விஜயபாஸ்கர் 'குட்' டாக்டர் இல்லை.. குட்கா டாக்டர்.. டிடிவி தினகரன் பொளேர்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அமைச்சர் GOOD டாக்டர் இல்லை குட்கா டாக்டர் என்று டிடிவி தினகரன் கடுமையாக சாடி உள்ளார்.
திருவப்பூர் அருகே அமமுக பொதுக்கூட்டம் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

விஜயபாஸ்கர் மீது சாடல்
அப்போது பேசிய தினகரன், வருகிற திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் அமமுகதான் வெற்றி பெறும் என்றார். தொடர்ந்து பேசிய தினகரன், அமைச்சர் விஜயபாஸ்கரை கடுமையாக தாக்கி பேச தொடங்கினார்.

காற்றில் பறக்கும் அப்பளம்
விருந்து ஒன்றில் அண்ணா அவர்கள் 'நாலனா முட்டை அமைதியாக இருக்க, காலனா அப்பளம் காற்றில் பறக்கிறது' என்று பேசியதுதான் ஞாபகம் வருகிறது. அதுபோல,தற்பொழுது இந்த காலனா அமைச்சர்கள், ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையில் இருந்து அமைச்சராக இருக்கும் டாக்டர் ஒருவர் தொடர்ந்து ஊழல் செய்து வருகிறார். அவர் வீட்டில் சோதனை செய்யாத துறைகளே இல்லை.

குட் டாக்டர் இல்லை
ஆர்.கே.நகர் தேர்தலில் என்னை வெற்றிபெற வைக்கத்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் வேலை செய்கிறார் என நினைத்தேன். ஆனால் அவர் எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து தேர்தலை நிறுத்த தான் பணியாற்றினார் என பின்னர் தான் தெரிந்தது. புதுக்கோட்டை அமைச்சர் GOOD டாக்டர் இல்லை குட்கா டாக்டர் என்றே அழைப்போம்.

கைவிட்ட முதல்வர்
நான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு என்னுடைய குடும்பத்தினருடன் நடைபயிற்சி சென்றபோது, புதுக்கோட்டையை சேர்ந்த அமைச்சராக உள்ள டாக்டர் என்னை பார்த்து வணக்கம் வைத்தார். நானும் பதிலுக்கு வணக்கம் வைத்தேன். அப்போது விஜயபாஸ்கர், "என்னை முதல்-அமைச்சர் கைவிட்டு விட்டார்" என்று என்னிடம் தெரிவித்தார்.
இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.