஆதரவாளர்களான திண்டுக்கல் தகவல் தொழில் நுட்பப் பிரிவுச் செயலாளர் தர்மலிங்கம், சாணார்பட்டி ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் மணி என்கிற சுப்பிரமணி, நத்தம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ் ஆகியோரது பதவிகள் பின்னர் பறிக்கப்பட்டன. இதில் மேட்டுக்கடை செல்வராஜ், நத்தம் விசுவநாதனின் மருமகனும், மாவட்டப் பொறுப்பாளருமான கண்ணனின் நெருங்கிய நண்பர். கண்ணனின் பினாமி என்று அழைக்கப்படுபவர்.

தூத்துக்குடியில் அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியை தூத்துக்குடி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சிப் பதவிகள் முதல் வேலைவாய்ப்பு, டிரான்ஸ்பர் ஆகிய பணிகளுக்கு கிருஷ்ணமூர்த்தி பணம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாகத் தரப்பட்ட புகாரின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஓ.பி.எஸ்.சின் பினாமியாகச் செயல்பட்ட அரசு ஒப்பந்தக்காரர், ஆர்.எஸ்.முருகன் மீது பாளை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். அவர் தலைமறைவாக உள்ளார்.

இந்தச் செய்திகள் பற்றி அரசின் விளக்கம் என்ன? இதே அமைச்சர்கள், மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் மீதும் எதிர்க்கட்சிகள் கடந்த ஐந்தாண்டு காலமாக புகார்களையெல்லாம் அடுக்கடுக்காக எடுத்துக் கூறிய போது அதைப் பற்றி முதல்வர் காதில் போட்டுக் கொண்டாரா? தற்போது அந்தப் புகார்கள் எல்லாம் உண்மை என்று ஆகி விட்ட நிலையில், இதற்காக இந்த அரசாங்கம் மக்களுக்குத் தருகின்ற விளக்கம் என்ன? தற்போது வெளிப்படையாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் ஜெயலலிதா வழக்கமாக நடத்தும் கபட நாடகங்கள்தானா? நாட்டு மக்களை ஏமாற்றித் திசை திருப்புவதற்காக போடுகின்ற நய வஞ்சகக் கூத்துகளா?

ஆனால் ஜெயலலிதாவின் இந்த நாடகங்களைக் கண்டு ஏமாறுவதற்கு நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல! ஜெயலலிதா நடத்திய இதுபோன்ற பழைய நாடகத்தை ஏற்கனவே கண்டு பின்னணிக் கதைகளைப் புரிந்து கொண்டவர்கள். ஏன் தற்போது ஜெயலலிதா உடன் வாழ்கின்ற சசிகலா பற்றியே ஜெயலலிதா என்ன சொன்னார்? எப்படி நடந்து கொண்டார்? நாட்டிற்குத் தெரியாதா? சசிகலா வெளியேற்றம், மீண்டும் அடைக்கலம் என்பனவெல்லாம் நாடகத்தின் காட்சிகள் என்பது புரியாதா? இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK chief karunanidhi says, people's will not believe on jayalalithaa activities
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X