For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோதனைகள் நீங்கி மாற்றமும், முன்னேற்றமும் காண்போம்- ராமதாஸ் புத்தாண்டு வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் மாற்றமும், முன்னேற்றமும் காண இந்த ஆங்கில புத்தாண்டில் உறுதி ஏற்போம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது வாழ்த்து செய்தியில், ''புத்தாண்டு எப்போதும் நம்பிக்கையுடன் தான் பிறக்கிறது என்ற போதிலும், பல நேரங்களில் அது ஏமாற்றத்தில் தான் முடிகிறது. 2015 ஆம் ஆண்டையும் நம்பிக்கையுடன் தான் வரவேற்றோம்; ஆனால், அது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் எண்ணற்ற ஏமாற்றங்களைத் தந்ததுடன், கடைசி நேரத்தில் வெள்ளத்தின் வடிவில் மிகப்பெரிய சோகத்தையும், சேதத்தையும் பரிசாக அளித்துச் சென்றிருக்கிறது. ஆனால், 2016 ஆம் ஆண்டு மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தரும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

political leaders wishes for new year eve

2015 ஆம் ஆண்டில் தமிழக மக்கள் எண்ணற்ற சோதனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. ஆண்டின் தொடக்கத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தன. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் குடிநீருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியது. ஆனால், அதைப் போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மக்களைத் தவிக்கவிட்டது.

வடகிழக்கு பருவமழை வரமாக அமையும்; குடிநீர் தட்டுப்பாடு நீங்குவதுடன் தமிழகம் முழுவதும் வளம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை சாபமாக மாறியது. அதைவிட, மழை பாதிப்பை தமிழக அரசு கையாண்ட விதம் மிகப்பெரிய சாபக்கேடாக அமைந்தது. மக்களின் உயிரைக் காப்பாற்றி உதவுவதை விட, அனைத்திலும் விளம்பரம் தேடுவதில் தான் ஆட்சியாளர்கள் அக்கறை காட்டினர். மழையால் ஏற்பட்ட பாதிப்பை விட ஆட்சியாளர்களின் தொல்லைகள் தான் அதிக இன்னலை தந்தன.

தமிழகத்தை கடனில் முதலிடத்திற்கு கொண்டு சென்றது, வளர்ச்சியில் கடைசி இடத்திற்கு தள்ளியது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது, விலையைக் கட்டுப்படுத்துவதற்காக வாங்கப்பட்ட பருப்பில் கூட ஊழல் செய்தது என 2015 ஆம் ஆண்டில் தமிழக மக்கள் எதிர்கொண்ட ஏமாற்றங்களையும், சந்தித்த துரோகங்களையும் பட்டியலிடத் தொடங்கினால் பக்கங்கள் போதாது.

2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அனைத்து காயங்களுக்கும் நிச்சயமாக 2016 ஆம் ஆண்டு மருந்து தடவும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. தமிழகத்தின் இன்றைய நிலையை மாற்றவேண்டும் என்றால் 2016 ஆம் ஆண்டில் முதலில் மாற்றமும் அடுத்து முன்னேற்றமும் ஏற்பட வேண்டும். அதற்காக இந்த ஆங்கிலப் புத்தாண்டு நாளில் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்

இதே போன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், "ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கஷ்டங்கள் நீங்கி, இருள் சூழ்ந்துள்ள அவர்களது வாழ்வில், இன்றிலிருந்தாவது ஒளி வெள்ளம் ஏற்படட்டும். தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி அகலட்டும், தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சி அமையட்டும். 2016ல் தமிழகத்தில் அமையும் புதிய ஆட்சியில், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் மக்கள் அனைவருக்கும், உறுதியாக கிடைத்திட வேண்டுமென எனது இதயப்பூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தேமுதிக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder ramadoss and DMDK party leader vijayakanth convey their wishes to people for New year eve.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X