விடிய விடிய காத்துக் கிடந்தும் "சிலை"யாகலையே... மணமேல்குடியில் ஒரு ஓவர் பக்தி களேபரம்!

மணமேல்குடி: பழமையின் கொடுமை இன்னமும் கூட சிலரை பிடித்து ஆட்டுவித்து கொண்டிருப்பதை பார்த்தாலோ, கேள்விப்பட்டாலோ கோபமும் ஆத்திரமும் நமக்கு பொத்துக் கொண்டு வருவதை தவிர வேறு என்னதான் செய்வது என்று தெரியவில்லை. எதுக்குமே ஒரு அளவு வேணாமா? என்னதான் ஐ போன்கள், ஷாப்பிங் மால்கள், புதுபுது விஞ்ஞானிகள் என உலகமே நவீனமயமானாலும் சிலரையெல்லாம் எத்தனை ஜென்மம் ஆனாலும் திருத்தவே முடியாது போலிருக்கு. அப்படி ஒரு நிகழ்வுதான் புதுக்கோட்டை மாவட்டத்திலும் நடந்திருக்கு.
மணமேல்குடியை அடுத்துள்ள ஒரு கிராமம் அம்மாபட்டிணம். பெயர்தான் பட்டிணம். இந்த ஊருக்குள்ளே இருக்கிற ஆட்களின் மனநிலைமையே வேறு. இந்த பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் மாசிலா. 6-ம் வகுப்பு படிக்கிறாள். வயது 12. இந்த சிறுமிக்கு கடவுள் பக்தி ஜாஸ்தி. நான் சாமியாக போவேன், துறவியாக போவேன் என சொல்லி வந்துள்ளார். இதனால் பெற்றோர் சிறுமியின் ஜாதகத்தை எடுத்து கொண்டு போய் ஒரு ஜோதிடரிடம் கொடுத்தனர். அந்த ஜோதிடரோ, அந்த சிறுமிக்கு மேல். அவளின் 12-வது பிறந்த நாளில் கற்சிலையாக மாறிவிடுவார் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம்தான் சிறுமியின் 12-வது பிறந்த நாள். இப்போது பெற்றோர், சிறுமி, ஜோதிடரை விடவும் இன்னும் ஒரு படி அதிகமாகவே போய்விட்டார்கள். 'தனது மகள் சிலையாக மாற போவதாக ஜோதிடரும் சொல்லிவிட்டார், சாமியாக போய்விடுவதாக மகளும் சொல்லிவிட்டாள், அதனால் அது இன்று நடந்துவிடப்போகிறது என்று நினைத்து, நள்ளிரவு வீட்டில் சிறப்பு பூஜை நடத்தினர்.
மாசிலாவிற்கு பட்டு சேலை கட்டி பூ அலங்காரம் செய்து, அங்கிருந்த அம்மன் கோயில் வளாகத்திற்கும் அழைத்து சென்றனர். இதில் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு வேறு. இப்படி அலங்காரம் செய்து அழைத்து போவதையும், மேள சத்தத்தையும் பார்த்த மக்களுக்கு சிறுமி கற்சிலையாக மாற போகிறாள் என்ற தகவலும் பரவியது.
இது அக்கம் பக்கம் உள்ள கிராமங்களுக்கும் பரவியது. மக்கள் 500-க்கும் மேல் திரண்டனர். எல்லோரும் கோயில் முன்பு வந்து சிறுமி முன்பு உட்கார்ந்து விட்டார்கள். சும்மா உட்கார்ந்தார்களா என்றால் அதுவும் இல்லை, பக்தி பரவச பாடல்களை பாட ஆரம்பித்துவிட்டனர். சிறுமியை பார்த்து ஓம் சக்தி, பராசக்தி என கோஷமிட ஆரம்பித்துவிட்டனர். இது நாள் முழுதும் தொடர்ந்தது, கடைசியில் கோஷமிட்டதும், பாட்டு பாடியதும்தான் மிச்சம்.
அவளுக்கு அருளும் வரவில்லை. சாமியும் வரவில்லை. துறவியாகவும் போகவில்லை. கற்சிலையாகவும் மாறவே இல்லை. சிறுமி சிறுமியாகவேதான் இருந்தாள். இதனால் நாள் முழுதும் காத்துக் கிடந்த மக்கள் கலைந்து சென்றனர். பெற்றோரும் அந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டனர்.
மூடநம்பிக்கை எனும் மாயையிலிருந்து இன்னமும் அந்த பழனி-லட்சுமி தம்பதி விடுபட்டு வரவில்லை. அதனை விரட்டியடிக்கவும் மனமில்லை. பெண்ணுக்கு எப்போது இந்த பக்தியின் தாக்கம் வேர்விட தொடங்கியதோ, அதன் எல்லை தற்போது எதுவரை விரிந்து கிடக்கிறதோ தெரியாது. ஆனால் படிக்கும் ஒரு பெண்ணை, அதுவும் எல்லாம் பதிந்துபோகும் வயதில் உள்ளவளை, சரியான முறையில் வழிநடத்தவும், அவள் இப்படி உளறும்போதே கண்டித்திடவும் பெற்றோர் தவறிவிட்டனர்.
யதார்த்த உலகை விட்டு, மனதை பலவீனமாக்கி, மந்தமானவர்களாகவும் ஆக்கி, சாத்தியமில்லாதவற்றை எல்லாம் நம்பி, அதற்கு காலம் நேரம் விரயமாக்கி கொண்டிருந்தால், அதன் பலனோ மிகவும் அபாயகரமானதாகத்தான முடியும். மூடநம்பிக்கை என்னும் கட்டமைப்பிலிருந்து தன்னை மெல்ல மெல்ல இந்த சமூகம் முழுமையாக விடுவித்து கொள்வதுதான் இதற்கெல்லாம் ஒரே நிரந்தர தீர்வு.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!