For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் வாங்க ஜனகராஜ் !

By Shankar
Google Oneindia Tamil News

- கவிஞர் மகுடேசுவரன்

சிறுவயதில் நாமெல்லாம் பார்த்துச் சிரித்த நடிகர். மண் வாசனையில் 'வாத்தியார்' வேடத்தில் நான்கைந்து இடங்களில் தலைகாட்டினாலும் தனித்துவமான நடிப்பு. வாட்டசாட்டத்துக்குத் துளியும் தொடர்பில்லாத இயல்பான உடலசைவுகள்.

உள்ளொன்று புறமொன்று இல்லாத, இயற்கையான பண்புத்தோற்றங்களில் தொடர்ந்து நம் மனங்கவர்ந்தவர். 'நெத்தியடி'யின் முதற்பாதியில் இவரை மறக்க முடியாது. 'வேணூஉ... திர்காணியெ குட்த்துரு... வந்திருக்கறவுங்கொ நம்புளய பத்தி இன்னா நினிப்பாங்கொ...' என்ற இழுப்பு இன்னும் நினைவிருக்கிறது.

Poet Magudeswaran's welcome note to Janakaraj

இவர் காலத்திற்குப்பின் நகைச்சுவை நடிகர்கள் பலர் வென்றதற்கு உடன்தொடர்ந்த இன்னொரு நடிகர் அரைக்காரணம் ஆவார். ஆனால், இவர்க்கு அப்படி யார் ஒருவரின் துணையும் தேவைப்படவில்லை. நேராக, நாயகனோடு நகையாடுவார்.

இவருடைய காட்சிகள் அனைத்துமே கதையோடு தொடர்புடையவை. மணிரத்னம் இவர்க்காகவே நகைச்சுவைக் கிளைக்கதை எழுதியிருக்கிறார். (அக்னி நட்சத்திரம் - படத்துக்கும் நகைச்சுவைக் காட்சிக்கும் அதில் தொடர்பில்லை).

நகைச்சுவை தவிர்த்த பிற வேடங்களிலும் உறுத்தலேயில்லாமல் பொருந்தியவர். நான்கைந்து படங்களில் நாயகனாகவும் நடித்தார். அப்படங்களும் நன்றாக ஓடின.
சேலம் மாவட்டக் கோவில் திருவிழா ஒன்றுக்குச் சென்றிருந்த நான் ஆட்டையாம்பட்டியிலோ மல்லசமுத்திரத்திலோ 'நான் புடிச்ச மாப்பிள்ளை' என்ற படத்தைப் பார்த்தேன். பெண்கள் எல்லாரும் துன்பக் காட்சிகளில் இவர் நடிப்பில் ஒன்றிப்போய் அழுதார்கள்.

பிறகு திடுதிப்பென்று திரையிலிருந்தும் ஊடக வெளிச்சத்திலிருந்தும் காணாமல் போனார். அது சரிதானோ என்றுகூடத் தோன்றியிருக்கிறது. வித்தைகளைத் தொடர்ந்து செய்து சலிப்புற்ற கலைஞன் ஒரு கட்டத்தில் அமைதிக்குள் நுழைவது இயல்வுதான். கடைசியாக இவரை நான் பார்த்தது யூகிசேது நடத்திய 'நையாண்டி தர்பார்' நேர்காணலில். அதன்பிறகு எங்கும் காணவில்லை.

இப்பொழுது திரும்பி வந்துள்ளாராம். அடடா... அந்த ஆற்றலும் தீர்க்கமும் ஏதோ சரிந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. பராமரிக்கப்படாத பழைய தேர் ஒன்றைப் பார்க்கையில் தோன்றும் கலவையுணர்ச்சி அது.

இக்காணொளியைப் பார்த்து முடித்ததும் எனக்குள் பல சிந்தனைகள் எழுகின்றன. நல்லதோ கெட்டதோ வெற்றியோ தோல்வியோ வாய்ப்புள்ளதோ இல்லையோ - நம் களத்தைவிட்டு நீங்கவே கூடாதோ என்று தோன்றுகிறது.

நம்மை உயர்த்திய வித்தையை நாம் சற்றே மறந்திருந்தால் அது நம்மை மொத்தமாய்க் கைவிட்டுவிடும் என்பதும் விளங்குகிறது. நமக்கு எது தெரியுமோ அதை இறுக்கிப் பற்றிக்கொள்ள வேண்டும், அதை விட்டு நீங்கவே கூடாது. நம் முதுமையை நம் அடையாளத்திற்கு அப்பால் இருந்து பார்க்கவே கூடாது. அந்தத் தெம்பு நமக்கில்லை.

எது எப்படியோ, வாங்க ஜனகராஜ் !

English summary
Veteran actor Janakaraj is coming back after 8 years to Tamil cinema and doing a key role in an untitled movie. Here is a welcome note from poet Magudeswaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X